Monday, July 18, 2011

மைக்ரோ கவிதைகள் - 04
வெறுமை நிரம்பிய
தேநீர்க் கோப்பைக்குள்
விண்மீன்களை
வெறித்துப் பார்த்துக்கொண்டு
இருக்கிறேன் .....
*****

நிகழ்ச்சி நிரலின்
நேர அட்டவணையில்,
கண்ட இடத்தில்
கண்களால் சுடப்படும்
எனப் போட்டிருக்கிறாய் ....
காலையிலா? மாலையிலா?
சற்று
கணித்துச்சொல்!

*****

பிக்காஸோவின் ஓவியமும்
நீயும் ஒன்றுதான்.
இரண்டுமே 
கண்களுக்கு அழகானவை.
ஆனால்
புரிந்துகொள்ளல் கடினம்.
இரண்டையும்
அருகிலேயே
வைத்திருக்க நினைத்தல்
அதிகப் பிரசங்கித்தனம்.
*****உனக்குப் பிடித்தவர்களிடம்
உண்மையைச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள்.
உன்னைப் பிடித்தவர்களிடம்
எதைச் சொன்னாலும்
உடனே நம்புவார்கள் என்பது
நடைமுறை வழக்கம்.


*****சுதந்திரம் என்றால் என்ன?
அது -

கை விலங்கை
உடைப்பது அல்ல!
இறுகப் பூட்டியிருக்கும் 

கை விலங்கை 
மணிக்கட்டின் அசைவுக்காக
கொஞ்சம்
தளர்த்திப் பூட்டுவது.
அவ்வளவே!

*****
தசையைப் புணர்ந்து, 
தசையைப் புசித்து, 
தசையை வளர்ப்பது 
வாழ்க்கையல்ல.
போலிச் சாமியார்களிடம்
மாட்டிக் கொண்ட பெண்கள்
புலம்புவது
இப்படித்தான்.


.
.


Sunday, July 10, 2011

காதல் எனும் கடினப்பந்துஎனக்கருகில்
ஏகப்பட்ட மனிதர்கள்.
இருந்தும்,
இதயத்திற்கருகில்
உன்னுடன் சேர்த்து

ஒருசிலரே .....
உன்னை விட
யாராலும்
இவ்வளவு கச்சிதமாக
சுழற்றிப்போட முடியாது
காதல் எனும்
கடினப்பந்தை.


வெறி கொண்டமட்டும்
கடித்துக் குதறுமாம் 
வேங்கை.
பதுங்கியிருந்து
கழுத்தில் பாய்ந்து
நரம்புகள் வெடிக்க
பற்களைப் பாய்ச்சி
இரசித்துச் செய்யும் 
தன் உணவின்
கொலையை.
சிரித்துக் கொண்டே 
சொல்கிறேன்.....
காதலும் 
அதைத்தானே செய்கிறது.
எங்கே என்று
பார்த்து விட்டு,
உன் வார்த்தைகளுக்கு
இடையில் ஒட்டிக்கொண்ட
மௌனத்தில்
தன் சாமர்த்தியத்தை
காட்டிவிட்டு,
ஓய்வு நாற்காலியில் போய்
உட்கார்ந்து

கொல்கிறது காதல்!


.
.
.Friday, July 8, 2011

மைக்ரோ கவிதைகள் - 03காதலில் தோற்றவர்கள்
சாலைகளில்
தலைகுனிந்து செல்வதற்கும்,
உலகத்தின்
கடைசி மனிதனாக
தனித்து நிற்பதற்கும்,
நூற்றாண்டு சோகத்தை
புன்னகைத்து மறைப்பதற்கும்
காரணம் காதல் என்பார்கள்..........
உண்மை என்னவென்றால்,
"கசக்கும் வரம் வேண்டுமா?
இனிக்கும் சாபம் வேண்டுமா?"...
என்று எப்போதுமே கேட்கும் காதல்.
விருப்பப்பட்டு
சாபத்தை தேர்தல் .....
காதலின் குற்றமல்ல!*****
நமக்காகக் கட்டிய கோட்டை
இடிந்து விழுந்த போது
அதிலிருந்து
எந்தப் பீனிக்ஸ் பறவையும்
மீண்டும் பறக்கவில்லை!
மணற்கோட்டைகளில்
சிறகுகள் முளைக்காது
என்பது
அது இடிந்து விழும்வரை
யாருக்கும் புரிவதில்லை!!*****
பல பெண்கள் பார்க்கச் செய்கிறார்கள் ....
சில பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள் ....
நீ மட்டும் ஏன் என்னை
அழகாகத் தவிர்க்கிறாய்?
என்று கவித்துவமாக 
ஆரம்பிக்கும் 
ஒருதலைக் காதலர்கள்,
தங்களை பகுதிநேரக் கவிஞர்கள்
என்றே சொல்லிக்கொள்கிறார்கள்.
அவர்களின் காதல் 
எய்தப்படுவதில்லை என்பதையும் 
நேர்மையுடன் 
ஏற்றுக்கொள்கிறார்கள்.


*****
மின்மானி வாசிப்பாளர் வேலையில் 
தினமும்
சந்தோஷமும் அன்பும் 

செழித்துக் கொளிக்கும் 
ஏழை வீடுகளையும் பார்க்க முடிகின்றது.
சந்தோஷத்திலும் அன்பிலும் 

ஏழ்மையான 
பணக்கார வீடுகளையும் பார்க்க முடிகின்றது....
முன்னையவருக்கு மட்டுமே 

வாழ்க்கைக்கான 
சூத்திரம் தெரியும் போல...


*****
அவமானப் படுத்தியவரிடமும்
ஏன் அன்பாகப் பேசவேண்டும்
என்பது
நண்பனின் முறைப்பாடு.
எதிரியையும் வீழ்த்தவேண்டும் ...
அம்பால் அல்ல
அன்பால்!
அதுவே நல்ல கோட்பாடு.


*****
எல்லோருக்கும் உள்ளேயும் 
ஒரு சாத்தான் ஒளிந்திருக்கிறது.
அதை அடக்கி ஆள்பவனை 

நல்லவன் என்கிறோம், 
அவ்வப்போது வெளியே விடுபவனை 
சந்தர்ப்பவாதி என்கிறோம், 
சாத்தானாக மாறியவனை 
கெட்டவன் என்கிறோம் .....
நிச்சயமாக
நம் எல்லோருக்குள்ளேயும் 
ஒரு சாத்தான் 
ஒளிந்திருக்கவே செய்கிறது !
.
.
.