Tuesday, December 21, 2010

ஐயோ பாம்பூ!மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே கணினியின் சித்து விளையாட்டுப் புரிந்துவிடும். இப்படித் தான் சமீப காலமாக இலங்கையில், அதுவும் வட மாகாணத்திலே இது போன்ற மாய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பொக்கணைப் பகுதியில் பிடிபட்டதாகச் சொல்லி, photoshop மூலமோ அன்றி வேறு software  மூலமாகவோ வடிவமைக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தைப் பற்றி அதிகம் பேசப்பட்ட்டது. கீளே உள்ள படத்தைப் பார்க்கவும்.நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் உள்ள சூட்சுமங்கள் தெரிந்துவிடும். அட அட, என்ன அழகாக போட்டோவிற்குப் போஸ் கொடுக்கிறது பாருங்கள். “ என்னை அழகாகக் கிளிக் செய். நானுனக்கு வைரம் தருகிறேன்” என்று பாம்பு சொல்லியிருக்குமோ?

இப்படம் பொய்யானது என்பதற்கான காரணங்கள் :

* இப்படத்தில் காணப்படும் பாம்பின் நிழல் ஒருதலைப் பாம்பிற்குரியது.  (ஒருதலைப் பாம்பின் படத்தை எடிட் செய்திருக்கிறார்கள்)

*  இப்படம் (ஒரு தலைப் பாம்பு) தேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் என்பது அதன் தரத்திலேயே தெரிகின்றது.(இந்தப் பதிவில் இப்படத்தை இணைக்கும் போது அதன் தரம் சற்றுக் குறைந்து விட்டது ) டிஸ்கவரி நிகழ்ச்சிகளிலெல்லாம் பார்த்திருப்போம். அதேபோல காத்திருந்து, எந்த இடையூறும் இல்லாமல், உயர் ரக கமெராவால் எடுக்கப் பட்டிருக்கிறது என்பதனை, படத்தைப் பார்க்கும் போதே ஊகித்தறியலாம். சாதாரண கமெராவுள்ள தொலைபேசி மூலம் இப்படித் தரமாக படம் எடுக்க முடியாதல்லவா?

* இப்படி உண்மையில் இருந்திருந்தால், நம்மவர்கள் அதனை இப்படிச் சுதந்திரமாக விட்டிருப்பார்களா என்ன? மக்கள் கூட்டத்தைப் பார்த்தும், அவர்கள் போடும் கூச்சலைக் கேட்டும் அந்தப் பாம்பு பயத்தில் ஓடிவிடாமல் நின்று படத்திற்குப் போஸா கொடுக்கும்?


இனி உங்களுக்காக .....
இப்படத்தை உருவாக்கியவர்களை உண்மையில் பாராட்டத் தான் வேண்டும். மெத்தப் படித்தவர்களையும் கடவுள் பெயரால் கண்மூடித்தனமாக நம்ப வைத்தவர்கள் அல்லவா?
கற்பனைத் திறன் என்பது எம்மவர்களுடன் இன்று நேற்றல்ல, காலங் காலமாக, பல ஆயிரம் வருடங்களாக வந்துகொண்டிருக்கும் ஒன்று. பல கர்ண பரம்பரைக் கதைகளிலும், நூல்களிலும், இதிகாசங்களிலும் இல்லாத கற்பனைத் திறன்களா? ஆனால் என்ன அதனை இன்று வரைக்கும் கடவுளோடு சம்பந்தப் படுத்தி மீண்டும்,மீண்டும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் கவலை தரும் விடயம்.  நாளைய சந்ததியை இப்படியான மூட நம்பிக்கைகளுக்கு காவுகொடுப்பதோ அல்லது நல்ல அறிவியலை ஊட்டி அறியாமை எனும் களையை பிடுங்கி எறிந்து, ஊட்டமான சந்ததியை உருவாக்குவதோ நம் கைகளிலேயே உள்ளது.

அது வரைக்கும் எமக்கு அறிவியல் முன்னேற்றமென்பது மந்தகதியில் தான் அமையும்!
அதுவரைக்கும் பட்டினி கிடந்து உங்கள் கடவுளுக்கு உணவு படையுங்கள்!
அதுவரைக்கும் உங்கள் கடவுளைக் குளிப்பாட்டுங்கள், ஆடையுடுத்துங்கள், நகை அணிவியுங்கள், நகை களவு போய்விடும் என்று உங்கள் கடவுளைப் பூட்டுப் போட்டு பூட்டியும் வையுங்கள்!!

கிணற்றுத் தமிழா எப்போது வெளியே வரப்போகிறாய்???
.
.
.


Friday, December 17, 2010

மனதில் பட்டவைதுவும் நடக்கவில்லையே என்கிற யோசனையில் அதிகம் நகம் கடிப்பவரா நீங்கள்.?
அப்படியாயின் நல்லது.
நீங்கள் ஒன்றும் வீண் பொழுது போக்கவில்லை. உங்கள் நகத்தைச் சுத்தமாக்குவதில் நேரத்தை முதலிடுகிறீர்கள் என்று அர்த்தம்!

................................................................................................................................................................

ண்பர்கள் மேல் கோவமா? அவர்கள் கண்கள் பார்த்து, மௌனமாகத் திட்டுங்கள். நண்பர்களைப் பாராட்ட வேண்டுமா? நண்பனைத் தவிர மற்ற வர்களிடம் அவனைப் பற்றி சத்தமாகப் பாராட்டுங்கள்!

................................................................................................................................................................


லகமே நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்கிறார்கள். எனக்குத் தரப்பட்டது மோசமான கதாபாத்திரமோ என்னவோ!

................................................................................................................................................................


பெண்கள் பூக்களின் இதழ்களைப் பிய்த்துப் போடுபவர்கள். ஆண்கள் அழகானவற்றைக் கற்பழிப்பவர்கள். நான் இயற்கையை என்றென்றைக்கும் ஆராதிப்பவன். எனக்கு நண்பனோ அல்லது நண்பியோ இல்லை. 
நம்புங்கள்!

................................................................................................................................................................

ல்லோரும் பணத்தைச் சம்பாதிக்க ஓடுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!.  இன்னும் அதிகமாகச் சேருங்கள். உங்கள் சவப்பெட்டியை உயர்ந்ததாக்கவும், பூக்களால் அலங்கரிக்கவும் அது உதவும்!

................................................................................................................................................................


நிறையத் தோற்பதிலும் வசதி இருக்கிறது. தோற்பவர்களால் மட்டுமே தொடர்ந்தும் கற்றுக் கொள்ள முடிகிறது. வெல்ல ஆரம்பிப்பவர்கள் தான் கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்து விடுகிறார்களே!

................................................................................................................................................................


பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லையா? அழகிய, கலை வேலைப்பாடுள்ள மட்பாண்டத்தில் உள்ள வெறுமை மட்டுமே தெரிகின்றதா? எதன் மீதும் பற்று இல்லையா?
நல்லது.
ஞானம் பெற்றுவிட்டதாக ஞானிகளும், யோகிகளும் சொல்லக் கூடும். நம்பாதீர்கள்.
மரணத்திற்குத் தயாராகி விட்டதாக, ஒருவேளை psychologist சொன்னால் உடனேயே நம்புங்கள்.
.
.
.   

Tuesday, December 14, 2010

ஹலோ டயரி - 2


பாங்கும் வேலையும் :
பாங்கில் வேலை செய்பவர்கள் என்றவுடன் இந்த சமூகத்தால், ஏனென்றே தெரியாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சதா பணத்துடன் புழங்குகின்றார்கள் என்றோ அல்லது முற்றிலும் குளிரூட்டப்பட்டு, அழகுபடுத்தப் பட்ட அந்த விசாலமான அறையில் தங்களை வரிசையில் காக்க வைத்து கீபோர்ட்டில் என்னமாய் கிளிக்கு கிறார்களே என்ற பிரமிப்பிலோ தெரியாது.
உண்மையில் அதற்குப் பின்னுள்ள சூட்சுமங்கள் பலருக்குத் தெரிவதில்லை.

இப்படித்தான் தனியார் வங்கியொன்றின் தமிழ் பிரதேசக் கிளையின் பதவி ஒன்றிற்கு விண்ணப்பித்து, அவர்களின் அழைப்பின் பேரில் நேர்முகப் பரீட்சைக்குப் போய் இருந்தேன். ஆங்கில மொழியில் எழுத்துப் பரீட்சை வைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் நால்வரை அடுத்த கட்டத்திற்குத் தெரிவு செய்தார்கள்.
அடுத்த கட்டமென்பது ஒரு கண்னாடி அறைக்குள், தலை விரி கோலமாய் இருக்கும் வயதான பெண்மணி, தேவைக்கும் அதிகமாய் சிரித்தபடி, ஆங்கிலத்தில் அபத்தமாக கேள்விகள் கேட்பார், கேட்டார்.

முடிவுகளை அறிந்து கொள்ள மாலை வரச் சொன்னார்கள். சென்றேன். என்னைத் தெரிவு செய்ய வில்லை என்றார்கள். காரணம் கேட்டேன். சொல்ல மறுத்தார்கள். பரீட்சையில் தேறியவர்களில் மும் மொழிகளிலும் ஓரளவுக்காவது பரிச்சயம் கொண்டவன் நான் மட்டுமே என்பதை நினைவு படுத்தினேன்.
அவர்கள் கவரும் உடற்தோற்றத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள்!!

இதை அவர்கள் பத்திரிக்கை விளம்பரத்திலேயே சொல்லி இருந்திருக்கலாம்; சிகப்பான, கவரும் தோற்றமுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.  மீறி வருபவர்கள் அவமானப் படுத்தப் படுவார்கள் என்று!. அல்லது பரீட்சை எழுதும் போதாவது பரீட்சை தாளைப் பறித்து விட்டு,”இது பணம் படைத்தவர்களுக்கும், பகட்டுத் தனமானவர்களுக்குமான வேலை, பரதேசியான உங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை” என்றாவது அந்தப் பெண்களில் யாராவது சொல்லியிருக்கலாம். இப்படி கூப்பிட்டு வைத்து உணர்வுகளை நிர்வாணமாக்கத் தேவையில்லையே!!!    

பாங்கில் உட்காந்திருப்பவர்களைப் பாருங்கள் நிச்சயம் அதிகார வர்க்கங்களின் வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர்களின் தகுதியென்பது இங்கே இரண்டாம் பட்சம் தான். அதிலும் சிலர் பணம் கட்டி வேலையில் சேர்ந்து விட்டு அவர்கள் பண்ணும் அலப்பரை இருக்கிறதே! என்ன பெரிதாக வேலை பார்க்கிறார்கள், இலக்கங்களைக் கணினியில் பதிகிறார்கள், வெறும் இலக்கங்கள், பூச்சியங்கள்!! வாடிக்கையாளரைக் கவரத்தான் அழகானவர்களை வங்கிகள் விரும்புகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அப்படி இருப்பதில்லயே! வாடிக்கையாளர்களை எங்கே மதிக்கிறார்கள், அத்தனையும் அலட்சியம். திமிராக மட்டுமே பேசுகிறார்கள். அதிகார வர்க்கங்களின் அடி வருடிகள் என்கிற மமதை!!எமது ஊரில் இப்போதெல்லாம் அதிகமான தனியார் வங்கிகள் வரத் தொடங்கியுள்ளன. இப்போதெல்லாம் இங்கே அரசியலை அடுத்து அதிகமாகப் பேசப்படுவது; ஐந்து லட்ச ரூபாய் கட்டினால் அந்த வங்கியில் வேலை, நான்கு லட்ச ரூபாய் கட்டினால் இந்த வங்கியில் வேலை என்று.      

இப்படித்தான் ஒருவர் பத்து வருடங்களுக்கும் மேலாக தனியார் வங்கி ஒன்றில் நிரந்தரமானதாக இல்லாமல் வேலை பார்த்து வந்தார். அதிகார வர்க்கங்களின் அடிவருடிகள் புதிதாக நிரந்தரமான வேலையைப் பெற்றுக் கொண்ட போதும், இவர் புற்கக்கணிக்கப் பட்டே வந்தார். இத்தனைக்கும் அவர் மிக்க நேர்மையாளன், கடின உழைப்பாளி. இத்தனை வருட காலம் காத்திருந்தும் பலனளிக்காததால், மிகுந்த மன வேதனையுடன் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டார்.     

வங்கிகளுக்கு எப்போதுமே பணம் படைத்தவர்களும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் மட்டுமே முக்கியம். ஏனையோர் இரண்டாம் பட்சமே!
வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு ஆடம்பரமும், பகட்டுத் தனமுமே பிரதானமானவை. உழைப்பாளியின் வியர்வை மணம் அவர்களுக்குத் தேவையில்லாத விடயம் அல்லது அருவருக்கத் தக்க செயல்!
.
.
.

Friday, December 10, 2010

ஹலோ டயரி - 1I am back :
இரண்டு மாதங்களின் பின்னரான என் முதல் பதிவு இது. திரும்பத் திரும்பக் காதலையும், கவிதையையும் மட்டுமே எழுதி எழுதி , போரடித்து விட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள் “here  and there"  அதுபோல போனால் போகுது என்று , இரண்டு அல்லது மூன்று பேர் தினமும் என் வலைப் பதிவுக்கு வந்து போவார்கள். அவர்களை கொஞ்ச நாளைக்கேனும் எதுவித காயங்களோ அன்றி சேதாரங்களோ இன்றி இருக்கவைக்க வேண்டுமென்று கட்டாய ஓய்வெடுத்துக் கொண்டேன்.  
இதோ இப்போது வந்துவிட்டேன்!
Get ready for அறுவை!

முன் கதைச் சுருக்கம் (கொஞ்சம் serious ஆக) :
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கவிதை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக எழுதுகிறேனா இல்லையா என்று தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். கவிதையின் மேல் அப்படியொரு காதல். அதில் பல மன நிறைவைத் தந்திருக்கின்றன. பெற்ற குழந்தையை முதல் தடவையாக எதிர்பார்ப்புடனும், வாஞ்சையுடனும் பார்க்கும் தாயைப் போலத்தான் நானும் கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.

எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அது 1999ம் ஆண்டு. எனது முதல் கவிதை வானொலியில் ஒலிபரப்பப் பட்ட ஆண்டு. அப்போது லோக்ஷன் அண்ணா சக்தி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்(இப்போது அவர் ”வெற்றி” நாயகன்). அவரும் அஞ்சனனும், ஞாயிற்றுக் கிழமைகளில் என்று நினைக்கின்றேன், “சக்தியின் முத்துக்கள் பத்து” எனும் திரையிசைப் பாடல்களை தர வரிசயாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை நேயர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக வழங்கி வந்தார்கள். தாம் விரும்பும் பாடலுக்கு நேயர்கள் தபாலட்டை மூலம் வாக்களிக்க வேண்டும். கவிதையும் சேர்த்து அனுப்பலாம். வாக்குகளின் அடிப்படையில் பாடல்கள் தர வரிசைப் படுத்தப் படும். குறித்த பாடலுக்கான சிறந்த கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டு, வானொலியில் அது வாசிக்கப் படும்.    
அப்படித்தான் நானும் “அமர்க்களம்” படத்திலிருந்து “சத்தமில்லாத தனிமை.....” எனும் பாடலுக்கு “சத்தமில்லா தனிமையையும் யுத்தமில்லா உலகத்தையையும் கேட்ட மனிதா, இவை கிடைக்க வில்லை என்பதால்...” எனத் தொடரும் கவிதையை அனுப்பி வைத்தேன். எதிர்பார்ப்புடன் தான் இருந்தேன். அந்தப் பாடலின் முறை வந்தபோது (தர வரிசையில் முதலாமிடம்), லோக்ஷன் அண்ணா, என்னுடைய கவிதையை வாசித்த போது எனக்கு அப்படியே புல்லரித்து விட்டது. "Butterfly in stomach"   என்பார்களே, அப்படியொன்றை உணர்ந்தேன். பாடசாலையில் நண்பர்கள் பாராட்டினார்கள். இப்படி ஆரம்பித்த கவிதை எழுதும் ஆர்வம், படிப் படியாக வளர்ந்து, இன்று இப்படிப் புலம்பும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

இடையில், ஆர்வக் கோளாறில், “என் வழியில்...” என்னும் பெயரில், கவிதைப் புத்தகம் அச்சடித்தேன்.(மூன்றே மூன்று தான், அதற்கே அச்சகத்தார் ஆயிரம் ரூபாய் எடுத்தார்; என் தலயில் மிளகாய் அரைத்தார்) அதில் ஒன்றை, வவுனியா நூலகத்திற்கு மிகப்பெருமையாகக் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் ஏழ்மை நிலையால், நூலகர் என்னைப் பரிதாபமாகப் பார்த்த பார்வை இருக்கிறதே! என்னவொரு அவமானம்!!

பின்னர் தினமுரசு வாரமலரின் 700வது பதிப்பிற்கு, தேன் கிண்ணம் பகுதியில் கவிதைப் போட்டி ஒன்றை நடாத்தினார்கள். “காதலும் வாழ்க்கையும்” எனும் தலைப்பிட்டு அனுப்பி வைத்த என்னுடைய கவிதையும் அவ் வார மலரில் இடம்பெற்று ஆனந்த அதிர்ச்சி அளித்தது. அதற்குப் பின்னர் என்னுடைய பல கவிதைகள் தினமுரசிலும், சுடர் ஒளியிலும், மித்திரனிலும் வெளிவந்து கிச்சுக் கிச்சு மூட்டின.
இப்படியாக இன்று வரை என்னுடைய பரிசோதனைகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். அதில், சமீபத்தில் தொடங்கிய வலைப் பதிவு என்பது எனக்கு வெற்றிதான். இப்போது பார்த்தால் பத்து வருடங்கள் என்பது சற்று அதிகமாகத் தான் படுகிறது. இருந்தும் என்ன பயன். கவிதையால் ஒரு நன்மையும் நடந்து விட வில்லை.
”இவ்வளவு மட்டமா யாராவது கவிதை எழுதுவாங்களா?”  என்றாவது யாராவது சொல்லி இருக்கலாம்.....ஆனால்!.

மன விரக்தியில், வலைப் பதிவு கூட வேண்டாம் என்றுதான் கடந்த இரு மாதங்களாக ஒதுங்கியே இருந்தேன். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே, அதேபோல என்னாலும் சும்மா இருக்க முடியவில்லை.  
இதோ இப்போது மீண்டும் வந்து விட்டேன்.

இனி matter :
இத்தால் யாவருக்கும் தெரிவித்துக் ”கொல்” வது யாதெனில், 
கொஞ்ச நாளைக்கு கவிதை வேண்டாம் என்று இருக்கிறேன். (சந்தோக்ஷ சிரிப்புக் கேட்கிறது) “ பாவம். பொழைச்சுப் போ!”....
No more  matter, only குவாட்டர்!!!!
(குறிப்பு : கவிதையைத் தவிர, மது, மாது போன்ற இன்னபிற போதை தரும் விடயங்களை நான் நாடுவதில்லை. மேலே சொன்னது சும்மா ஒரு பஞ்ச்)
.
.
.