Sunday, February 19, 2012

கேடுகெட்டவர்களின் காதல்!அவன் பார்த்தான்.
அவள் சிரித்தாள்.
அப்போது பிறந்ததை காதல் என்றுதான்
அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்!


கடற்கரையில் ஒன்றாக
கால் நனைத்தார்கள்.
வகுப்பறையில் தனியாக
முத்தமிட்டுக் கொண்டார்கள்.
பூங்காவில் மெய்மறந்து
அணைத்துக் கொண்டார்கள்.


இரவுப் பேரூந்தின்
இறுதி இருக்கையில் ஒருநாள்
எல்லை மீறினான் அவன்.
ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி 
வியந்தாள் அவள்.
ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி
பித்துப்பிடித்தான் அவன்.
அவளோ தவித்தாள்!
தடுக்கவும் மனமில்லாமல்,
அனுமதிக்கவும் முடியாமல்
அவள் தவித்தாள்,
உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள்.
அவனோ வேண்டுமென்றே 
மிச்சம் வைத்தான்!
அப்போது 
அவர்கள் இருக்கை முழுவதும் 
நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்!


மறுநாள்,
உபத்திரவமற்ற 
ஹோட்டல் அறையில்,
காதலின் பெயரால் 
அவள் ஆடை களைந்தாள்-
உலகத்தின் சார்பாக
ஒளித்துவைக்கப்பட்ட அவனது
கைபேசியின் கமெராக் கண்கள்
அதைப் பதிவுசெய்வதை அறியாமல்!


உச்சமடைந்து,
உடல்கள் களைத்து,
கறைகள் களைந்து,
ஆடை அணிந்து
அறையை விட்டு வெளியேறினர்.
கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும்
அவர்களுடன் போக மனமில்லாமல்,
கட்டிலில் இருந்த வேறுபட்ட
கறைகளுக்கு இடையில் ஒட்டிக்கொண்டு
அங்கேயே இருந்துவிட்டது!


சற்று நேரம் கழித்து,
இணையத்தில் குவிந்திருக்கும்
கேடுகெட்ட காதல் களியாட்டங்களின்
எண்ணிக்கையில்
இன்னுமொன்றின் புதுவரவு.
அவ்வளவே!


.
.

Saturday, February 11, 2012

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும், 
படித்தாலும்
மனசை கொள்ளை கொள்ளும்
தபூ சங்கரின் 
காதல் கவிதைகள் நீ!


வெனிஸ்வேலா நாட்டுக்காரியை
உலக அழகியாகத் தெரிந்தார்கள் -
உன்னைப் பார்க்காத
முட்டாள்கள்!


உன் விரலைப் பிரிந்த 
நகத்துண்டு,
உன்னை விட்டு உதிர்ந்த 
தலை முடி,
உன்னை விட்டுத் தவறிய 
கைக்குட்டை என
எதுவுமே என்னிடம் இல்லை!
உன்னை 
வேண்டாமென்று வெறுத்தவை 
எனக்கெதற்கு?


உனக்கான முக்கியத்துவத்தை
குறைத்து விடுவேனோ என்ற பயத்தில்,
நான் ஆசையாக எழுதிக்காட்டும்
கவிதைகளில் - நீ
ஆர்வம் காட்டமாட்டாய்.

உடனே எனக்குள் நினைத்துக் கொள்வேன் -
சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று
பொறாமைப் படுகிறதே என்று!


கூடுவிட்டுக் கூடுபாயும்
வித்தைக்காரன் நான்.
சமயங்களில் மாறிவிடுகிறேன்...
வர்ணக்குடுவை சுமந்துசெல்லும்
வண்ணத்துப்பூச்சியாய்,
உன் உதட்டுச் செம்பில்
நிறைந்து வழியும் புன்னகைப் பாலாய்,
உன் கண்களின் படபடப்புக்குள்
சிக்கிக் கொண்ட வெட்கத் துண்டாய்,
மஞ்சள் பூக்களாய்,
மலை நாட்டுச் சுடாத வெய்யிலாய்,
நதிகளை நனைக்கும்
சில்லென்ற மழையாய் 
சமயங்களில் மாறித்தான் விடுகிறேன்...
ஏனென்றால்,
இவற்றுக்கு மட்டும்தான்
உன் அனுமதியின்றி
எப்போது வேண்டுமானாலும்
உன்னை ஸ்பரிசித்துப் பார்க்கும்
சலுகையும் உள்ளது!


நீ வெள்ளைச் சுடிதாரில் 
வரும்போதெல்லாம் குழம்பிவிடுகிறேன்.....
உனக்கும் நிலவுக்கும் இடையில் 
6 ஒற்றுமைகளை காண்பதில் உள்ள 
இலகுத் தன்மையாலும்,
5 வேறுபாடுகளை காண்பதில் உள்ள
கடினத் தன்மையாலும்!


எனக்குப் பிடித்த பாடலை
மௌனமாக ரசிப்பேன்.
உனக்குப் பிடித்த பாடலின் வரிகளை
கவனமாக வாசிப்பேன்....
அதில் எங்கேனும்
என் பெயர் வருகிறதா என்று.


நல்ல நாள் பார்த்தே
உன் அப்பாவை சந்திக்கப் போகிறேன்.
உன்னைப் பெண் கேட்பதற்காக அல்ல.
என்னை உன்னிடம் எழுதித் தருவதற்காக!


.
.Thursday, February 9, 2012

வெட்கக்கேடு!

*
**
***
**
*


கால்கள் செயலற்றுப்போன 
இளைஞன் ஒருவன்
தன்நம்பிக்கையுடன்,
சாலையில் 
பழங்கள் 
விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்...
தகுந்த வேலைக்காக
தலைக்கனத்துடன் காத்திருக்கும்
சில வேலையற்ற பட்டதாரிகள் சார்பாக
வெட்கித்தலை குனிந்தேன்!
.
.
.

Wednesday, February 1, 2012

தாழ்வு மனப்பான்மை!>
>>
>
உளவியல் கணிப்புப்படி
தாழ்வு மனப்பான்மையின் 
தாய் - உடலமைப்பு!
தந்தையோ - நிறக்குறைவு!

தாழ்வு மனப்பான்மையை 
விட்டொழி,
வெற்றி பெறுவாய் என்று போதிப்பது 
சுய முன்னேற்றப் புத்தகங்களின் 
விற்பனைத் தந்திரம்!
கல்லா கட்டியதும் தங்கள்
கடையை மூடி விடுவார்கள்!
பாதிக்கப்பட்டவனோ 
பாதியிலே விடப்படுவான்!

உண்மையில்
உடல் அமைப்பும்
நிறக் குறைவும்
ஒருபோதும் நோயாகாது!
தோற்றத்தைப் பார்த்து 
எடைபோடுபவர்களை
வேண்டுமானால்
மன நோயாளிகளாக
வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் தொடர்புகளையும்
துண்டித்துக் கொள்லலாம்.

என்னைப் பொறுத்தவரை,
தாழ்வு மனப்பான்மை என்பது
கேடயம்!
பந்தாக் காரர்களும், பணக்காரர்களும் 
பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும் 
குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும் 
வடிகட்டப்பட்டு,
நல்லவர்கள் மட்டுமே
நட்பாய் கிடைக்கும்!
நல்ல நட்பு என்பது 
மிகப் பெரும் வரம்!

தலைக்கனத்தோடு இருப்பதைவிட,
தாழ்வு மனப்பான்மையுடன் 
இருப்பதொன்றும் குற்றமெல்ல!
காரணம் -
முன்னையது எதையும் கற்றுத்தராமல்,
எப்போது வேண்டுமென்றாலும் 
கீழே தள்ளிவிடக் காத்திருக்கும்.
பின்னையது 
பணிவையும், சகிப்புத் தன்மையையும்
கற்றுத்தந்து
காலங்கள் கழித்தாவது
வாழ்வில் உயர்த்தும்!

தாழ்வு மனப்பான்மை என்பது
தடைகளின் உச்சமல்ல.
அதை ஏற்றுக்கொண்டு
சாதித்தவர்களுக்கு
வரலாற்றில் பஞ்சமுமில்லை!

தாழ்வு மனப்பான்மையை
விடச்சொல்லி ஒருபோதும்
சொல்லமாட்டேன்.....
அது தற்கொலைக்குத் தூண்டாதவாறு
பார்த்துக்கொள்ளவே சொல்வேன்!
.
.

Monday, January 9, 2012

உளவியல் உண்மைஅப்பா இன்றி வளர்பவர்கள்
சமூகத்தில் 
தன்நம்பிக்கை இன்றி 
வளர்கிறார்கள்...
அம்மா இன்றி வளர்பவர்கள்
சமூகத்தில்
நல்ல பெண்களை
சட்டெனக் காதலிக்கிறார்கள்...
அப்பாவும், அம்மாவும்
இன்றி வளர்ந்தவர்கள்
சமூகமே வேண்டாமென்று
தனிமையுடன் 
ஒதுங்கியே வாழ்கிறார்கள்!
.
.Sunday, January 8, 2012

அதன் பெயர் இருட்டு!

அது ஒரு கனத்த பறவை.

அலகுகள் நீண்ட, 
இறக்கைகள்பெருத்த 
தந்திரப் பறவை.
அழகான எதுவுமற்ற, 
பாடவும் தெரியாத
குரூரமாகக் கொலைசெய்யும்
கொடிய பறவை. 


கடும் பசியுடன்
வெகு நேரம் காத்திருந்து,

இயற்கை ஆடைமாற்றச் சென்ற
ஒரு ஆரவாரமற்ற கணத்தில்,
சூரியனை 
கூரான அலகால் கொத்திச் சென்று
உயரமான மரத்தின் மேலிருந்த
தன் கூட்டுக்குள் ஒளித்துக்கொண்டது.....

எப்போதோ கொத்தித் தின்ற
சுவையற்ற நிலவின் மிச்சத்தை
வானம் நோக்கித் துப்பியது!


அநேகமாக,
வேறொரு கூட்டிலிருந்து
பதப்படுத்தி வைக்கப்பட்ட
இன்னுமொரு சூரியன்
நாளை காலை 
நன்றாக விடிவதற்குள்
நழுவி விழக்கூடும்!
விழாவிட்டால்,
எப்போதோ களவாடிவைத்த
மற்றுமொரு சூரியனை
அமெரிக்கா மீண்டும் 
வானுக்கே அனுப்பும் அல்லது
வியாழனை அணுகுண்டால் எரிக்கும்.

எனவே கவலையில்லை!
.
.