Monday, November 28, 2011

காதல் படிக்கட்டில்(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... )


ஆண் குரலில் :


காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பாரம்மா.
இந்தக் கவிதையைக் கேளம்மா...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொள்ளம்மா.


வகுப்புக்கு நீ வருவாய்.
என்னை விட்டு 
தூரத்தில் போய் அமர்வாய்.
இந்த இடைவெளி அளவு
குறையாவிட்டால்
கணிதமும் கசந்துவிடும்.


மலர்களை விரும்புகிறாய்
அதை முள்ளுடன் பறிக்கின்றாய்.
முள் நான், மலர் நீ
சேர்ந்தே இருக்கணும்
விளங்கிக் கொள்வாயா?இந்தக் காதல் தவிக்கும்படி
உன் கண்களும் பழிக்குதடி.
நிலவொளி என்பது
முற்றத்தில் விழுவது
கால்கள் மிதிப்பதற்கா?.


என் கூடவே வருகின்றாய்.
பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய்.
அதில் என் பெயர் கேட்டதும் 
உன் முகம் சிவந்ததை 
என்னிடம் மறைக்காதே!அடி வெல்வெட் துணித்துண்டே!
என்னை வெறுப்பதாய் நடிக்காதே!
உன் உதடுகள் சொல்வதும்
இதயம் நினைப்பதும்
நிச்சயம் ஒன்றல்ல.உன் கைவிரல் அணைப்பிற்குள்
தங்க மோதிரம் துயில்கிறதே...
அதில் உன் பெயர், என் பெயர்
உற்பத்தியானால் 
உயிரும் பூரிக்கும்.


என்னை ஏற்றுக்கொள்வாயா?
உன் மனசின் உரிமம் தருவாயா?
அடி ஈருடல் ஓருயிர்
உண்மையானால்
காதலும் சிறக்குமடி!

காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பார்த்தாயே.
இந்தக் கவிதையைக் கேட்டாயே...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொண்டாயா?
.
.Sunday, November 27, 2011

ஒரு தபுதாரனின் தவிப்புஎன்ன இந்த வாழ்க்கை 
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை 
காலனிடம் இழந்தவர்களுக்கு 
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லையா?


வேலை விட்டால் வீடு
வீடு விட்டால் வேலை என்று
சுருங்கிவிட்ட வாழ்க்கை.
நீ அதிகம் விரும்பிய
மழையையோ, மலர்களையோ
கடற்கரையையோ, காதல்பாடல்களையோ 
அனுமதிக்காத வாழ்க்கை.
வேலை நேரம் கழிந்து
எஞ்சிய வாழ்க்கையை
வீடு முழுக்க விரவியிருக்கும்
உன் அடையாளங்களும்
அவை கொண்ட 
நினைவுகளும் தின்கின்றன!
சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ
இன்னும் மோசம்
இன்னும் மோசம்!


காலையில் தரையிலிருந்து
என்னை எழுப்பிவிட்டு,
குளிக்கும் போதும், 
குடிக்கும் போதும்,
சமைக்கும் போதும், 
சாப்பிடும் போதும்,
துவைக்கும் போதும், 
உலர்த்தும் போதும், 
படிக்கும் போதும், 
சுவரை வெறித்துப்பார்க்கும் போதும்
கூடவே இருந்துவிட்டு...
பிந்திய இரவில் தவறாமல்
கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை.


நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில், 
ஆசையாய் மீட்டும் வயலின்,
நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள்,
மௌனத்தைப் பேசும் 
உன் சோடிக்கொலுசுகள்,
காதல் சொட்டச் சொட்ட
அனுபவித்து வாழ்ந்த
நம் அந்தரங்க அறையையும்
காலையில் எழுந்ததும்
திறந்துபார்ப்பேன்...
அந்த அறை முழுதும் 
நிறைந்திருக்கும் உன் வாசமும்,
உன் நினைவுகளில் கலந்திருக்கும்
இளஞ்சூடுமே
அன்று முழுவதும் 
என்னை உயிர் வாழச்செய்கிறன.


இப்போதெல்லாம்...
இன்னும் நீளாதா என ஏங்க வைத்து
விரைந்து மறைந்த மாலை வேளைகள்
நகரவே மறுக்கின்றன!
நீ அருகில் இருக்கையில்
இனிமையை அள்ளித்தெளித்த
பௌர்ணமி இரவுகள்... 
இரக்கமென்பதையே மறந்து விட்டன!


ஒரு தாயைப்போல பாசமாக 
தலை வருடி
என்னை மீண்டும் குழந்தையாக்குவாயே
அந்த கை விரல்கள் எங்கே?
நான் ஆசையாய் சாய்ந்து 
அங்கலாய்க்கும் தோள்கள் எங்கே?
என்னிடம் பட படக்கும் 
அந்தக் கண்கள் எங்கே?
என்னைச் சீண்டிப் பர்க்கும்
சிரிப்புகள் எங்கே?
அதோடு சேர்ந்து கொள்ளும்
வளையல்கள் எங்கே?
என்னைக் கடிந்துகொள்ளும்
உன் காதல் எங்கே?
என்னிடம் செல்லம் கொஞ்சும்
உன் காமம் எங்கே?
நெஞ்சில் புதைந்து ஆயிரம் கதைகள் பேசி
கொஞ்சிக் குலாவும் அந்த அழகு முகம் எங்கே?
ஆயுள் வரை என்னோடு
இருப்பதாக வாக்குத்தந்த
உன் வார்த்தைகள் தான் எங்கே?


இவற்றை எல்லாம் மறந்தா
உன்னை தீயில் இடச்சம்மதித்தேன்?
ஏன் சம்மதித்தேன்?
நீ பாதியிலேயே விட்டுச் சென்ற கோபத்திலா
அல்லது 
நீ மீண்டும் வருவாய் என்கிற நம்பிக்கையிலா?
பேசாமல் அந்தத் தீயிலேயே
நானும் பாய்ந்திருக்கலாம்,
என்னையும் மாய்த்திருக்கலாம்!
இப்போது
கோபமும் தோற்று
நம்பிக்கையும் தோற்று
நடைப்பிணமாய்ப் போயிற்றேன்!


என்ன இந்த வாழ்க்கை 
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை 
காலனிடம் இழந்தவர்களுக்கு 
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லை!

.
.
Saturday, November 26, 2011

தலைவன்


வசந்தம் வருகிறது
போகிறது...
வரட்சி வருகிறது
போகிறது...
தலைவன்
வருகிறான் போகிறான் ...
எப்போதும் போலவே
மக்கள் -
சிரித்து
அழுது
புசித்து
புணர்ந்து ...
வாழ்கிறார்கள்.
அவர்களில்
நல்லவர்கள், கெட்டவர்கள்
என்பதை
அவரவர் பசியின் அளவே
தீர்மானிக்கிறது.
ஆம் மக்கள் வெறும் மக்கள் தான்!


.
.

Friday, November 25, 2011

கவிதையல்ல!

உத்தரத்தில் தொங்கும்
பித்தளை வேலைப்பாட்டில்
மயங்குகின்றோம்.
கீழே மிதிபடும்
வைரங்களைக் கவனிப்பதில்லை...


*


இந்த உலகம் -
அழகானவர்களையே எப்போதும்
ஆராதிக்கின்றது.
அவர்களின்
மனங்களின் அழுக்குகள் 
மறைக்கப்படுவதால்...


அழுக்கானவர்களையோ எப்போதும்
அவமதிக்கின்றது.
அவர்களின்
மனங்களின் அழகுகளை
மறந்துவிடுவதால்!


*


வாழ்க்கை -
செதுக்கி வைக்கப்பட்டதென்று
யார் சொன்னது?
அது ஒரு 
அமைப்பற்ற கூழாங்கல்.
அதை அழகூட்ட முயற்சித்தல்
அபாயம் தரும்!
.
.

Monday, November 21, 2011

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் : 

வரமாய் வந்த 
தேவதை
நீ குறும்புகள் செய்யும் 
தாமரை!

ஈடன் தோட்டத்துப் 
பொன்வண்டு
நீ இதயத்தை அரிக்கும் 
சில் வண்டு!

கனவுகள் வரைந்த 
ஓவியம்
நீ கவிஞர்கள் படைத்த 
காவியம்!

மொட்டுக்கள் விழித்து
மலராகும்
உன் கூந்தலின் மென்மையை
களவாடும்!

**

வரமாய் வந்த 
தேவதை
நீ குறும்புகள் செய்யும் 
தாமரை!

ஈடன் தோட்டத்து 
பொன்வண்டு
நீ இதயத்தில் இனிக்கும் 
கற்கண்டு!

**

உன் உதட்டினில் பிறப்பது
சிறு கவிதை
அது உடனே மறைவது
பெருங்கவலை!

இரவுகள் வருவது 
எதற்காக?
உன்னால் பௌர்ணமி தோற்கணும்
அதற்காக!

**  

வரமாய் வந்த 
தேவதை
நீ குறும்புகள் செய்யும் 
தாமரை!

ஈடன் தோட்டத்து 
பொன்வண்டே
உன் இதயத்தில் எனக்கொரு
இடமுண்டா!

**

நதிக்குள் குதித்தது
நீர்வீழ்ச்சி
அதன் காதல் தோல்விக்கு
நான் சாட்சி!

உன்னருகால் உலகை
அழகாக்க
என் ஆயுள் முழுக்க
நீ வேண்டும்!


**  

வரமாய் வந்த 
தேவதை
நீ குறும்புகள் செய்யும் 
தாமரை!

ஈடன் தோட்டத்து 
பொன்வண்டே
உன் இதயத்தில் எப்போதும்
இடமுண்டே! *  *  *  *  * 
   

Saturday, November 19, 2011

உயிருக்குள் நனைகிறேன்
: ஆண் 
 இளந்தேனையும் பாலையும்
 கலந்து செய்துவைத்த
 சிலை நீயோ?

இதமாக இதமாக
  என் காதில் இனித்திடும்
இசை நீயோ?

*
காதலின் தூறலில்
        உன் கண்களின் ஈர்ப்பினில்
        விரல்களின் ஸ்பரிசத்தில்
          உயிருக்குள் நனைகிறேன்.


: பெண்
     காதலின் தூறலில்
        உன் கவிதையின் ஈர்ப்பினில்
        ஆண்மையின் ஸ்பரிசத்தில்
        உயிருக்குள் கரைகிறேன்.

*

 : ஆண் 
உன்னைப் பார்க்கையில்
     ஏனடி என் நெஞ்சில்
  இத்தனை படபடப்பு?

உன்னோடு பேசையில்
        ஏனடி என் உயிருக்குள்
   இந்த சல சலப்பு?

*

: பெண் 
      அருகினில் இருக்கிறாய்
        அவஸ்தைகள் செய்கிறாய்
        என்னையே பார்க்கிறாய்
        ஏதோ கேட்கிறாய்.

: குழு 
அருகினில் இருக்கிறாய்...
இருக்கிறாய்...இருக்கிறாய்.
        அவஸ்தைகள் செய்கிறாய்...
செய்கிறாய்...செய்கிறாய்.
        அவளையே பார்க்கிறாய்
        என்ன தான் கேட்கிறாய்.

*

: ஆண்
அதை நான் சொல்லவா?
அதை நான் சொல்லவா?
      சொல்லாமல் செல்லவா?
 சொல்லாமல் செல்லவா?
: பெண்
சொல்லவே விரும்பினேன்.
            சொல்லாமல் செல்கிறேன்.

*

: ஆண்
இதுதான் காதலா?
: பெண் 
இளமையின் மோதலா?
: ஆண்
இருவரின் குழப்பமா?
: பெண் 
இதற்கில்லை மோட்சமா?

: குழு 
இதுதான் காதலே.
        இளமையின் மோதலே.
       உங்கள் இருவரின் குழப்பமே.
        இதற்கில்லை இங்கு மோட்சமே.


: குழு 
இதுதான் காதலே.
        இளமையின் சாதலே.
      இரு உயிர்களின் குழப்பமே.
        இதற்கிணையில்லை எதுவுமே!


லலலா லாலலே
லலலல லாலலே
லல லலலல லலல்லே...


டுடு டூ டூடுடு
டுடுடுடு டூடுடு
டுடு டுடுடுடு டுடுட்டுடூ.


* * * * *

Thursday, November 17, 2011

ஹைக்கூவும் விளக்கமும்
நான் எழுதிய சில ஹைக்கூக்களிற்கான விளக்கங்களை என்னுடைய கோணத்திலிருந்து தர முயற்சிக்கின்றேன். எங்கே வேண்டுமானாலும் தோன்றலாம் ஹைக்கூ. முற்றத்தில், சாலையில், பூங்காவில்,கடற்கரையில், சினிமாவில், காதலியின் மடியில் ... இப்படி எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு ஹைக்கூவிற்கு இதுதான் சரியான விளக்கம் என்று எதுவும் அமைந்து விடாது. வாசிக்கும் நபர், அவருடைய மனநிலை, அவருடைய வாழ்க்கைச் சூழ்நிலை என்பவற்றைப் பொறுத்து ஒரு ஹைக்கூவினுடைய விளக்கமும் மாறுபடக் கூடியதாக அமையும். நான் தரும் விளக்கத்தில் இன்னொருவருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் அல்லது திருப்திதராமல் விடலாம்; திருப்தி தராது விட்டால் நல்லது. ஹைக்கூவின் தனித் தன்மையே அதுதானே!


1.
கிணற்றைப்போல்
தொட்டிக்குள்ளும்
நிலவு.

விளக்கம் :
அது பௌர்ணமி நிலவு தோன்றும் இன்னுமொரு பிரகாச இரவு. கிணற்றருகில் நின்றுகொண்டு வானம் பார்க்கிறேன். அடடா! என்ன அழகு. அந்த அழகியை தன் அருகினில் வைத்துக் கொள்ள, முப்பது நாட்களாய் வானம் தவமிருப்பது, நிச்சயம் தப்பில்லை. இயல்பாக கிணற்றுக்குள் பார்க்கிறேன், அங்கேயும் நிலவு இன்னும் அழகாய். அருகிலிருக்கும் தொட்டிக்குள்ளும் பார்க்கிறேன், அட! அங்கேயும் நிலவு.  தொட்டியின் நீரைத் திறந்து விட, வாய்க்கால் வழியாக நழுவிச் சென்ற நிலவை சட்டென உறிஞ்சிக் கொண்டது வாழைமரம். முழு நிலவிற்காக முப்பது நாட்கள் தவமிருப்பது வானம் மட்டுமல்ல!2.
முத்தமிட்டாள் காதலி.
எழும்பவேயில்லை
பிணம்.

விளக்கம் :
அது ஒரு கப்பல் விபத்து. அழிவே கிடையாது என்று இறுமாப்புடன் கூறப்பட்ட கப்பல், பனிப் பாறையுடன் மோதுண்டு, இரண்டு துண்டாய் உடைந்தே போனது. உறைய வைக்கும் குளிரில், கடலுக்குள் வீசப்பட்டார்கள் அந்தக் காதலர்கள். காதலன் அக் கப்பலின் மேற் தள வேலைக்காரன், காதலி அங்கே சமையல் செய்பவள். நடுங்கிக் கொண்டிருக்கும் காதலியை, மிதந்து வந்த பலகையில் ஏற்றி அவளைக் காப்பாற்றி விட்டு, அந்தக் குளிரை தாங்க முடியாது உறைந்து சாகிறான் காதலன். கண் விழிக்கும் காதலி, காதனை அன்புடன் முத்தமிடுகிறாள். ஆனால், அவன் எழும்பவேயில்லை! அவர்களது காதல் அற்புதமானது. அவர்களது பெயர் எதிலும் குறிப்பிடப் படவுமில்லை, யாருக்கும் தெரியவுமில்லை. ஆனால் அந்தக் கப்பலின் பெயர் ’டைட்டானிக்’ காக இருக்க வாய்ப்புள்ளது.3.
விபச்சாரி விரும்பவில்லை.
பல நிறங்களில்
ரோஜாச்செடி.

விளக்கம் :
அவள் ஒரு விபச்சாரி, இரவுத் தொழிலாளி. பகலில் வாழ்வதற்காக இரவில் தன் ஆடை அவிழ்ப்பவள். இரவுகளில் அவள் கசக்கப்படுகிறாள், கடிக்கப் படுகிறாள். சாராய நாற்றம் கொண்ட பற்களால் அவள் உதடுகள் தின்னப் படுகின்றன. அவள் அவற்றை விரும்புவதில்லை.  அவளிடம் வரும் எல்லோரும் அவளுக்கு ராஜாதான். ஆனால் எந்த இரவு ராஜாவாலும் அவள் மனுசியாக மதிக்கப்பட்டதில்லை. அவள் மன்மத பீடத்தில் கவனம் கொள்ளும் ராஜாக்களுக்கு அவள் மனதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பகலில் மட்டுமே அவள் தன் இக்ஷ்டம் போல வாழ்கிறாள். அவளுக்கு ரோஜா வளர்க்கப் பிடிக்கும். அவை அவளை தொந்தரவு செய்வதில்லை.ஒரு நிறத்தில் தான் அத்தனையும் பூக்கின்றன. பல நிறங்களில் உள்ள ரோஜாவை அவள் ஏனோ விரும்பவில்லை!4.
சுதந்திரதின விழாவில்
வழங்கப்பட்டது
கூண்டிலடைத்த வெண்புறா.

விளக்கம் :
அவ்வருட சுதந்திரதின விழாவை, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகியை, விழா நாயகனாக முன்நிறுத்தி நடாத்திக் கொண்டிருந்தது ஒரு தனியார் நிறுவனம். தியாகியின் சேவை போற்றப்பட்டது, புகழப்பட்டது. விழா முடிவில், வந்திருந்த அனைவருக்கும் பரிசாக கூண்டிலடைத்த வெண்புறா அத்தியாகியின் கையால் பெருமையுடன் வழங்கப்பட்டது. புறா சலனப்படவில்லை. பழகிவிட்டது!  5.
கண்ணாடியில்
அழகி விம்பம்.
எதிர்காலப் பிணம்.

விளக்கம் : 
அழகு என்பதே உடற்பொலிவுதான் என்று ஆகிவிட்ட காலமிது. உடல் அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் அக ஒழுக்கத்திற்கு கொடுப்பதில்லை. அந்தரங்க உறுப்புகளின் அளவிற்கும், அமைப்பிற்கும் இருக்கும் சலுகையில், மனதின் ஆழம் அடிபட்டுவிடுகிறது, அங்கீகரிக்கப் படுவதில்லை. கறுப்பென்றால் முகத்தை சுழித்து அருவருக்கும் பெண்களுக்கு (தங்களை அழகிகளாக நினைத்துக் கொள்ளும்) இந்த நாட்டில் பஞ்சமும் இல்லை. அழகு என்பது நிலையானதல்ல, அது ஆபத்தானதும் கூட என்று அவர்கள் உணர்வதற்குள்..........sorry, it's too late. அழகிகளாக இருப்பவர்கள் மூப்படைந்து, தசைகள் சுருங்கி, இறுதியில் இறந்தும் போகிறார்கள். ஆமாம், எங்கே போனது அவர்கள் அழகு?


* * * * *


Thursday, November 10, 2011

என் முற்றத்துக் கவிதைகள் - 2ஹைக்கூ பகுதி - 2 அனைவரையும் வரவேற்கின்றது. ஹைக்கூ பகுதி - 1 ற்கு இங்கே சொடுக்கவும். http://theruppaadakan.blogspot.com/2011/11/blog-post_07.html  . 

ஹைக்கூ என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரக்கூடியது. ஏதோ வாசிக்க வேண்டும் என்றெல்லாம் வாசிக்கக்கூடாது. அப்படி வாசித்தால், வெறும் வார்த்தைகளாக மட்டுமே கண்ணுக்குத் தெரியும், எதுவும் புரியாது. ஹைக்கூவை மனதால் வாசிக்க வேண்டும். உண்மையில் ஹைக்கூ என்பது பூந்தோட்டத்தில் வீசும் மெல்லிய, இதமான சில்லென்ற காற்றை சுவாசிப்பதைப் போல சுகமான ஒரு அனுபவம். அதனை மெதுவாக, ரசித்துச் சுவைக்கும் போதுதான் அதன் வசீகரத் தன்மையை உணர முடியும். 

தவறாமல் தோற்கடிக்கிறது
எல்லோரையும் 
வயிறு.


**


தாய்ப்பாலை
விற்றாள்.
குழந்தைக்கு உணவு.


**


இரவிலும்
குளிக்கின்றாள்
முதிர்க்கன்னி.


**


விளக்கைப்
பற்றவைத்தாள்.
கட்டுமரத்தின் அசைவு.


**


கால மாற்றம்.
பேரூந்தில்
ஜன்னல் தவிர்த்தது.


**


கலைந்தது வானம்.
கிணற்றுக்குள் 
வாளி.


**


பூனைப் படத்தை
கொறித்துப்போட்டது
எலி.


**


பேசும் பொம்மை
வைத்திருந்தான்
ஊமைப்பையன்.


**


இருட்டுப் பாதையில்
வழிசொன்னது
அனுபவம்.


**


சிகரட்டில்
இல்லையே
எச்சரிக்கை வாசகம்!


**


உடைந்தது வானவில் 
கையில்
சோப்பு நுரை.


**


தலை 
குனிந்தது
சலூன் கண்ணாடி.


**


பலகாரப் பரிமாற்றத்தின் 
பின்னர்
விலைபேசப்பட்டாள்.


**


சுவற்றில்
கோலம் போட்டது
மழைச்சாரல்.


**


பாலுக்கு அழுதது
விபச்சாரியின்
குழந்தை.


**


குழந்தைப் படங்கள்.
குழந்தை
இல்லாத வீட்டில்.


**


முற்றத்து வெள்ளத்தில்
மூழ்கியது 
கப்பல்.

**


இருட்டியதும்
பூத்தன
மின்மினிப் பூச்சிகள்.


.
.
Monday, November 7, 2011

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://en.wikipedia.org/wiki/Haiku (நன்றி விக்கிபீடியா)


தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக வகுத்திருப்பார்.
அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-

  1.  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும்.
  2. மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும்.
  3. முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும்.
  4. முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும்.
  • ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம்.
  • அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்திற்கும் உள்ளடங்கக் கூடியது. ஆனால் உள்ளடக்கத்தில் நகைச்சுவையையும், மனித இயல்பு பற்றியும் பிரதானமாகக் கூறவேண்டும்.


என்பதே அவர் வகுத்த இலக்கணமாகும். இதை விட சிறப்பாக யாராலும் விதிமுறைகளை வகுத்து விட முடியாது. எனவே தமிழில் ஹைக்கூ எழுதுபவர்கள் சுஜாதா அவர்கள் வகுத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதுவதே ஒரு மகத்தான படைப்பாளிக்கு நாம் செய்யும் தகுந்த மரியாதை ஆகும்.


*
**
***
**
*இனி என்னுடைய ஹைக்கூ மற்று சென்றியு கவிதைகள் ......


வாடவில்லை. 
மேசையில் 
கடதாசிப்பூக்கள்


*

விதைக்காமல்
பழுத்தது
நிலவு


*


தினம் புலம்பெயர்வால்
முகவரி தேடுகிறது
மேகம்


*


நாய்கள் குரைக்கவில்லை.
பாதையில்
இராணுவம்


*


சாயம் போகாமல்
நனைந்தது
வானவில்


*


ஏன் உடல் இளைத்தாய்?
வயதான 
கருவாடே!


*


கண்ணாடியில்
அழகியின் விம்பம்.
எதிர்காலப் பிணம்!


*


எதிரிக்கு வாழ்த்து அட்டை.
ஒட்டவில்லை
முத்திரை


*


முத்தமிட்டாள் காதலி.
எழும்பவேயில்லை
பிணம்


*


பச்சைக் குழந்தை போல்
உள்ளாடை அணிவதில்லை
வெங்காயம்


*


என் மனத்திரையில்
உன் நினைவலைகளாக
காதல்


*


ஒரு காலை வேளை
பல் துலக்கப்பட்டது
சீப்பு


*


சுதந்திரதின விழாவில் 
வழங்கப்பட்டது
கூண்டிலடைத்த வெண்புறா


*


சீக்கிரம் எழுந்து கொள்.
இன்றுனக்கு
தூக்கு.


*


உலக வர்த்தக மையம் முன்னால்
என்னைக் கைது செய்தது
உன் புன்னகை


*


இடுப்பைப் பிடிக்கையில்
சிலிர்க்காதே
வெண்டிக்காயே!


*


சட்டெனக் குதித்தது
நதிக்குள்
நீர் வீழ்ச்சி


*


விபச்சாரி விரும்பவில்லை
பல நிறங்களில்
ரோஜாச் செடியை.


*


கிணற்றைப்போல் 
தொட்டிக்குள்ளும்
நிலவு.


*


ஓ நயாகரா!
என்னை நனைத்தது
கண்ணீர்.

.

  
  

Sunday, November 6, 2011

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :
ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.

பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது.

ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே!

நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கிடைப்பதாலும், ஆங்கிலத்தில் பேசுவது மேல் தட்டு மக்களால் நாகரீகமாகக் கருதப்படுவதாலும், அங்கே ஆங்கில மொழியின் பிரயோகம் தரமானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதற்காக, நகரங்களில் வாழும் எல்லோருமே ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள் என்று அர்த்தமும் இல்லை. 

இதை விட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆங்கிலத்தின் நிலை இன்னும் மோசம். இவற்றுக்கான காரணங்களில் முக்கியமாக இருப்பது யாதெனில், ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அதனை இன்னுமொரு மொழியாகவே பார்க்கின்றனர். ஆனால் ஆங்கில மொழி தெரியாதவர்களோ அதனை ஒரு உன்னத திறமையாகவே பார்க்கின்றனர். அது மிகவும் பிழையான ஒரு கருதுகோள். மொழி என்பது கண்டுபிடிக்கப் பட்டதே தொடர்பாடலை இலகுவானதாக ஆக்குவதற்கு மட்டுமே. 
ஆங்கிலம் கற்பதில் உள்ள அடிப்படைத்தவறு :


நன்றாக ஞாபகப்படுத்திப்பாருங்கள், உங்கள் தாய் மொழியை அது எதுவாக இருப்பினும், உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு கற்க ஆரம்பிக்கின்றீர்கள்?

ஆம், முதலில் அந்தமொழியைக் கேட்பதன் மூலம் (Listening) அந்த மொழியுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள். பின்னர் கேட்ட வார்த்தைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சொல்லாக, மழலை மொழியில், பல வேளைகளில் தவறுதலாகவும் பேச ஆரம்பிக்கின்றோம் (Speaking). பின்னர் எழுதவும் (Writing), இறுதியாக வாசிக்கவும் (Reading) பழகுகின்றோம். அதுவே ஒரு மொழியைக் கற்பதற்கான இயல்பான முறையாகும். அதனால் தான் எமது தாய் மொழியில் எம்மால் அவ்வளவு பரிச்சயமாக இருக்கமுடிகின்றது. ஆனால் ஆங்கில மொழியையும் நாம் அப்படித்தான் இயல்பாகக் கற்கின்றோமா என்றால், பெரும்பாலும் அதற்கான பதிலை இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் நாம் ஆங்கிலத்தை மிகப்பிழையான முறையிலேயே கற்கின்றோம் முக்கியமாக கற்பிக்கப்படுகின்றோம்.


ஆங்கிலமொழி கற்றல் மற்றும் கற்பிற்பதில் உள்ள மேலதிக தவறுகள் :


ஆங்கிலம் பேச வேண்டும் என்கின்ற ஆசையில், தனியார் கல்வி நிறுவனங்களின் அதீத விளம்பரங்களில் ஏற்படும் ஈர்ப்பின் காரணமாக, அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி Spoken English Class களில் போய் சேர்ந்து கொண்டு பணத்தை வாரி இறைக்கின்றோம். அங்கே கற்பிக்கப் படுவதெல்லாம் English Grammar மட்டுமே. 
(எத்தனை பேர் ஆங்கில ஒலி உச்சரிப்பு முறைகள் பற்றிச் சொல்லித்தருகின்றனர்?) படித்து முடித்து வெளியே வரும்போது, எத்தனை பேர் ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களாக வெளியே வருகின்றோம்?

இந்த நிலைக்குக் காரணம் ஒன்றுதான். அதாவது ஆங்கிலத்தை நாம் தலை கீழான முறையில் கற்கின்றோம். Listening > Speaking > Writing > Reading என்ற வரிசையில் கற்காமல், பெரும்பாலும் Writing மற்றும் Reading உடன் நிறுத்திக்கொள்கின்றோம். ஆங்கிலத்தை செவிமடுத்துக் கேட்பதும் இல்லை, பேச முயற்சிப்பதும் இல்லை. பின்னர் எப்படி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது?? 
ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவும், அவ் அழகான மொழியை சிறப்பாகப் பேசவும் அடிப்படை வழி முறைகள் மிகவும் முக்கியம். 


ஆங்கிலத்தை கேட்பதற்கும், பேசுவதற்குமான பயிற்சி முறைகள் (சொந்த அனுபவத்திலிருந்து) :

* நல்ல தரமான ஆங்கில அகராதியை சொந்தமாக எப்போதும் கூடவே வைத்திருங்கள். அதன் மூலம் தினம் குறைந்தது பத்துப் புதிய சொற்களாவது அறிந்து கொள்ளுங்கள். இதற்காக English to Tamil அகராதியை விட English to Tamil அகராதியே பயன் அதிகம் தரக்கூடியது.

* விளையாட்டு வர்ணனையை செவிமடுத்துக் கேட்கலாம். (உங்களுக்கு எதிராக நிறைய விமர்சனம் வரும். Never Never Give Up)
உதாரணமாக கிரிக்கட் வர்ணனை. இதன் மூலம் பல புதிய அழகிய வார்த்தைகளைக் கேட்கலாம்.அர்த்தம் புரியாவிட்டால், அகராதியின் உதவியுடன் அவ் வார்த்தைகளின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். 
அத்துடன் ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் (English pronunciation), எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம்.  எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதற்கு சரியான உதாரணம் - சனத் ஜெயசூரியா.

* சிறுவர்களுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள், கார்டூன்களை ஆழ்ந்து கேட்டல். (கிண்டல் செய்வார்கள். Never Mind It )

* Discovery போன்ற Channelகள், News Channelகள் மற்றும் ஆங்கிலப் படங்களை Sub Title உடன் பார்த்தல். 

* ஆங்கில செய்தித்தாள்கள், ஆங்கில சஞ்சிகைகள், ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் என்பவற்றை தெளிவாக உரத்துப் படித்தல். 

* உங்களுக்குள் நீங்களேயோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ ஆங்கிலத்தில் கதைத்துப் பழகலாம். பிழைகள் வரும்; வந்தால் நல்லது, ஏனென்றால் நீங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. முயற்சி செய்கின்றீர்கள்! 

* On line இல் கிடைக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி நெறிகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.மேலே குறிப்பிட்டவை யாவும் நான் கடைப்பிடித்த வெற்றிக்கான வழி முறைகள்.ஆங்கில இலக்கணப் பயிற்சி முறைகள் பற்றிக் குறிப்பிடாததற்கு முக்கிய காரணம், ஆங்கிலம் என்றாலே நாம் முதலில் இலக்கணத்தைத் தானே படித்துத் தொலைக்கின்றோம்!.  இவற்றை விடவும் இன்னும் பலவும் இருக்கலாம். இவற்றை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும் என்று நினைக்கின்றேன். இவை எல்லா வற்றையும் விட முக்கியம் முயற்சி! விடா முயற்சி!!
ஆங்கிலத்தில் ஒரு அறிஞர் சொன்னார் : Hard work is a best investment a man can make என்று. அதாவது ஒரு மனிதனின் சிறந்த முதலீடே அவனது கடின உழைப்புத்தான் என்று. 

ஆங்கிலம் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்? இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை. முயற்சி செய்யுங்கள்; வெற்றி நிச்சயம்! ஏனென்றால் நான் A/L இல் ஆங்கிலப் பாடத்தில் B தரத்தினைப் பெற்றவன். ஆனால் அது ஒன்றும் சும்மா வந்து விட வில்லை. முதல் முறை F இனைப் பெற்று, பின்னர் கடின முயற்சியாலேயே B பெற்றேன் என்பதை வெளிப்படையாக, நேர்மையாகவும், பெருமையுடனும் கூறிக்கொள்கிறேன்.  முயற்சி செய்யுங்கள்!! 


:-D