Skip to main content

Posts

Showing posts from June, 2010

பிதற்றல்!

யதார்த்தப் பள்ளங்கள். கால் இடறி விழி பிதுங்கும் சம்பவச் சாக்கடைகள். முறைத்துப் போகிறது முறைதவறிப்போன மூங்கில் காற்று. ஊர்ந்து திரியும் மேகம் ஊர் மாறி வந்த கள்ளத் தோணி. புன்னகைக்கும் பூக்கள் கற்புள்ள கண்ணகிகளா? மாசற்றதாம் நிலவு! புணர்ச்சிப் பள்ளங்கள் புலப்படுவதில்லையா? மாலைச் சூரியன் மன்மதன் போலும்... கடலுடன் தான் அதற்குக் காதலுண்டே? பேப்பரும் இருந்து பேனாவும் கிடைப்பதால்... ஏதாவது, எதையாவது எழுத நினைத்து, இயற்கை, இலக்கணப் பாரம்பரியங்களை இதழ் மூடி முத்தித்து, பிதற்றிய பிலாக்கினங்களை கவிதை என மார்தட்டிக் கொள்ளும் திருகு தாளங்களுக்கெல்லாம் எங்குதான் இடமுண்டு? காதலைத் தவிர! . . .

இலகு தவணையில் மரணம்!

பகலொரு பொழுதும், இரவொரு பொழுதுமாய் இருமுறை சாக வேண்டும். சாவு.... யாரும் நிச்சயப் படுத்திச் சொல்லுங்கள்? முழுவதுமாய் வாங்குவேன். தவணை முறையில் என்றாலும்... குத்தகைக்குக் கூடக் கிடைக்காதா? நிலைக்குத்தாக அடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்துக்குள் எனக்கான சாவு ஒழிந்திருக்கிறதா? விரல்கள் வெளித் தெரியும் புதை குழிகளையும் தாண்டியாயிற்று. நைல் நதி பக்கத்தில் நீண்ட பள்ளத்திலாவது ஒழிந்திருக்கிறதா? ஒருவேளை சாவதற்கும் ஏதும் தகுதி வேண்டுமா? பரணில் ஒட்டடை கூடிய உப்புக் கண்டங்களுக்கு நடுவில்காய்கிறது மனமும், முதற்காதலும். முதற்காதல் - விதம் விதமாய் அழுதுத் தீர்த்த பிறகும் என்னை அலங்கரித்துப் பார்க்கும் தோல்வி! மனம் - ஒரு வித்தைக் காரியின் செப்படியில் சிதறிப்போனது. புதுப்பிக்க வழியில்லை. எப்போதுமே வாழத்தெரிந்தவன் ஒரு ஜாதி. வாழத்தெரியாதவன் மறு ஜாதி. யாராவது சொல்லுங்கள்? நான் எந்த ஜாதி? நித்தியங்களுக்குள் நிராகரிக்கப்பட்டு, வேதனைகளால் விரும்பி அணைக்கப்பட்டு வாழ்க்கை எட்டி உதைத்ததால் சாவை விரும்பி நிற்கிறேன். சாவதற்குத் தகுதி போதாதா? என் சாவை சில வேளைகளில்

அதிசயங்களின் அல்லிராணி

நீ நாணங்கொள்வதைச் சொல்லி விடுகின்றன மெல்ல விரியும் உன் ஓர்கிட் கண்கள். பல விதங்களில் பூக்கள்  உன் கூந்தலில்... முன்பை விட அழகு என்னவோ பூக்களுக்குத்தான். நீ பாரதியின் புதுமைப் பெண். இருந்தும், அவைகளைத் தீண்டுவதில்லை எனப்புலம்புகின்றன ஊனமுற்ற பட்டாம் பூச்சிகள். வாக்குப் போட்டு அதிசயங்களைத் தெரிகிறார்கள். உன் புன்னகையிலேயே அதிசயங்கள் மொத்தமும் அடங்கி விடும் என்பேன் நான். அம்மா ராசிபலன் பார்ப்பாள். நான் பார்ப்பதில்லை. நற்பலனாய் நீயிருக்க, அது எதற்கு? என் ஒரு கோடி ஞாபகத்துணிக்களும் நிரம்பிற்று. இன்னும் உன் நினைவுகளைச் சேர்க்க வேண்டும். உத்தி ஒன்றை உபயம் செய்யேன். என் காதலியே? . . .

விண்வெளியில் ஒரு காதல்

நீயொன்றும் அவ்வளவு அழகியல்ல. ஆனாலும் ஏதோ ஒன்று என்னையும் ஈர்க்கிறது. முன்னொரு காலம் லைலா - மஜ்னுவாக அல்லது ரோமியோ - ஜூலிஜட்டாக அல்லது சலீம் - அனார்கலியாயாவது நாம் இருந்தோமோ என்னவோ? இல்லாவிடின், கண்டங்கள் தாண்டி, கடல்கள் கடந்து, ஓசோனைத்  துளைத்து, விஞ்ஞானிகளாய்  நாம் விண்வெளியில் சந்திப்போமா? நீ சம்மதித்தால் சாட்சியாகக் காத்திருக்கிறது சந்திரன். . . .

பேசப்படப்போகும் ஒரு பெண்!

தாழ்த்தப்பட்டவன் நான் தான். ஆயினும் ஒட்சி ஏற்றப்பட்டது காதல். தெரிந்தே கொல்பவளே! இனியாகிலும் தெரிந்து கொள். உனக்காக தருவித்த, தரவிருக்கும் வார்த்தைகளின் கருவறை இதயம். பெண்கள் - சாம்ராஜ்யங்களின் அழிவுகளானமை உலக வரலாறு. எதிர்காலத்தில் பேசப்படப் போகும் ஒருசில பெண்களில் நீயும் ஒருத்தி. . . .

நெருங்கி உடையும் நட்சத்திரம்!

வெள்ளைப் பூ மட்டுமல்ல சிகப்புப்  பூவும் எதுவும் சொல்லாமலேயே வாடிக்கொண்டிருக்கிறது. மின் கம்பத்தில் உட்காரும் காக்கை  மீண்டுமொரு முறை பீச்சி விட்டுப் போகிறது. குளிர் பூசப்பட்ட காற்று  நாசிக்குள் நுழைந்து உடலில் ஒரு பகுதியில்  ஒட்டிக் கொள்கிறது. உரசிக் கொள்ளும் கிளைகளும்,  கிளையற்ற மரங்களும் புரியாத மொழியில்  பேசிக்கொள்கின்றன. வீட்டுப் பூனை  நகத்தைக்  கூர் தீட்டிக் கொல்கிறது! கூடு திரும்பியவை  எண்ணிக்கையில்  குறைந்திருக்க வேண்டும்!  விழுங்கிய சூரியனை  கடல்  இனிக் காலையில் தான்  துப்பும். கருப்பு மையை    வானில்  கரைத்துக் கொட்ட,  கிணற்றுள்  விழும் நட்சத்திரம் வழமைபோல நொருங்கி உடையும்.  மாலைப் பொழுது  இப்படியிருக்க, என்னுடைய டயரியில்  இது  இன்னுமொரு நாள். . . .

அந்தோக்கிழவி உபதேசம்

கிழவி :  சிங்கமென சிறுத்தை என  சீறிவரும் காளையென உன் ஒத்த பையன்கள் ஊர்க்கோலம் போகையிலே ஏனப்பா இச்சோகம்? விழியில் என்ன நீர்க்கோலம்? மீசை முளைத்த பையன் அழுவதுவோ வெட்கமையா, சொல்லிவிடு உன் சோகம் நானிப்ப உன் சொந்தம். பையன் : ஆடிமாச திருவிழாவுக்கு ஆத்தா கூட அவ வந்தா. பட்டணத்துக்காரி தான் பதுமையாட்டம் அழகாக. சிரிக்க சிரிக்க அவ பேச சில்லறையா சிதறிப்போனேன். உசிரெல்லாம் புல்லரிக்க மனசுக்குள்ள புகுந்துக்கிட்டா. காத்திருந்து காத்திருந்து காதலைத்தான் நான் சொன்னேன். கை கொட்டி அவ சிரிச்சா. கண்டபடி திட்டிப் புட்டா! கிழவி : ஒத்தைக் கை தட்டி ஓசை வராதுய்யா. மனசைக் கலைச் சுப்புட்டு மகிழ்ச்சியாதான் வாழப்பாரு. உனக்காக அவ ஒருத்தி எங்கேயோ ஒளிஞ்சிருக்கா. காலங்கடத்தாம ஒழைச்சுவை அவ வருவா! . . .

கண்களின் உரசல்!

சமீப காலங்களில் நீ என்னில் ஏற்படுத்திய தாக்கங்களை, உன் ஆரம்ப கால நடப்புக்களில் நான் அவ்வளவாக உணரவில்லை. குச்சிகளின் உரசலினால் பற்றிக்கொள்ளும் தீ. நம் கண்களின் உரசலினால் பற்றிக்கொண்டது - என்னுள் காதல் அன்பே! நிலவை விட்டு இரவு பிரிந்திருப்பது கொடுமையல்லவா? போன்சாய் மரங்களைப் போல உன் வீட்டுத் தொட்டியில் சிறையிருக்கவும் எனக்குச் சம்மதம் பெண்ணே! பதிலுக்கு காதல் தருவாயா? . . .

நீ, நான் மற்றும் காதல்!

ஒரு மழைக் கால மாலை வேளையில் காதலை சொன்னது வாய்ப்பாய்ப் போனது. எப்படி? கொடுமையான முழக்கம் கேட்டு பயத்துடன் என் மார்புக்குள் முகம் புதைத்தாய். எதிர் பார்க்காத அந்தக் கொலை இனிமையானது! இதயம் இயலாமல் போக, வார்த்தை தேடிய உதடுகளும் தோற்றுப் போனது. எனது அணைப்பும் உன்னை ஏதோ செய்ய , வெப்பம் உணர்ந்த உன்னை நனைத்தது நம் கண்ணீர். ஒரு காதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அற்புத வினாடிகளின் சாட்சியாக - நீ, நான் மற்றும் காதலைத்தவிர அங்கு யாரும் இல்லை! . . .

எயிட்ஸ் என் எதிரி !

டாக்டர் என்னைப் பார்த்த பார்வை சரியில்லை. "எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள் டாக்டர்"  நான் கேட்டதற்கு, சில நொடிகள் தாமதத்திற்குப் பின், என் கண்களைப் பார்த்தவாறு சொன்னார் " எப்பிடிப்பா? உன்னை நான் நல்ல பையன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படித் தப்புப் பண்ணி இருக்கிறாயே? சரி, செய்ததுதான் செய்தாய், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டாமா? இப்போதுபார்......" " என்ன டாக்டர் " கண்களில் அவசரம் ததும்பக் கேட்டேன். என் இரத்த மாதிரியை பரிசோதிக்கக் கொடுத்திருந்தேன். அதன் முடிவைப் பெறத்தான் வந்திருந்தேன். டாக்டர் என் அப்பாவின் நண்பர் வேறு.                   " உன் இரத்தத்தில் hiv இருக்கிறது. உனக்கு Aids "     திடுக்கிட்டு எழுந்தேன். கும் என வியர்த்திருந்தது. நான் கண்டது கனவுதான் என நிச்சயப்படுத்திக் கொண்ட பின்பு தான் நிம்மதியாக இருந்தது. அன்று முழுக்கவும் எனக்குக் கனவைப் பற்றிய சிந்தனை. நான் ஒழுக்கமான பையன். மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதில் எனக்கு சிறிதளவும் நாட்டமில்லை.  ஆனாலும் அந்தச் சம்பவம் தான் என்னை பதட்டப் பட வைத்தது. ஒரும

அட !

குழந்தை முழிக்கிறதே.... உன் மழலை கேட்டு ! . . .

டாவின்சியின் கோட்பாடு

வேலி ஓரத்தில் இரண்டு பட்டாம் பூச்சிகள். ஓ! நீ என்னை எட்டிப் பார்க்கிறாய். சிரிக்கிறாய் பின் செவிகளில் சிவக்கிறாய். எனக்குள் மன்மத மயக்கம். நீ - சுடிதார் அணிந்த சுனாமி. சுஜாதாவின் சொர்க்கத் தீவு. டாவின்சியின் கோட்பாடு. சுலைமான் அரசரின் வைரச்சுரங்கம். மௌனமான ராட்சஷி. கொஞ்சமாக வெட்கப்படும் மலை நாட்டு வெயில். எனக்கே உரிய எல்டோரடோ  ! . . .

அழகற்றவள்

அழகாக கருதப்படும் உன்னிடம் என் காதலைச் சொன்னேன். முறைத்தாய் பின் நெளிந்து சிரித்தாய். சில கேள்விகள் கேட்டாய்! கண்ணாடி பார்ப்பதுண்டா? நீ சிவப்பா? ஆறடியா உன்னுயரம்? கார், பைக் ஏதும் உண்டா? சில கேள்விகள் கேட்டாய்! அங்கவீனமாகப் பிறக்காததே அதிகம் என்றேன் நான்! அத்துடன் காதல் உயிர் நீத்தது சரிதானே? . . .

போதனை

வாழ்வியலை போதிக்க - உதிர்ந்து விழும் இலைகளும், மிதிபடும் சில பூக்களும்... போதாதா? . . .

களிமண் கவிதை

களிமண் தான்...! சிறந்த கலைஞனிடம் சிலையாகிறது. பகுத்தறிவாளனிடம் பாண்டமாகிறது. ஆபிரிக்காவிலோ பலருக்கு ஆகாரமாகிறது. பயனற்றுப் பரிதவிக்கும் பரிதாபமும் நடக்கிறது. நாமெல்லாம் களிமண் தான். . . .

இதயத்தில் ஆணி அடிப்பவள்

சிரிக்கும் வெள்ளையாடைப் பெண்களை  பார்க்கும் போதெல்லாம், பழைய புகைப்படம் போல் கறுப்பு வெள்ளையில் தோன்றி, ஆணியடித்து, இதயத்தை வலிக்கச் செய்கிறாயே! அது ஏன்? . . .

என் பிணங்களை மிதித்தவள்

உனது பெயர் கொண்ட பூந்தோப்பினுள், பூக்களை விடுத்து, முட்களை மிதித்து நடந்த போதிலும் சரி. சுவர்க்கம் என நினைத்து பாதாளச் சாக்கடையூடு தட்டுத் தடுமாறி குற்றுயிராக வந்தபோதிலும் சரி. சவக்காலையில் பாதி எரிந்தும் எரியாததுமான, உன்னால் வஞ்சிக்கப்பட்ட என் பிணங்களைச் சுற்றி இருந்து அழுதபோதிலும் சரி. காதலை ஒரு போதும் சபித்ததில்லை. காதல் - எந்தவொரு வேளையிலும் அற்புதமாகவே இருந்திருக்கிறது. உண்மையாக, இன்னும் உரத்து! இல்லாத கடவுளுக்கும், எங்கேயோ இருக்கும் அவளுக்கும் கேட்க வேண்டும்! காதல் - மிக மிக அற்புதமானது. காதலி... ஒருபோதும் அல்ல! . . .

சிக்குன்குனியா வேதனைகள்

என்னை கடுமையாகப் பார்த்தவள் நீ. இலகுவாக எழுதச் செய்தது காதல். கலண்டரில் வரும் அறிவுரைகள் இருக்கட்டும். எப்பொழுது என் கவிதைகளை படிக்கப் போகின்றாய்? இரவுகளில் இதய ராகம் விரும்பிக் கேட்கிறாய். சினிமாவில் காதலை இரசிக்கிறாய். நான் காதல் பேசும் போது மட்டும் ஏன் விலகிச் செல்கிறாய்? நீ மெழுகுவர்த்தி மீதே பாவம் கொள்பவள். என் அழிதலை எப்படி உன்னால் சகிக்க முடிகிறது? எப்போதும் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருப்பதாக புலம்பும் அம்மா எப்படி அறிவாள் காதலின் மரண அவஸ்தைகளை? ஏதும் பதிலை சீக்கிரம் சொல்லடி பெண்ணே. என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது மாய்த்துக் கொள்ள வேண்டும். . . .

பிரபஞ்சமும் காதலும்

பிற்பாடு சொல். எது பெரிது? பிரபஞ்சமா? அல்லது காதலா? பெரு வெடிப்பு நிகழ்ந்த போது பிரபஞ்சம் பிறந்தது. முதற் பெண்ணின் வருகையால் காதல் கருத்தோன்றியது. சிறுத்துப் பெருக்கிறது பிரபஞ்சம். காதலின் கோயில் இதயமும் அப்படித்தான். காதல் மட்டும் அங்கே கர்ப்பக்கிரகம். பிரபஞ்சத்தின் முதற் பிள்ளை பால்வீதி. காதலின் கைக் குழந்தை காமம். பிரபஞ்சத்தின் அலங்காரம் விண்மீன். காதலின் அலங்காரம் முத்தம். பிரமாண்டமானது பிரபஞ்சம். பிற பஞ்சமற்றது காதல். முடிவுள்ளது பிரபஞ்சம். முடிவிலியானது காதல். இப்போது சொல் எது பெரிது? . . .

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

பிரிதலின் பொழுது கொடியது !

தலையணையின் கீழ் பதுக்கி வைத்த உன் நினைவுகள் பஞ்சினூடாகக் கசிந்து என்னைத் தூங்க விடுவதேயில்லை. உன் பெயரைப் போலவே நீயும் அற்புதமானவள், ஆச்சரியமானவள். எனக்கு அப்படியல்ல! நீ எப்படியிருப்பாயோ என நினைத்தால் அது அபத்தம். நீ நலமாகவே இருப்பாய். நான் எப்படியிருப்பேன் என்று எப்போதாவது நினைப்பாயா ? காதல் வலியில் என்னை நானே காயப்படுத்தும் போதெல்லாம் ஒன்று கூட உன்னைப் பிரிந்த வலிக்கு ஈடாகவேயில்லை. மேகங்களை ஓட்டிச் செல்வது போல என்னையும் உன் அருகில் கொண்டு சேர்க்காதா இந்தக் காற்று - இனியாவது? என்காதலைத் தெரிந்த போது சிரித்தாயாம். கேலிக்குள்ளானது காதல். இன்னொரு முறை நட்பாய் சிரித்து என்னை ஏற்றுக்கொண்டாய்.... காதலையல்ல! பிரியும் வேளையில் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டோம். புன்னகையுடன் பிரிந்து சென்றாய். நான் அன்று முதல் புன்னகைக்க வில்லை. . . .

இலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் !

இந்தப் பதிவை நேற்றே எழுத வேண்டும் என நினைத் திருந்தேன். ஆனால் வேலைப் பளு  காரணமாக இப்போதுதான் எழுதக் கிடைத்தது. அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போச்சு. இலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் என நான் தலைப்பிடக் காரணம், நேற்று நடந்த ஆசியக் கோப்பைக்கான இந்தியாவுடனான இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோற்கும் என நண்பர்களுடன் பந்தயம் போட்டிருந்தேன். அப்படித்தான் இறுதியில் நடக்கவும் செய்தது. அதற்காக நானொன்றும் தீர்க்கதரிசி என்று அர்த்தமில்லை. அடிப்படையில் நான் இலங்கைக் கிரிக்கட் அணியின் தீவிர ரசிகன். தொடர்ந்து அவர்களின் விளையாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பதாலும் முடிவை என்னால் முன்னமே கணிக்கக் கூடியதாக இருந்தது. நான் மட்டுமல்ல, என்னைப் போல எந்தவொரு சராசரிக் கிரிக்கட் ரசிகனாலும் இத்தகையதொரு முடிவைக் கணித்திருக்க முடியும். காரணங்கள் :  சமீபத்திய வருடங்களாகவே இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே போட்டிகள் குறித்த ஒரு இடைவெளியில் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இரு அணிகளும் மாறி மாறி தத் தமது குறை நிறைகளை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. ஒப

மனசு

எமக்கு சில வேளைகளில் சிறகுகளும், சில வேளைகளில் சிலுவைகளும், இன்னும் சில வேளைகளில் போதி மரங்களும் தேவைப் படுகிறது. விடியும் பொழுதுகளில் கண்களின் கனவுகள் மதியம் வருவதற்குள்ளே வாடியும் போகின்றன. வெவ்வேறு கோணங்களில் தினம் ஒரு மனிதம். விமர்சன வீச்சுக்களால் வெந்துதான் போகிறது மனசு! மனசொன்றும் நகமல்லவே? வேண்டாத பொழுதுகளில் வெட்டி எறிவதற்கு. மனசின் பரிமாணங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்... முட்களை வெறுத்தால் ரோஜாவில் ஏது இரசனை? பயம், பாசம், காதல், காமம் என ஆட்டுவிக்கிறது மனசு ஆடுகிறோம் நாமெல்லாம்! . . .

பிறந்தநாள் வாழ்த்து

ஒரு சூரியன். கொஞ்சமாய் நிலவு. கொஞ்சும் பூக்கள். இதமான முத்தம்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெண்ணே ! . . .

காதலின் வெற்றி

தோற்றுவிட்டேன் பெண்ணே ! வானத்தில் தெரியும்  பொன்னிறப் புள்ளிகள்  முதலில் மங்கலாகி பின்னர் பிரகாசம் கூடி சற்றைக்கெல்லாம்  உன்னைத் தான்  நினைவு படுத்துகின்றன. . . .

காதல் சாமர்த்தியம்

வெற்றுச் சுவரிலும் நீ கவிதையில் சிரிப்பது காதலின் சாமர்த்தியம். . . .

தேவி தரிசனம்

கோபுர உச்சியில் வட்ட நிலவு. எனக்குத் தெரிவது உனது முகம். ஆவணியில் தானே திருவிழா ? எனக்கு மட்டும் நீ கோயில் வரும் ஒவ்வொரு முறையும். கோயில் முழுதும் பிரகாசமாய் நின்று ஒளிரும் நீ தந்த வருகை. தேவைகள் கருதித் தேங்காய் உடைப்பாய். அங்கங்கே சிதறிக்கிடப்பேன் நான். மூலஸ்தான பூஜையில் உன்னை நோக்கி கை கூப்புவேன். அர்ச்சனை ரசீதுக்கு உன் பெயரையே உச்சரிப்பேன். நீ மிச்சம் வைக்கும் குங்குமத்தை நாத்திகன் ஆனாலும் இட்டுக் கொள்வேன். பூஜை முடிவில் பிரசாதம் எதற்கு? பய பக்தியுடன் உன் பார்வைகளைப் பெற்றுக் கொள்வேன். தீபங்கள் அணைக்கப்பட்டு கோயில் பூட்டப்படும். நான் உன்னில் அனுமதிக்கப்பட்டு காதல் பற்றவைக்கப்படும். . . .

நியூட்டனின் ஈர்ப்பு விதி

நான் ஈர்ப்பு விதியை உணர்ந்தது இரண்டில். ஒன்று காந்தத்தில் மற்றது உன் கண்களில். பெண்கள் சிரிப்பது கூட இரண்டு வகையில் என்பேன். பாவப்பட்டு மற்றும் பழக்கப்பட்டு. கணித பாடத்தில் நீ கெட்டிக் காரியாமே ? சந்தேகம் கேட்கவென்றே முட்டாளாக முயற்சிக்கிறேன். தமிழ் பாடத்தில் கவிதை கேட்ட போது நீண்டதாகச் சமர்ப்பித்தாய். என்னைக் கேட்டால் உன் பெயரே போதும். உனக்குப் பிடித்த கலர் நீலமாமே ? அப்பாடா ! இதிலாவது ஒத்துப் போகிறதே ? எனக்குப் பிடித்தவர்களின் பட்டியலில் முதலாவதாய் நீதான். உனக்குப் பிடித்தவர்களின் பட்டியலில் கடைசியாயாவது நானுண்டா ? . . .

சில்லிட்ட மழையில் உன் நினைவின் கதகதப்பு !

மழை பெய்தால் மனசுக்குள் ஒரே உற்சாகம். உன்னைக் காணும் போதும் எனக்கு அப்படியே! மழை பெய்யும் போது சில்லென்று காற்று வீசும். வகுப்புக்களுக்கு வரும் போது சில்லென்ற காற்றாய் நீயேதான் வருவாய். வான வில்லில் உனக்கு ரொம்பவே இஷ்டம். துப்பட்டாவுக்கு எட்டாவது நிறமாய் என்னைக் கேட்பாய். மழை பெய்தவுடன் பளிச் என்றிருக்கும் தரை. நீ சம்மதித்தால் உனக்குத் தரையாகுமாம் மழை. மழை பெய்யும் போது வானில் வெட்டும் மின்னல். நீ சிரிக்கும் போது உன் உதட்டில் .... மழையில் நான் நனைந்தால் எனக்கு தடிமல் வரும் நீ நனைந்தால் மழைக்கே ! இளநீராய் தேனாய் உருமாறும் மழை. உருவ மாற்றமில்லா சிரிப்பால் கொல்வாய் நீ. அரை நொடியில் அனைத்தையும் நனைக்கும் மழை. ஆயுள் வரை உயிரை நனைப்பது உன் காதல். உணவு செய்ய உழவனுக்கு வேண்டும் மழை. உயிர் வாழ எனக்கு வேண்டும் நீ ! . . .

காதலை முன்னிட்டு ...

கண்ணாடி பார்க்கின்றேன். கண்களுக்குள்  உனது முகம். உனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனக்கு கோவில் வரும் உன்னில்  காதல் அதிகம். முன் வீட்டில்  முஸ்லிம் நண்பிகள், சிங்களச் சிநேகிதிகளும் உனக்குண்டு. சைவமாய் இருந்தும்  சர்ச் செல்வாய். உன்னைப் போலவே  எனக்கும் எம்மதமும் சம்மதம். இருந்தால் போல்  கூர்மையாகப் பார்க்கின்றாய். என்னவென்று  எடுத்துக்கொள்ள? வெறுப்பா?  அல்லது காதலா? தவழும் கூந்தலுக்கு  வூல் பான்ட் போடக்கூடாதா? பேதலிக்கிறதே மனசு. சுடிதாரில் மட்டுமல்ல  பாவாடை தாவணியிலும்  நீ பட்டாம் பூச்சிதான். உன் மணி பர்சில்  சில்லறை சிணுங்கும் என் மணி பர்சில் உன் சிரிப்புக்கள். உன் உதடுகள் படபடக்க, இதயமோ மௌனிக்கும். என் உதடுகள் மௌனிக்க  இதயம் தான் படபடக்கும். எதிர் காலம் பற்றி அதிகம் பேசுவாய். நான் பேசுவதில்லை. நீ தான் வேண்டும் என்று  நான் கேட்டால்  அனுமதிப்பாயா என்ன? . . .

ஒரு பதிவாளன் பேசுகிறான்!

தமிழ் பதிவுத் தளங்கள் இப்போது இணையத்தில் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. பதிவுகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதற்கிணங்க பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும், அறிந்த செய்திகளையும், தங்கள் சொந்தப் படைப்புக்களையும் பதிவுசெய்து அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றனர். அவற்றில் பல சிறப்பானதாகவும், பாராட்டத் தக்க வகையிலும் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இணையத்திற்குப் புதியவன் என்றாலும் , ( ஏனென்றால் எங்கள் ஊரிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் broadband எனப்படும் அதி வேக இணைய இணைப்பு வந்துள்ளது )குறிப்பிடத் தக்க அளவு தமிழ் பதிவுத் தளங்களைப் பார்வை இட்டுள்ளேன் . இவற்றில் களிப்பூட்டும் அதாவது பல்சுவை விடயங்களைத் தாங்கி வரும் பதிவுத் தளங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற பதிவுத் தளங்களாகக் காணப் படுகின்றன. பெரும்பாலான தளங்களில் முக்கிய உள்ளடக்கங்களாக சினிமாவும், அதைச் சார்ந்து புதுப் படங்களின் 'சுடச் சுட"  விமர்சனங்களுமே இருக்கின்றன. ( சினிமா பற்றி பதியாதோர் மன்னிக்கவும் ) இத்தகைய விமர்சனப் பதிவுகளே, நான் உட்பட, அதிகமாக விரும்பிப் படிக்கப் படுகின்றன என்பது மறு

பிரிவு !

ஒரு சிநேகமான  ரயில் பயணத்தின்  முடிவில்  நம் நகர்வு... நீ வலமாய், நான் இடமாய். கவலையே இல்லை. உலகம் சிறிது. . . .

ஏமாற்றம் !

கோடை முடிந்து வசந்தம் நோக்கிச் செல்கிறது இரயில். யாரையும் ஏற்றாமல்.... . . .

காதலைப் பாடுகிறேன் !

காதல் - நி ச்சயமாகவே ஒரு புது உலகம் தான். தன்னை மறந்து ,தனிமையை அழைத்து விம்மித் தீர்க்கும்.கனவிலும் அழவைக்கும், சாவைக்காட்டி வாழவைக்கும்.  விஞ்ஞான ஆராய்ச்சி யாளரையோ அல்லது விஞ்ஞானத்துடன் தொடர்பு பட்ட ஆசாமிகள் யாரையாவதோ தெருவில் கண்டால் சற்று விலத்தியே நில்லுங்கள். மறந்தும் கூட காதலைப் பற்றி அவர்களிடம் கேட்டு விடாதீர்கள்.  காதலைப்பற்றி அவர்கள் கோரசாகச் சொல்லக்கூடிய ஒரே பதில்  "காதல் ஓமோன்களின் கலக்கம்!".    ஹைதரசன், ஹீலியம், லிதியம் என்று காதலை இரசாயனத்துக்குள் அடைத்து விடும் ஆபத்தும் உண்டு! தனது இனத்தைப் பெருக்க, உயிரினங்களுக்காக இயற்கையே ஏற்படுத்திக் கொடுத்த வசதி தான் காதல் என்று, டார்வினைக் கூட துணைக் களைப்பார்கள்! பொதுவாகவே, தம்மால் நிரூபிக்க, விளங்கிக் கொள்ள முடியாதவற்றை பொய் என்று சொல்வதுதானே விஞ்ஞானத்தின் நடைமுறை வழக்கம்.  சிறு குழந்தையின் தவறை மன்னிப்பது போல் அல்லது எதிரியின் தூற்றலைக் கண்டு கொள்ளாதது போல் நாமும் இப்போது கொஞ்சம் காதலுக்குள் நுழைவோமா? உங்கள் நண்பர்கள் பெயரை சொல்லுங்கள் என்று முன் பின் தெரியாத ஆண் யாரிடமாவது கேட்டால், சுரேஷ், ரா