Friday, September 24, 2010

தற்கொலை!

அது ஒரு சிறிய அறை. ஜன்னலைத் திறந்தால் அன்றி அங்கு வேறு வழியில் ஒளி ஊடுருவ முடியாத படி கட்டப்பட்ட அறை. முன்னர் எப்போதோ சுவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கங்கே தெரிகிறது. ரொம்பச் சின்னதாய் ஒரு மேசை. அதன் மேல் நீல வர்ணத்தில் ஒரு டயரி. யாரோ முன்பு மின் விசிறி பாவித்திருக்க வேண்டும். கூரையில் வளைக்கப்பட்ட இரும்பிக் கம்பி நீண்டு இருந்தது.
அறையின் மூலையில் ஒரு உருவம் குந்தி இருக்கிறது.
அது அவன் தான் . அது அவனே தான்.அவன் இங்கு இருக்கக் காரணம். அவன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்.

அன்று சனிக்கிழமை. சிகிச்சை நிலையத்தில் அன்று சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மாலை நான்கு மணியளவில் அவன் வந்தான்.
டாக்டர் வெளியே போய் இருந்தார். நான் அவரிடம் உதவியாளனாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில்... 
அதை விடுங்கள் நான் சொல்ல வந்த விடயமோ வேறு. 
உள்ளே வந்தவன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வந்து கதிரையில் அமர்ந்தான். 
தான் தற்கொலை செய்யப் போவதாக என்னிடம் சொன்னான். என்ன விளையாடுகிறாயா என்றேன். இல்லை என்றான் தீர்க்கமாக!.
     
எனக்கும் முதலில் ஆச்சரியமாகத் தான் இருந்தது. என்ன இவன் இப்படிச் சொல்கிறான். வந்தான், சாகப் போகிறேன் என்கிறான். சுவாரசியமான மனிதனாகப் பட்டான். டாக்டர் திட்ட மாட்டார். அவரின் சிறந்த மாணவன்  நான். ஒரு முறை முயன்று பார்ப்போம் என்று, மன நோயாளியாக இருப்பானோ என்கிற கோணத்தில் என் அறிவுக்குப் பட்ட வரையில் பல சோதனைகள் செய்தும் பார்த்தேன். அவன் மிகத் தெளிவாக இருக்கிறான். மனிதர்களை பற்றிப் படித்து வைத்திருக்கிறான். அவன் பேசுவதைக் கேட்டால் சாதாரண மானவர்களுக்கு வாழ்க்கை மீது வெறுப்பு வந்து விடும் அளவுக்குப் பேசுகிறான். அவன் பேச்சில் அழகான எந்த லயமும் இல்லை. ஏற்றமோ இறக்கமோ இல்லை. ஆனால் வலிமையான வார்த்தைகள். சமூகத்தைக் கேலி செய்யும் வார்த்தைகள். 
     
ஆனால் அவன் தற்கொலை செய்வதற்குச் சொன்ன காரணங்கள் எனக்கும் சரியாகத்தான் பட்டது.   ஒரு வேளை இந்த முடிவு அவனுக்கு விடுதலையை கொடுக்கக் கூடும்.

அவனுக்காக சிரிக்க யாரு இருந்ததில்லை. இனி அவனுக்காக அழவும் யாரும் இருக்கப் போவதில்லை. தனக்காக ஒரு குறைந்த பட்ச தேவதை காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அடியோடு மறுக்கிறான். இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் நிஜத்தில் தோற்பவன் எப்போதும் தோற்றுக்கொண்டே தான் இருப்பான். வெல்பவர்கள் அவனை ஏறி மிதித்து விட்டுச் சென்று கொண்டே இருப்பார்கள் என்பான்.
அது உண்மை தான். சிக்மன் பிராய்டு சொன்னதைப் போல நம் எல்லோருக்குள்ளேயும் தோற்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த ஆசை இவனிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

இதுவரை தன்னை யாருமே முழுதாகப் புரிந்து கொண்டதேயில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னான் . மெல்லிய சோகத்தை எப்போதுமே அவன் கண்களில் பார்க்கலாம். வயதில் இருபதுகளில் மத்தியில் இருக்கும் அவன் தோற்றத்திலோ, உயரத்திலோ அன்றி அழகிலோ சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறான். நீங்கள் சொல்வது கேட்கிறது. அவன் தாழ்வு மனப்பான்மையாலும் பாதிக்கப் பட்டிருக்கிறான். மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தான் இப்படி இல்லையே என்று கவலைப் படுபவன். அதனால் தான் இந்த சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழ்கிறான். என்னிடம் கூட ஒருமுறை கேட்டிருக்கிறான் "நீங்க நல்ல கலர் என்ன? என்னைப் பாருங்க எவ்வளவு கறுப்பாக இருக்கிறேன் என்று..."

சிந்தித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் மன நோயாளிகள் தான். சிவப்பான தோலை  கொண்டவர்களுக்கு இந்த சமூகத்தால் தரப்படும் முக்கியத் துவத்தை கறுப்பான தோலை உடையவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. நம் மனம் அவ்வாறு இசைவாக்கம் அடைந்திருக்கிறது. சிவப்புத் தோலை உடையவர்கள் சமூகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களாகவும், கறுப்பானவர்கள் அவர்களுக்குள் கீழே வேலை  செய்பவர்களாகவும் அல்லது படிக்காதவர் களாகவுமே நம் மனம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

கையிலிருந்த, பையிலிருந்த நான்கைந்து டயரிகளை என் முன்னே கொண்டு வந்து வைத்தான். புரட்டிப் பார்த்தேன். அத்தனையும் அழகான கை எழுத்தில் வரி வரியான வசனங்கள். சிலது ரசிக்கும் படியாக இருந்தது. பெரும் பாலானவை காதலை கருப்பொருளாகக் கொண்டது. நிச்சயம் பெண்கள் ரசிப்பார்கள். தன்னுடைய சொந்தக் கவிதைகள் என்றான். 
காதல் கவிஞனாக  உருவாகக் கூடிய அத்தனை ஆரம்பங்களும் சரியாகவே இருக்கிறது அவனுக்கு. ரசிக்கும் படியாக வேறு இருக்கிறது. நல்லதொரு தட்டிக் கொடுக்கக் கூடிய கைகள் இருந்தால், அவன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்கிற எண்ணத்தோடு அவனிடம் கேட்டேன் "வீட்டில் உன் எழுத்தை யாரும் ஆதரிப்பதில்லையா?"     
நிமிர்ந்து என்னை ஒருமுறை பார்த்தான். அந்தப் பார்வையில், கோபமும், இயலாமையும், அழுகையும் கலந்திருந்தது.
" வீட்டிலேயே என்னை நிராகரிக்கிறார்கள். எதற்கும் தகுதியற்றவனாம். சொந்தக்காரர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள். மட்டம் தட்டு கிறார்கள்.  அனுதாபப் பார்வை பார்க்கிறார்கள். நான் சொல்வதைத் திருபு படுத்துகிறார்கள். செய்யாத தப்புக்குப் பலிக்கடாவாக்கப் பட்டிருக்கிறேன். என்னுடைய அமைதியை அவர்கள் ஆணவம் என்கிறார்கள். அதனாலேயே  யார் வம்புக்கும் போகாமல் நான் உண்டு என் வேலை உண்டு என இருக்கிறேன். திறமையிருந்தும் அதற்கான சரியான ஆதரவு கிடைக்க விட்டால் அதைப் போல கொடுமை இந்த உலகத்தில் எதுவும் இல்லை. களி மண்ணாக இருந்தால் மட்டும் சிலையாகி விட முடியாது. அதற்குத் தகுதியான கைகளிடம் போய்ச் சேர வேண்டும் இல்லையா?  ஏதோ என்னுடைய போதாத நேரம்..."
எதற்கோ என்னில் கேலியாகச் சிரித்தான். கண்கள் மட்டும் அழுதன.
       
வாழ்க்கையை ரொம்ப சலித்துக் கொள்கிறான். என்ன செய்வது?. ஆசைப்பட்ட எதுவுமே  நடக்காமல் விட்டால் யாருக்குத் தான் வாழ்க்கையில் பற்று இருக்கும்?
அவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? ரோட்டில் பார்ப்போர் எல்லோருமே எதிரிகளாகப் பட்டால் எப்படி இருக்கும். வாழ ஆசை வருமா? தொடர்ந்து வாழ்க்கையில் தோற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் அதிக பட்ச விருப்பு என்னவாக இருந்து விடப் போகிறது?
தனிமை என்பது கொடுமையான விடயம் தான். தனித்து யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஒற்றைக் கை தட்டி ஓசை வராது தானே?
வாழ்க்கையும் அப்படிதான். யாருமே இல்லை என்கிற நிலையில் யாருக்காக அவன் வாழவேண்டும்? எதற்காக அவன் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டும்? 
சாதாரண மனிதன் எனும் வகையில் அவன் முடிவுக்கு உடன் பட்டேன்.
வாழ்க்கையைத் தீர்மானிப்பது எப்படி தனி மனித சுதந்திரமோ அப்படித் தான் அவன் முடிவைத் தீர்மானிப்பதும். அவனைப் பொறுத்த வரை அவன் எடுத்த முடிவு அவனுக்குச் சரியாகப்  பட்டிருக்கிறது.  

அது ஒரு சிறிய அறை. ஜன்னலைத் திறந்தால் அன்றி அங்கு வேறு வழியில் ஒளி ஊடுருவ முடியாத படி கட்டப்பட்ட அறை. முன்னர் எப்போதோ சுவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கங்கே தெரிகிறது ...................................................................................................................................
............................. அது அவன் தான் . அது அவனே தான். அவன் இங்கு இருக்கக் காரணம். அவன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான். தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். 
எனக்கு அவன் முடிவில் முழுச் சம்மதம்.
உங்களுக்கு......?
.
.
.   

பேனா

18/02/2005

எதையாவது எழுத நினைக்கையில் 
விரற்சூட்டுக்குள் விழி பிதுங்குது பேனா...

என்னைத் திருப்திக்க 
ஒற்றைக் காலிலே தவம் கிடக்கும்...
வெற்றுத் தாளுக்கும் 
விசேட அரிதாரம் பூசும்...

புத்தம் புதிதில் நெஞ்சோரம் 
நிமிர்ந்து நிற்பதும்...
தீர்ந்தவுடன்
தெருவோரம் தகர்ந்து கிடப்பதுமாய் 
மனித வாழ்க்கைக்கு ஏதோ 
மகத்துவமாய் சொல்கிறது...

உயர்ந்த ரகம் முதல் 
சாதாரண ரகம் வரை 
பல வகையில் பேனாக்கள் உண்டு.
இருந்தும் 
அவை தமக்குள் 
ஜாதி , மதம் பார்ப்பதில்லை... 

வள்ளுவர் இருந்திருந்தால் 
அதிகாரங்களில் ஒரு அதிகரிப்பு
புதிதாய் பேனா!

காதல் வந்துவிட்டால் 
கவிதை விரலாய்ப் பேனா.
கை விரலுக்கும் கடதாசிக்கும் 
மூன்று முடிச்சாய்ப் பேனா...

பிள்ளை முதல் 
பில்கேட்ஸ் வரை 
பிரதான சேவையாளன் பேனா...

எல்லோருக்கும் நண்பனானவன்
ஆனாலும் 
அழிப்பானைத் தவிர இவனுக்கு 
வேறு எதிரியில்லை...

கற்பனை ஊற்றுக்கு உருக் கொடுத்து 
உயிர்த் தியாகம் செய்வதே அதன் 
பிறவிப் பயன்...

இப்போதும் கூட 
சிரித்துக் கொண்டே செதுக்குகிறது...
இன்னும் சில கணங்களில் 
இறக்கப் போவதை அறிந்தும்...
.
.
.

Monday, September 20, 2010

நண்பனின் காதலி!

07/03/2005

என் இனிய நண்பா!
நாளுக்கு நான்கு வேளை 
உன் இடக்கை இரு விரலுக்குள் 
புகைக்கும் முத்தம் இடும் 
சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்!

ரசித்து, ருசித்து, புகைப்பாய்...
வட்டமாய், 
சதுரமாய், 
கோள வடிவமுமாய்
வகை வகையாய் புகை விடுவாய்.
உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை...
என்றார்கள்; என்பார்கள்!

நீ சிகரட் என்றவுடனே 
எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் -
என் வயிறு...
வாங்கத் தருவது நான் தானே?

இனி ஒரு போதும் இல்லை 
இதுவே இறுதி - 
உன் சத்தியம் 
மறுநாளே தகர்ந்துபோக 
தீர்மானங்கள் தொடரும்...

நீ நண்பனானது எத்தனை விசித்திரம்..
எனக்கும் 
சிகரட்டுக்கும்...
சிகரட் உனக்கு கோயில்.
எனக்கோ குப்பை!

எனக்குத் தெரியும் 
உன் விரல்களால் 
சிகரட்டைத் துப்பி எறிய முடியாது!
என்னிலிருந்து பிரிக்க முடியாத 
காதலைப் போல...

சிகரட்டுக்கும் காதலுக்கும் 
ஒற்றுமை கேள்...
சிகரட் -
பற்றவைத்துப் புகைக்கையில் 
நெருங்கி வரும் மரணம்...
காதல் -
பற்றிக்கொண்டால் தினம் மரணம்!

உனக்கெல்லாம் ஏதடா 
இதய தேவதை!
புகைகக்கி புகைகக்கி
ஈரலுடன் இருதயம் கூட  
துருப்பிடித்துப் போயிருக்குமே!

அணுக்கள் ஒவ்வொன்றிலும் 
சுவைக்கிறது என்பாய்!
இல்லை!
அணுக்கள் ஒவ்வொன்றாய் 
அழிக்கிறது என்பேன்...

புகைக்கையில் 
பூபாளம் கேட்கிறது என்கிறாயே!
உற்றுக்கேள் 
ஊதப்படும் சங்கின் ஒலியை! 
உனக்காக 
ஒத்திகை பார்க்கிறது மரணம்....
உனக்காகத்தான்!
.
.
.Thursday, September 16, 2010

தண்ணீரின் எரிப்பு!

07/02/2004
காதல் வெள்ளத்தில் 
அடித்துச் செல்லப்பட்டு 
கண்விழித்தேன் 
உன் காலடித்தடங்களில்...
அன்று முதல் 
தொலைக்காத ஒன்றை ஏனோ 
தேடச் சொன்னாய்...

உன்
பேச மறுக்கும் கண்களையும்,
பார்க்க மறுக்கும் உதடுகளையும்,
அம்பு பாச்சும் புருவங்களையும்...
கவிதையில் பாட 
என் கற்பனைக்கு வயதில்லையே!

உன் சுட்டெரிக்கும் அழகில்
கண்ணிழந்து ஊமையான நான்
என் பேனாக்களுடன் உறவாடி
கவிதைக் குழந்தைகளை 
பெற்றெடுக்கிறேன் தினமும்...

உன்னைக் கண்டு செல்லும் 
ஒவ்வொரு பொழுதுகளிலும் 
என் உயிரின் கரையில் 
கொஞ்சம் உருகுவதை அறிகிறாய்.
இருந்தும்
நெருப்பில் குளிக்கிறேன்...
தண்ணீரால் எரிக்கப் படுகிறேன்...

காதலைப் படைத்தவன்...
உன்னைப் படைத்தது
அவனுக்கான திறமை.
என்னைப் படைத்தது
எனக்கான துரோகம்!

உன்னை ஸ்பரிசிக்கும் 
ஆடையாக வேண்டாம்...
உன்னை தாங்கும் 
செருப்பாய் இருக்கிறேன்... சம்மதமா?

மௌனத்தை 
வரமாய்ப் பெற்றவளே!
ஏன் இதயத்தைக் கல்லாக 
கேட்டு வாங்கிக்கொண்டாய்?  
.
.
.Monday, September 13, 2010

நான் என்கிற மிருகம்!சுவற்றில் எறியப்பட்ட
இரப்பர் பந்தைப் போல
வேகமாய் வந்து
நெஞ்சில் தாக்குகின்றது
சிதைந்த காதலும்
கொஞ்சம் தனிமையும்!


கொளுத்திப் போடப்பட்ட நட்சத்திரம்
வெடிக்காத வரைக்கும்தான்
நிலவுக்குத் துணையிருக்கும்.
பின்...
நிலவை கௌவிச் சென்ற மேகம்
அதை
பசியுடன் விழுங்குவதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..


கடைசியாக,
கடதாசிப் பூக்களில்
வந்தமர்ந்த கருவண்டு
சுவற்றில் பட,
தன் பிட்டத்திலிருந்து
நாற்றத்துடன்
ஏமாற்றத்தையே பீச்சுகின்றது...


பெண் கழுதையை 
துரத்திய ஆண் கழுதைகளில் 
வீரியமான ஒன்று
முன்னையதை
இப்போதைக்கு புணர்ந்திருக்கும்...
வெறி தீர்ந்தபின் விலகியிருக்கும்.


இறகொடிந்த இரவுப் பறவை
பாவம்! என்ன செய்யப்போகின்றது?...
பட்டினி கிடக்கும்
கோரப்பற்களின்
பசி தீர்க்கப்போகிறது!


மரச் சட்டத்தில் 
புதிதாக சிரிக்கின்றது
திருமணப் புகைப்படம்.
அதன் கண்ணாடியில் அடைபட்டு
முறைத்துக் கொண்டிருக்கும்,
நான் என்கிற மிருகம்
இன்றைக்கு மட்டும்
அவளை ஆடைகளைந்து
அல்லல் படுத்தாது!


.
.
.

சுட்டு விளையாடும் சூரியன்!

13/02/2004
நான் தொட்டுப்பார்த்த 
தென்றல் காற்றை 
நீ சுவாசித்த போது...
வெடித்துச் சிதறிய என் 
வேதனைகள் தெரியவில்லையா?
தாக்கங்கள் நிறைந்த என் 
ஏக்கங்களை உணரவில்லையா?
உன் மேல் நான் கொண்ட 
உண்மைக்காதலும் புரியவில்லையா?

மென்மையானவளே!
உனக்கு இதயம் மட்டும் 
எப்படி இரும்பானது?

கண் முன்னே கண்டவுடன் 
வெறுக்கின்றாயே... 
நான் என்ன 
வேற்றுக்கிரகவாசியா?

இப்போது 
என்னை 
ஏறெடுத்தும் பார்க்காதவளே... 
எப்போது 
என் கவிதைகளை
ஏற்றுக் கொள்ளப் போகிறாய்?

உனக்காக எல்லாமே 
காத்திருக்கின்றன...

கடல் துப்பிய முதல் அலை,
பாலில் ஊறவைத்த பௌர்ணமி,
சுட்டு விளையாடும் சூரியன்,
வர்ணம் பூசப்பட்ட வானவில்,
மேகங்கள் வடித்த கண்ணீர் துளிகள்,
உன்னுடன் குளித்த பன்னீர் துளிகள்...

எல்லாமே 
உன்னை நினைத்து 
உனக்காகவே காத்திருக்கின்றன...

எனக்காக...
நீ ஒருத்தி மட்டும் தானே?
உனக்கும் தெரியாது!
சொந்தங்கள் நிறைந்த 
அநாதை நான் என்று...
.
.
.
கசந்து பின்...

24/04/2004
என் வாழ்க்கை வசந்தத்தில் 
முட்களாய் பூத்தவளே!
உன் புன்னகைக்குள் ஏனடி 
பூகம்பத்தை
ஒளித்து வைத்தாய்?

நெற்றியின் மீது 
நினைவுகளால் சுட்டுச் செல்பவளே!
மரணத்தை ஏனடி 
மகுடமாய் அணியச் சொல்கிறாய்?

தினம் ஒரு மரணம்,
தினம் ஒரு ஜனனமாய்...
பலப்பல விதங்களில் என்னை 
பகிடிவதை பண்ணாதே!

உன்னாலே சிதறிப்போன 
உள்ளத்தை 
எங்கே போய் சேகரிக்க?

அப்படி என்ன
கேட்டு விட்டேன்?

என் சுவாசங்களை 
தவற விட்டதால்
உன் மூச்சுக் காற்றில் கொஞ்சம் 
முகரத்தானே கேட்டேன்?

என் கனாக்களில் உன்னைக் கண்டு 
உன் கனவுகளில் எல்லாம் 
என்னைத் தானே கேட்டேன்?

என் இதயத்தை உனக்குத்தந்து 
உன் இதயத்தில் 
இடம் ஒன்றைத்தானே கேட்டேன்?

அப்படி என்ன 
கேட்டு விட்டேன்?

பார்க்க மறுக்கிறாய்.
பழக மறுக்கிறாய்.
சேர்க்க மறுக்கிறாய்.
சிரிக்க மறுக்கிறாய்...

இது என்ன- 
தவணை முறையில் தண்டனையா?
அல்லது 
பார்த்ததற்கான பரிசுகளா?

கனிந்த பின் ருசிப்பது 
கனி ஒன்று தான்..
கசந்து பின் இனிப்பது 
காதல் மட்டும் தான்...
கனிய மாட்டாயா?

இரவுகளில்
இம்சை செய்பவளே!
கனவுகள் உனக்குச் சம்மதம்...
காதல் ஏன் சம்மதமில்லை?
என்னைப் பிடித்திருக்கிறது...
காதலை ஏன் பிடிக்கவில்லை?
.
.
.


Friday, September 10, 2010

வழமை போல கொல்!

07/02/2004
உப்புக் கரித்த உணர்வுகளில் 
தேன் சுவையாய் வந்த பெண்ணே!
உன் நினைவுகளால் 
இங்கே எனக்குத் தும்மல்கள்..
அங்கே உனக்கு?

எனக்காக நீயல்ல
உனக்காகவே நான்...
பிறந்து, வளர்ந்து, பரிதவிக்கின்றேன்!

நிர்வாணமாய்த் திரியும் 
அந்தி நிலவு-
அதனிடம் தான்...
வலிகள் நிரம்பிய - 
என் வாலிப இரவுகளை 
சேமித்து வைத்திருக்கிறேன்...

உணரப்பட்டு உணரப்பட்டு 
பழக்கப்பட்டவை தான் - உன் 
தட்டிக்கழிப்புக்கள்,
கணக்கெடாமைகள்
இன்னும் இன்னும்...

உன்னைப் பார்க்கும் 
ஒவ்வொரு தடவையும்... 
என்னைக் கண்டுகொள்வாயா?
கண்ணசைப்பாயா  - என 
என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
எஞ்சுவதென்னவோ 
உன் பரிகாசங்கள்,
எனக்கே உரிய ஏமாற்றங்கள்..

உன்னாலே 
பட்டினியாய்க் கிடக்கும் 
என் உள்ளத்திற்கு 
பசிக்கிறது பெண்ணே!
பருகுவதற்கு - 
உன் பார்வைகள் வேண்டும்..
புசிப்பதற்கு - 
உன் புன்னகை வேண்டும்...
தருவாயா?

நலமாகத் தூங்கி 
நாட்கள் பல பெண்ணே!
உன் நாணங்களை என் கண்கள் 
பரிசாகக் கேட்கின்றன...
உன் பட்டு மனதில் 
இடம் தரா விட்டாலும் 
பரவாயில்லை...
உன் பாதச் சுவடுகளிலாவது
படுத்துக் கொள்ள இடம் ஒன்று தா?
கொஞ்ச நேரம் தூங்குகிறேன்...
வேண்டிய பொழுது   
தட்டி எழுப்பி  
வழமை போல கொல்!
.
.
.


தவிப்பு

20/01/2004
பெருமைக்குரிய பெண்ணினத்திலே 
என்னை 
வதைக்கப் பிறந்தவளே!

கற்பனைகளை 
ஆக்கிரமித்துக் கொண்டு
காதலைக் கற்றுத் தந்தாய்..

கனவிலே சிரித்து விட்டு 
கண்ணெதிரே வெறுக்கின்றாய்..

கவிதைகள் படித்து விட்டு 
மௌன மொழி பேசுகின்றாய்..

எண்ணத்தில் குளிர வைத்து 
உள்ளத்தை கொதிக்க வைத்தாய்..

நீச்சலைக் கற்றுத் தந்து 
கண்ணீரில் மூழ்க வைத்தாய்..

கண்களை விட்டு விட்டு 
தூக்கத்தைப் பறித்துச் சென்றாய்..

உதடுகளை விட்டு விட்டு 
புன்னகையைப் பிடுங்கிச் சென்றாய்..

தூரிகையைத் தந்து விட்டு 
விரல்களை வெட்டிச் சென்றாய்..

வேதனையை தந்து விட்டு 
மகிழ்ச்சியை எடுத்துச் சென்றாய்..

உன் நினைப்பைக் கொடுத்து விட்டு 
ஏனோ என்னை மறந்து சென்றாய்..

என் உள்ளத்தை ஈரமாக்கிச் சென்றவளே 
ஏன் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டாய்?
.
.
.

Thursday, September 9, 2010

இப்போதைக்கு இவளைப் பற்றி...

25/01/2004

பதினெட்டு வயதுப் பருவ மங்கை அவள்!
அழகுக்கெல்லாம் அழகு சேர்க்க 
இப்பரந்த பூமியில் பிறந்த பதுமை...

பக்குவத்தை படித்து 
ஒழுக்கத்தை ஆடையாக உடுப்பவள் ...


பௌர்ணமி நிலவு பகலில் வந்தால் 
பொறாமைப்படும் 
இவள் நிறத்தைக் கண்டு...

இரத்த நாளங்களை வெடிக்கச் செய்து 
உயிரணுக்களை உறுஞ்சும் அட்டைகள் 
அவள் பார்வைகள்...

தென்றல் காற்றில் ஹைக்கூ எழுதும் 
இவள் கார் வண்ணக் கூந்தல்...

காற்றுக்குக் கடிவாளமிட்டு
கைதியாக்கும் சிரிப்பலைகளில்
சிதறிப்போகிறது என் உள்ளம்...

தேவதையின் செவ்விதழில் 
புலம்பெயரத் தவம் கிடக்கிறது 
அவளுக்காய் வளர்ந்த என் தாடியும்,
அதற்கண்மித்துள்ள  பிரதேசங்களும்...

மெல்லச் சிறகடிக்கும் 
வண்ணாத்துப் பூச்சி இமைகளுடன்
கொஞ்சி உறவாடத் துடிக்கிறது 
துளிர் விட்ட என் மீசை...

கார்வட்டப் பொட்டை 
கைது செய்த இடத்தில், 
எப்போது இடங்கிடைக்கும்
என தினந்துடிக்கும் - என் உதடுகள்...

கன்ன ஓரத்தில்,
காதிற்கருகில்...
சுருண்டு விழும் ஒரு சில முடிகளில்
சிக்கித் தவிக்கிறேன் - நான்...

தங்கத் தாமரை மொட்டான 
இவள் மூக்கிலிருந்து 
விடை பெறும் சுவாசங்களை 
தேடித் பிடித்து சேகரிப்பதே 
என் முழு நேர வேலை!

இவளைக் காணும் ஒவ்வொரு கணமும்...
புதிதாய்ப் பிறந்த மழலையாக,
குழைந்து, 
நெழிந்து பின் 
எங்கோ தொலைந்தே போகிறேன்...
.
.நிர்வாணமாக்கப்பட்ட நினைவுகள்

29/01/2004

ஒவ்வொரு நாளும்
செத்துப் பின்
புதிதாய்ப் பிறப்பதற்கு - காதல்
சிறந்த வழிதான் போல...

ஓ பிரம்மா!
உன்னைத் திட்ட மாட்டேன்.
நீ வரைந்த ஓவியம்
உயிர் பெற்று,
தேவதையாய்
என் கண்முன்னே...
உனக்காக
வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.
அழகிய அந்த ஓவியத்தை
என்னிடமா தொலைப்பாய்?

எதைப் பிடித்ததென்று சொல்ல?
அவளிடம்
எல்லாமே பிடித்திருக்கிறதே!

மௌனத்தை மாலையாக
அணிந்து வந்து - என்னை
அவளிடம் மண்டியிடச் செய்வாளே...

அவள் பார்வைகளில்
ஏதோ ஒன்றை - என்
கண்கள் தேடியும்
கிடைக்காத போது
கேலியாகச் சிரிப்பாளே...

முத்தாய் இருக்கும்
அவள் பற்களை,
மூடி மறைக்கும்
அவள் இதழ்களை -
எப்போது
எனக்காய் திறப்பாள் என
ஏங்க வைப்பாளே!

கனவிலே தினம் வந்து
காதலைச் சொல்லிவிட்டு,
நேரிலே என்னை
அற்பமாய்ப் பார்ப்பாளே!

எதைப் பிடித்ததென்று சொல்ல?
அவளிடம்
எல்லாமே பிடித்திருக்கிறதே!

காதல் இவளுக்கு...
ஒதிக்கி வைக்கப்பட்ட
ஒவ்வாமைப் பொருளாம்...
எனக்கோ அதுவே சுவாசம்!

உனக்காக பெண்ணே!
மழையில் குடையாக,
என்றும் நட்பாக,
பாசத்தில் தாயாக,
நல்ல துணையாக
நானிருப்பேன் கண்ணே!

முடியாது என்ற ஒரு சொல்லால்
என் மனதை ஒடித்து,
வாழ்வை முடிக்கப் போகிறாயா?

ஆம் என்ற உன் வார்த்தைக்காய்
காலம் உள்ள வரைக்கும்,
நானும் வாழும் வரைக்கும்,
நிச்சயமாய் காத்திருப்பேன்...
நிர்வாணமாக்கப்பட்ட
உன் நினைவுகளோடு!
.
.
.

Wednesday, September 8, 2010

காதல் - அழகிய கண்ணாடிக் குவளை

11/02/2004
இலாபங்கள் நிறைந்தவைதான்
காதல் என
எண்ணி இருந்தேன்...

ஆனால்...
பாடித் திரிந்த - என்
பசுமை நாட்களை இழந்தேன்...
இன்னிசை பொழியும் - என்
இரவுகளை இழந்தேன்...
துக்கங்களே தெரியாத - என்
தூக்கத்தை இழந்தேன்...
மகிழ்ச்சியை இழந்தேன்
இறுதியில்
மனதையும் இழந்தேன்.
இழந்தேன்!
அனைத்தையும் இழந்தேன்.

உயிரைத் தவிர
இழப்பதற்கு
ஒன்றுமே இல்லை
என்றான பொழுதுதான்
எனக்குப் புரிந்தது...
காதல் -
முழுக்க முழுக்க
நட்டங்களால் நிரப்பப்பட்ட
அழகிய கண்ணாடிக் குவளை!
.
.
.

Tuesday, September 7, 2010

ஏற்க மறுக்கும் எமன்

19/03/2005
நிற்காமல் செல்லும்
புகை வண்டியில்
தெரியாமலே தொலைத்த
பேனாவைப்போல
காதல் இருந்துவிட்டால்...
அது பரிதாபம்.

பின்னிரவுகளிலும்
என்னை
நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது
நிலவு...

கைக் குட்டை
அளவுதானே
உனக்குக் காதலும்...
கசக்கிப் போடத்தான்
மனசு கனக்குது -
உன்னையும்,
உன் நினைவுகளையும்!

இருபது வயதிலேயே
நீ இன்னொருவன்
சொந்தமானாய்...
இப்போதும் -
நாம் சென்ற பாதைகளில்
உண்டு,
உடுத்து,
உறங்கி...
ஏதோ
உயிரோடுதான் இருக்கிறேன்...

உன்னைப் போலத்தான்
என்னை ஏற்கவே
மறுக்கிறான்
எமனும்!
.
.
.

காதல் குற்றம்

29/01/2004


காதலின் மன்றத்தில்
நீதிபதியாக -
அவள்.
குற்றவாளியாக -
நான்.

திருட முயன்றது குற்றமாம்.
அவள் இதயத்தை -
திருட முயன்றது குற்றமாம்...

தண்டனையோ!
அவள் பார்வைகளைத்
தீண்டக் கூடாதாம்.
அவள் சிரிப்புக்களைச்
சேகரிக்கக் கூடாதாம்.
அவள் சுவாசங்களைப்
பருகக் கூடாதாம்.
ஐயகோ!
தூக்கைவிடத் துன்பகரமானதுவே!
வேண்டுமென்றால்
அதற்குப் பதிலாக
செத்துவிட்டுப் போகட்டுமா?
.
.
.

Monday, September 6, 2010

கண்ணீரால் கழுவப்பட்ட இரவுகள்

26/01/2004

ஈடு வைத்தேன்
இதயத்தை - உன்னிடத்தில்.
வட்டியாகக் கேட்கின்றாய்
என் உயிரை.
தரமுடியாது போகலாம்...
பேசாமல் உன்
சொந்தமாக்கிக் கொள்
என் இதயத்தை!

சொர்க்கத்தின்
வாசலைக் காட்டிவிட்டு,
மரணத்தின் விளிம்புக்குக்
கூட்டிச் சென்று,
நரகத்தின் பிடியில்
தள்ளிவிடத் துடிக்கும்
உன் பார்வைகள்...
என்னைப் பாடாய்ப் படுத்துகின்றது.

உன்னால் பின்னப்பட்ட
காதல் வலையில்
சிக்குண்ட பூச்சியாய் - நான்.
என்னை விழுங்க வரும்
சிலந்தியாய் - நீ.

பார்த்துப் பார்த்துப்
பழகிப் போனவை தான்
உந்தன் பார்வைகள்.
ஆனாலும்
முதலாவதாய் பார்க்கும்
ஒவ்வொரு தடவையும்
என்னை ஊடறுத்து,
இதயத்தை வேரறுப்பதென்னவோ
உண்மை தான்.

பெண்ணே!
உன்னிடம் பெறுவதற்கு
நிறைய உண்டு!
உனக்குக் கொடுக்கவென்று
என்னிடம் -
கண்ணீரால்
கழுவப்பட்ட இரவுகளும்,
கரைந்து போகும்
கனவுகளும் மட்டும்!
உனக்குத்தான் தெரியுமே
நான் -
விளக்கைக் காதலிக்கும்
விட்டில் பூச்சி என்று!
.
.
.

காவியமாய் இருப்பவள்

29/01/2004


என் இதயத்தில்
மிகச் சிறந்த
காவியமாய் இருப்பவளே
என் வாழ்விலும்
மிகச் சிறந்த
பகுதியாய் இருப்பாயா?

கண்ணீர் கசியும்
என்
வாலிபப் பொழுதுகளை
எல்லாம்
வடிகட்டி,
கவிதையாக்கி
உன் காலடியில்
சமர்ப்பிக்கின்றேன்...
அன்பிருந்தால் அவற்றுக்கு
வாழ்வு கொடு.
இல்லாவிட்டால்...
என் கண்ணீருக்குத் தெரியாமல்
அவற்றைக் கொன்றுவிடு.
ஞாபகமிருக்கட்டும்
நான் சமர்ப்பிப்பது
என்னையும் சேர்த்துத்தான்!
.
.
.

இனிய ஆட்கொல்லி

28/10/2008


நிலவில்லை எனில்
இரவுக்கு அழகில்லை.
நீயில்லை எனில்
என் கவிதைக்கு மொழியில்லை!

காதலும் கூட
ஒரு வகையில்
போதை தான் போல...
உன்னை
நினைக்க,
நினைக்க
உள்ளேறும்
இனிய ஆட்கொல்லியை
இன்னும்
வேண்டுமென்கிறதே மனசு!

என் ஆண்மையை
இக்கட்டுக்குள்ளாக்க
உன் அழகுகளை
அள்ளி வீசி
ஆனந்தம் காண்கிறாய் ...
அதே போல
என்னிடமிருந்து
எந்த ஒன்றால்
நீ
உன்னை இழந்தாய்?
.
.
.

காதலின் ஒட்சியேற்றம்

20/08/2007


ஒரு வேதியியற்பொருளை
உள்ளங்கையில்
வைத்தாற்போல்
அவ்வளவு குளிர்ச்சியானது
உனது முகம்...

மாசற்ற வெண்மைக்கு
சட்டென
உன்னைத் தெரிவேன்...

உன் கவர்ச்சிப் பிரகாசத்தில்
கொஞ்சத்தை தரச்சொல்லி
தோழிகள் கேட்கக் கூடும்...
கொடுத்து விடாதே!

எப்போதும் நினை!
ஹிட்லரைப் போல
கொடுமையானதோ
அன்றி
கணிதத்தைப் போல
சிக்கலானதோ
அல்ல காதல்.

காதல் உண்மையானது.
உலகத்தின் கோட்பாடே
உண்மைகளைச் சோதிப்பதுதானே?

இனிமேலும்,
ஆற்றங்கரையின்
இளங்குளிரில்,
தனிமைத் திரியில்
காமச் சுடர்  - மெல்ல
துளிர் விடும்
சமயங்களில்...
காதலைக் கடியாதே!
.
.
.

காதலின் இரண்டாம் பாகம்

16/08/2007


இரண்டு நாட்களுக்கு
உன்னைப் பற்றி
எழுதாவிட்டாலும்
என்னவோ போலிருக்கு...

என் முதற்கவிதைக்கு
மட்டுமல்ல
என் முனகல்களுக்கும்
நீ தான் சொந்தக்காரி...

வெடிபலவன் செடியில்
உனக்கு
இஷ்டம் போல...
என்னை
வேடிக்கை மட்டும்
பார்க்கின்றாயே?

நாசமாய்ப் போகட்டும்
தெஸ்தெஸ்திரோன்.
காதலின்
அவஸ்தைகளைத்தான்
தாங்க முடியவில்லை...

நீ
திடமாகவே மறுத்தாய்
அதற்காகவே வெறுத்தாய்...
தவணை முறையில்
தாடி வளர்க்கும் நான்
சில காலங்களுக்கேனும்
உன்னை
மறக்கப் போவதில்லை!..
வேறு என்ன செய்ய முடியும்?
ஒருதலைக் காதலில்
சராசரிக்கும் குறைவான
ஒரு காதலனால்?
.
.
.

Sunday, September 5, 2010

என் முட்களில் வாழ்பவள்!


சிரிக்க வேண்டாம்
என்கிறாய்.
அழாமல் இருக்கப்
பார்க்கின்றேன்...

நானோ
தத்தி தத்தி
நடை பழகும்
சிறு குழந்தை.
நீ என் மழலைகளில்
சொக்கு கின்றாய்.
ஆனாலும் தாயல்ல!

மறந்து விட்டாய்.
நானும் ஆண் என்பதை
ஏனோ மறந்து விட்டாய்.

எல்லாம் சொல்லச்
சொல்கின்றாய்...
மறைத்தது
நிஜங்கள் தான் தோழி!
ஆனாலும் அசிங்கங்கள்.


உனக்காக செங்கம்பளம் 
வைத்திருக்கிறேன்.
ஆனால் 
சிறைக்குள் இருப்பதாய் 
சொல்கின்றாய்.


பெண்ணே நீ
சித்திரம் கேட்கின்றாய்.
உன் கை விலங்கை
உடைக்க
இரும்புத் துண்டை
அனுப்பி வைத்தேன்.

நீ விடியலுக்காக
வானம் பார்க்கின்றாய்.
நான் உன்
கண்ணீர்த் துளிகளை
ஏந்துகின்றேன்.

முயற்சிக்கிறேன்.
நீ கேட்கும் சித்திரத்தை
வரைய முயற்சிக்கிறேன்...

உனக்காக
நட்சத்திரங்கள் வைத்திருக்கின்றேன்.
மாலையாக இட்டுக் கொள்.

எண்ணுகின்றேன்
கம்பிகளை.
உன் அன்பெனும்
மனச் சிறைக்குள்
நான்...

உன் கனவுகளை
யாரும் கவர்ந்திருக்கலாம்.
சொல் மீட்டுத் தருகிறேன்.

ஊமையாக்கப்பட்ட
இந்தக் கொலுசுகள்
உன்னுடையவை தானா?

நன்றாகச் சொல்
நான் உன் நண்பன் தானே?
காத்திருக்க வைக்கின்றாய்
நானென்ன கடனாளியா?

புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
இருந்தும்
புரியாமல் தவிக்கின்றேன்...
நடந்தவை நல்லவையா
அல்லது
நடப்பவை நல்லதற்கா?

யாருமற்ற தூரத்தில்
சிறு ஒளி.
நான்
பெண்களை மதிப்பவன்.
உன் சின்ன விரலைத் தருவாயா?
ஒன்றாக நடந்துசெல்வோம்...
.
.
.

நீ என்கிற நான்!


காதலிக்கின்றேன்.
பிரிந்து சென்ற உன்னை
இன்னும் காதலிக்கின்றேன்.
வில்லன் யார்?
சமுதாயம் என்று பெயர்.

நீ நீயாகவும்,
நான் நானாகவும்
இருந்து தொலைத்திருக்கலாம்...
ஏன்
நீ நானாகவும்,
நான் நீயாகவும் ஆனோம்?
நம்மை
வீழ்த்திப் பார்த்ததில்
என்ன சுகம் கண்டதோ
இந்தக் காதல்?

காதல்...
ஒன்று கண்ணில் தோன்றி
கருவறை அடையும்.
மற்றயது கண்ணில் தோன்றி
கல்லறையில் முடியும்.
முன்னையது
போற்றப்பட்ட காதல்,
வரம் வாங்கி வந்த காதலர்கள்.
பின்னையது
தூற்றப்பட்ட காதல்,
சபிக்கப் பட்ட காதலர்கள்.

நாம் கூட
வரம் வாங்கியதால்
சபிக்கப் பட்டவர்கள்...

என் உயிரைத் தொட்ட
முதல் பெண் நீ.
உன் உணர்வைத் தொட்ட
முதல் ஆண் நான்.

என் தவறுகளைத்
தெரிய முன்பே
என்னைக் காதலித்தாய்...
தெரிந்த பின்
இன்னும் காதலித்தாய்.

ஒருவனுக்கு ஒருத்தி
அந்த ஒருத்திக்குள்
ஒரு தீ!
அதுவே காதல் என்பாய்.

உன்னை எனக்காய்
அர்ப்பணித்தாய்.
அதற்காகவே நானும்
ஆர்ப்பரித்தேன்...

நாம்
சேர்ந்து வாழ்வது பற்றி
என்னை விட அதிகம்
கனவுகள் சுமந்தவள் நீதான்.

நீ நாளை பற்றி
அதிகம் பேசினாய்.
நான் உன்னைப் பற்றி
அதிகம் யோசித்தேன்...

நாம் இருவரும்
சேர்ந்து வாழ வேண்டும்
என்பது மட்டும் தான் காதலா?
உன் உறவுகளுக்காய் நீயும்,
என் உறவுகளுக்காய் நானும்
பிரிந்து நின்று
சோகம் பகிர்கிறோமே
இதுவும் காதல் தான்...

உடலைச் சார்ந்த காதலாய்
இருந்திருந்தால்
ஓடிப் போயிருக்கலாம்...
இது
உயிரைச் சார்ந்தது அல்லவா?

என் இதயத்தை
எடுத்துக் கொண்டால்
எனக்கு வலிக்குமென்று,
உன் இதயத்தையும்
என் இதயத்தையும்
என்னிடமே விட்டுச் சென்றவள்
நீ!
இன்னும் நீ
என் இதயத்தில் தான்...

என்னைப் பிரிவதாய்
எவ்வளவு அழுதாய்.
நான் அழவில்லை!
கண்ணுக்குள் இருக்கும் நீ
கரைந்து விட மாட்டாயா?

நான் பொய் சொல்வதை
விரும்பாதவள் நீ.
எங்கேயும் பார்த்துக் கொண்டால்
நலத்தை மட்டும் விசாரிக்காதே!
.
.
.

காதலும் வாழ்க்கையும்!
10/07/2006
என்னைத் துவைத்து
ஏமாற்றக் கொடியில் 
காயப்போட்டது வாழ்க்கை...
காரணம் காதல்!

தலையணையைத் தான்
அடிக்கடி 
மாற்ற வேண்டியிருக்கிறது...
தினம் இரவுகளில் 
அழுது தொலைப்பதால்...

கேலிப் பேச்சுக்களைத்தான் 
தாங்க முடிவதில்லை...
நிலவினதும்,
காற்றில் ஓடும் சருகினதும்...

வீட்டுச் சுவரின் 
எல்லா ஆணிகளிலும் 
என்னைப் பற்றிய விமர்சனங்கள்.

எதிர் பார்த்த தோல்விகளூடு  
நித்தம் நகர்கின்றேன்...

உன் முகவரி தேடி வரும் 
வசந்தங்கள் 
இப்போதெல்லாம் 
என்னை 
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

தாமரை இலைமேல் 
தண்ணீர் போல் 
வாழ்ந்து முடிக்கச் 
சபிக்கப் பட்டது... 
உன்னால் தான்!

மௌனங்களையே 
அதிகமாகப் பேச 
பழக்கிக் கொடுத்து 
வருகின்றேன்... 
உதடுகளுக்கு.

பண்பைப் படித்து 
பொறுமையை அறிந்திருந்தாலும் 
நாகரீக உடையில் 
நானொரு நடைப் பிணம்தான்...

நான் தான் முயலவில்லையோ 
உன்னிடம் முடிவைக் கேட்க?
முயன்றிருக்கலாம்...
காற்றின் முயற்சிதானே 
கத்தரீனா சூறாவளியும்?

இதற்கு மேல் 
அவகாசம் எதற்கென்றா 
தலையாட்டி பொம்மையாய் 
இன்னொருவனுக்கு தலை சாய்த்தாய்?
.
.
.

ஒரு சூரியனைச் சுட்டுப் போட்டவள்!எந்தவொரு 
நிசப்தப் பொழுதுகளிலும் 
அதிர்ச்சியை உண்டாக்கக் கூடிய 
பார்வைகள் பொருந்தியவள் நீ!

உன் பார்வைகளால் தான் 
முதன் முதலில் 
பௌர்ணமியை மறந்தேன்...

உன் பழகும் 
விதங்களின் முன்னால் 
அழகு தோற்றுப் போக 
நான் உன்னைத் தெரிந்தேன்...

தீ 
எத்தனை நிஜமோ,
தென்றல் 
எத்தனை நிஜமோ,
அத்தனை நிஜமானதடி 
காதலும்!

உன் உதட்டின் 
அசைவுக்குள் தான் 
அடைந்து கிடக்கின்றது 
என் வாழ்க்கை.

நீ என்னை 
ஏற்பது பற்றியோ 
அல்லது 
மறுப்பது பற்றியோ 
எனக்குக் கவலையில்லை!

என்னில் கொஞ்சம் 
மீதி வைக்கிறேன்...
நினைவுகளைப் போலவே 
உன் பங்கிற்கு 
நீயும் 
என்னைத் தின்று தீர்.!
.
.
.

மரண நீரோடையில் ஒரு காதல் பயணம்!


ஒரு மழைக்கால
மாலை வேளையில்
யன்னல் விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
என்னை நனைத்தது
கண்ணீருடன்
உன் ஞாபகம்...

நீ உன்னை எறிய
நான் சிதறி ஆகிப்போன
ஆயிரம் பிசுங்கான்களிலும்
நீயே சிரித்தாய்.
அழகான
அந்த விபத்தின் பெயர்
ஏனோ காதலாக இருந்தது...

காலங்கள் கழித்து,
" காதலை
சேர்த்து வைப்பதிலும்
பிரித்து வைப்பதில்
அப்படியென்ன
ஆனந்தம் கொள்கிறது பூமி? "
எனக்கேட்க வைத்தாய்.

எனக்குச் சந்தேகமெல்லாம்,
மெழுகுவர்த்தி மீதே
பாவம் கொள்ளும் நீயா
என் அழிதலையும்
சகிக்கப் பழகிக்கொண்டாய்?

முகாரியே!
நீ அறிய வாய்ப்பில்லை.
உன்னை உருவாக்க
என்னையே
துளையிட்டுக் கொண்ட
ஒரு புல்லாங்குழல் தான் நான்.

எனக்கும்
நிலவுக்கும் இடையிலான
செங்கம்பளப் பாதையில்
உன் காலடித் தடங்கள்
இன்னமும் அழியவில்லை.

மரண நீரோடையில்
ஒரு ஒற்றைப் படகிலே
என்னை
ஏற்றிச் செல்கிறது காதல்!
.
.
.

பேரூந்து வேளை


பெண்மையின் 
அத்தனை நளினங்களையும்
பேரூந்து வேளையில்,
ஜன்னல் ஓரமாய்


ன்

னி

ல்

காணலாம்.
அப்போதெல்லாம்...
உன் விளிம்புகளில் 
வழுக்குவது
அந்தச் சூரியன் மட்டுமல்ல.
இந்தத்
தீப்பொறியும் தான்!
.
.
.

இனங்காணப்படாத அழகி!


சமீப காலங்களில் - நீ
ஏற்படுத்திய தாக்கங்களை
உன் ஆரம்ப கால
நடப்புக்களில்
நான் அவ்வளவாக
உணரவில்லை...

நட்சத்திரத் துண்டங்களை
தூரிகை முனை ஒன்றால்
தொட முடிந்தால்
இனங்காணப்படாத அழகி
உன்னில் இன்னும்
அழகு சேர்ப்பேன்...

எழுத எழுதத் தீராத
மந்திரப் பேனாவைப் போல
சேர்ந்து வாழும் போது
நம் இளமை தீராதிருக்க
ஒரு வரம்
வாங்கி வைத்திருக்கிறேன்.
சம்மதமா?

இப்போதெல்லாம்,
மழையின் சாரல்
கண்டுவிட்டால்
ஓடிச் சென்று நனைகிறது
உன் ஞாபகங்கள்.

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நீ கெட்டிக் காரிதான்.
காதலிலும்
அதைத்தானே செய்கிறாய்?

யாரும் கூறாத வார்த்தைகளில்
காதலை
மௌனமாகச் சமர்ப்பிக்கிறேன்.
உன் உள்ளங்கைக்குள்
அதைப் பத்திரமாக
வைத்துக் கொள்வாயா?
.
.
.

Saturday, September 4, 2010

எனது கைவண்ணம் III

உங்கள் எண்ணங்களுக்கு ...

.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.


.
.
.