Tuesday, December 20, 2011

சின்னச் சின்னக் கவிதைகள்தொட்டதும் அதிர்கிறேன்.
மின்னாலும்,
உன்னாலும்!

*

கூந்தலைப் பரப்பிவிட்டாய்.
மிரண்டுபோய்
ஒளிந்துகொண்டது
இரவு.

*

தேன் தொட்ட பலாச்சுளைகள் -
உன் மேலுதடும்,
கீழுதடும்.

*

நீ என்னை 
அலங்கரிக்கின்றாய்...
ஞாபகத்தில் வந்து நின்றது
நேர்ந்துவிட்ட ஆடு.

*

இக்கணமே செத்துப்போவோமா
என்கிறாய்...
வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே
நம் உடல்கள்!

*

எந்தப்பூக்களும் 
தங்களைத் தாங்களே
பிய்த்துக் கொள்வதில்லை.
காதலில் மட்டும்தான்
அப்படிச் செய்வதற்கும்
அனுமதியட்டை கிடைக்கின்றது!

.
.Monday, December 12, 2011

நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டுஉனக்கு என்னிடம் பிடித்ததே
எதற்கும் இணங்கும்
இந்த மௌனம் தான் என்று
தெரிந்ததும்
விழுந்து உடைந்தன -
உனக்காக
சேர்த்து வைத்திருந்த
யேர்மன் தேசத்து
வார்த்தைக் கண்ணாடிகள்!


நான் கவிதைகளின்
காதலன்.
நீயோ கடனட்டைகளின்
சேமிப்பகம்!
உனக்கு கவிதை பிடிக்காது
என்பதற்காக
நான் குற்றவாளி
என்று அர்த்தமில்லை!


நிராகரிக்கப்பட்டவனின்
உணவுத்தட்டிலிருந்து
இத்தாலிய உணவுகளை
எதிர்பார்க்கும் பெண்ணே!
எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால்
எட்டியா உதைவாய்?
சரி, உன்னை என் குழந்தையாக
ஏற்றுக்கொள்கிறேன்.
காறித் துப்புகிறாயே!
பரவாயில்லை,
உன்னை கடலலையாக
நினைத்துக் கொள்கிறேன்.


ஒரு கணம் நின்று கேள்!
நிராகரிக்கப்பட்டவனின்
உணவுத்தட்டென்பது
எதிர்பார்ப்புக்களால் மலம் களிக்கப்பட்ட
ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவுமல்ல!


.
.

Sunday, December 11, 2011

வாழ்க்கை எனும் சூத்திரம்மக்கு மனிதா!
சொர்க்கம் என்று நிச்சயமாக

எதுவுமில்லை.
அது இங்கே தான் இருக்கிறது....

சிலருக்கு போதையின் வடிவில்
( மண் போதை, மது போதை,
பண போதை, பதவி போதை,
பெண் போதை, பொன் போதை 
எல்லாமும் தான்......)
சிலருக்கு காதலின் வடிவில்,
சிலருக்கு காரின் வடிவில்,
சிலருக்கு i-phone இன் வடிவில்,
சிலருக்கு android இன் வடிவில்..........
ஆசைப்பட்டதை அடைந்துவிட வேண்டும்.
எப்படி?
நியாயமாக ஆசைப்பட்டு,
நேர்மையாக அடைந்துவிட வேண்டும்.


வாழ்க்கை எனும் சூத்திரத்தில்
குழம்பிக்கொள்ள எதுவுமில்லை.
அதை இலகுவாக்க ஒரே வழி -
தலைகீழாக வைத்துப்படிக்கும்
சூத்திரத்தை
நேராக வைத்துப்படியுங்கள்
அவ்வளவே!


நாளைக்கு உண்பதற்காக
இன்றைக்குப் பட்டினி கிடப்பதில்
அர்த்தம் இல்லை.
இளமையை
சேமிக்கப் பயன்படுத்திவிட்டு,
முதுமையில் எதையும்
செலவழிக்கப் போவது கிடையாது!
கால இயந்திரம் 
கண்டுபிடிக்கப்படும் வரை
இறந்த காலத்தை மீண்டும் வாழ்வது
இப்போதைக்கு சாத்தியமில்லை.
மறந்துவிடாதீர்கள்!


இன்பமுற வாழுங்கள்....
பால் போல நுரைக்க நுரைக்க,
மூங்கில் போல தழைக்கத் தழைக்க!


.
.

Wednesday, December 7, 2011

prof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்!ஜனவரி 8, prof. Stephen Hawking அவர்களது 70தாவது பிறந்த தினம், அவரை மனதார வாழ்த்திச் சிறப்பிக்கும் முகமாக பகிரப்படும் பதிவு இது.
Happy Happy Birthday Dear Stephen Sir............ (:-D)

அறிவியலில் ஆர்வமுள்ளவர்களிடம்,  “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி யார்?” என்று கேட்டால், தயங்காமல் சொல்வார்கள் ஸ்டீபன் ஹௌகிங் (pro. Stephen W. Hawking) என்று. இத்தனைக்கும் அவர் ஒன்றும், ஹொலிவூட் படங்களில் வரும் விஞ்ஞானிகளைப் போல விசில் அடித்தபடி, ஒற்றைக் கையால் கார் ஓட்டுபவரோ அல்லது தனது வசீகரிக்கும் பேச்சாலும் கவர்ந்திழுக்கும் கண்களாலும் பெண்களை தன் வலையில் விழ வைப்பவரோ அல்ல. அவரை முதன் முதலில் பார்க்கும் யாரையும் பரிதாபப்பட வைக்கக் கூடிய நிலையில் இருப்பவர். ஆம், உண்மையில் அவர் ஒரு நோயாளி!.


அவர் ALS/MND எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இங்கு ALS என்பது Amyotrophic Lateral Sclerosis இனையும், MND என்பது Motor Neurone Disease என்பதையும் குறிக்கின்றது. இந்த நரம்பியல் நோயால் வருடந்தோறும் உலகம் முழுவதும் 350,000 பேர் பாதிக்கப் படுவதாகவும், 100,000 பேர் இறந்துபோவதாகவும் International Alliance of ALS/MND Associations http://www.alsmndalliance.org/ கூறுகின்றது. அந்த நோயைப் பற்றிக்கூறுவதானால், அந்த நோய் வந்தவர்களால் எழுந்து நடமாட முடியாது, சக்கர நாற்காலிதான் கதி. கை, கால்களை செயற்படுத்த முடியாதபடி முடக்கி விடும். பேச முடியாது, உணவை தாமே உண்ண முடியாத நிலை. கண்கள் மட்டுமே அசையும், மூளை இயங்கும். தங்களின் ஒவ்வொரு அசைவிற்கும் அடுத்தவரை முற்றுமுழுதாக நம்பியிருக்க வேண்டிய பரிதாபகரமான நிலை! எதிரிக்கும் வரக்கூடாத நிலை. இதனால் மனிதர் சோர்ந்து விட்டாரா என்று கேட்டால், இல்லை என்றே அவர் சாதனைகள் அடித்துச் சொல்லும். தன்நம்பிக்கையில் மனிதர் அசகாய சூரர்! 


என்னைப் போல பலரும் அவரை பிரமிப்புடன் பார்ப்பதற்கு காரணங்கள் ஏராளம் உண்டு. மிக முக்கியமானது யாதெனில், 1988 ம் ஆண்டு, முட்டாள்கள் தினத்தில் வெளியிடப்பட்ட A Brief History of Time எனும் அவரது புத்தகம் தான். உலகையே புரட்டிப்போட்ட புத்தகம் அது. வெளியிடப்பட்ட நாள் முதல் விற்பனையில் சாதனை படைத்து, அதிகளவான பிரதிகள் விற்கப்பட்டதுடன், 40 பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் அது. அந்த ஒரு புத்தகம் மூலம் உலகையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்து, தான் யார் என்பதை இந்த உலகுக்கு காட்டினார் ஸ்டீபன்.


அந்தப் புத்தகத்திலே அவர்,
காலம் மற்றும் வெளி, விரிவடையும் பிரபஞ்சம், இயற்கையின் ஆதார விசைகள், Black Holes எனப்படும் கருந்துளைகள், பிரபஞ்சத்தின் உருவாக்கம்,   Worm Holes எனப்படும் புளுத்துளைகள் மற்றும் காலப்பயணம், Theory of Everything என்பவற்றை ஆராய்ந்து கட்டுரையாக எழுதியிருந்தார். அது முதற் கொண்டு, அவர் சொல்பவற்றை இந்த உலகமே செவிமடுத்துக் கேட்க ஆரம்பித்ததோடு, அவரை ஐன்ஸ்ரினுக்குப் பிறகான சிறந்த பௌதிகவியலாளராகவும் ஏற்றுக் கொண்டது.
இன்றுவரை அவர் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றிய படியும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை வழங்கியும் பௌதிகவியலிற்கு பெரும் பங்காற்றிவருகிறார். இன்றைய சந்ததியினர் மத்தியிலும் அவர் வெளியிட்டு வரும் வேற்றுக்கிரக வாசிகள் மற்றும் காலப்பயணம் பற்றிய கருத்துக்கள் வெகு பிரசித்தம் வாய்ந்தவை.ஸ்டீபன் ஹௌகிங்கின் வரலாற்றுத் துளிகள் சில :-

பிறப்பு :
ஜனவரி 08, 1942ம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட் நகரில். சரியாக கலிலியோ கலிலி இறந்து 300 ஆண்டுகள் கழித்து!   


கல்வி :
11ம் வயதில் St. Albans School பின் University College, Oxford. ஹௌகிங் விரும்பியது கணிதம் பயில, அவர் தந்தை பயிலச் சொன்னது வைத்தியம். ஆனால் University College இல் கணிதம் இல்லாததால் அவர் தெரிவு செய்தது பௌதிகவியல்! யார்யாருக்கு என்ன தேவை என்று இயற்கைதான் தெரிவு செய்கிறது போல....

3 வருடங்கள் கழித்து, அதிகம் அலட்டிக்கொள்ளாமலேயே, இயற்கை விஞ்ஞானத்திற்காக first class degree ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.   
பின்னர், பிரபஞ்சவியலை அதுதான் cosmology ஐப் பற்றி ஆராய கேம்பிரிட்ஜ் சென்றார். ஆனால் அந்த வேளை, அந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய அங்கு யாரும் இல்லை. எப்படி இருப்பார்கள்?

தனது Ph.D ஐப் பெற்றதுடன் Gonville மற்றும் Caius College களில் முதலில் சக ஆராய்ச்சியாளராகவும், பின்னர் தொழில் ரீதியான முனைவராகவும் ஆனார்.

1973 ல் Institute of Astronomy (வான சாஸ்திரத்திற்கான கல்வி நிறுவனம்) ஐ விட்டு விலத்தி, 1979 ல் Department of Applied Mathematics and Theoretical Physics (பிரயோக கணிதம் மற்றும் கோட்பாட்டு பௌதிகவியலுக்கான துறை) இற்கு வந்தார். 
அத்துடன் 1979 முதல் 2009 வரை Lucasian Professor of Mathematics என்ற பதவியையும் வகித்தார். இந்தப் பதவியானது, 1663 இல் Henry Lucas என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தப் பதவியானது முதன் முதலில் Isaac Barrow என்பவராலும் பின்னர் 1669 ல் Isaac Newton ஆலும் வகிக்கப் பட்டிருந்தது. ஆமாம் அப்பிள் பழம் திடீரென்று தலையில் விழுந்ததால், அதன் மேல் கடுப்பாகி புவியீர்ப்பைக் கண்டுபிடித்த அதே Isaac Newton தான்.

தற்போது Cambridge இல் உள்ள DAMTP ல் கோட்பாட்டுப் பிரபஞ்சவியலுக்கான நிலையத்தில் ஆராய்ச்சி இயக்குனராகப் பணியாற்றுகின்றார். ( Director of Research at the centre for Theoretical Cosmology, at DAMPT in Cambridge )


வாழ்க்கை :
மனைவி மற்றும் பிள்ளைகள் தன்னை விட்டுப் பிரிந்து சென்றாலும், தன்னை அன்பாக நேசித்துப் பாசத்துடன் கவனித்துக் கொண்ட தாதியை திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.
அவர் இன்னும் பல காலம் சிறப்பாக வாழ்ந்து, எதிர்கால சந்ததியினருக்கும் தனது அறிவை வாரி வழங்க வேண்டும் என்று இயற்கையை மனதார வேண்டிக்கொள்வோம்.


*மேலதிக விரிவான தகவல்களுக்கு விக்கிப்பீடியாவில் http://en.wikipedia.org/wiki/Stephen_William_Hawking


* Discovery Channel இல் அவர் வழங்கிய நிகழ்ச்சிகளைக் காண http://dsc.discovery.com/tv/stephen-hawking/

.
.

Monday, December 5, 2011

மனதில் பட்டவை - 2நாம் எல்லோரும் பைனாகுலர் பயன்படுத்தும் போட்டி ஒன்றில் பங்குபற்றிக் கொண்டிருக்கிறோம். நம் எல்லோரிடமும் விலை கூடிய, அழகான பைனாகுலர் ஒன்று தரப்பட்டிருக்கின்றது. அதை புத்திசாலித் தனமாகப் பயன் படுத்தி வெற்றி பெறாமல், தேவையில்லாத அற்ப விடயங்களில் எல்லாம் நாம் அந்த பைனாகுலரை பெருப்பித்தும், கிட்டவாக்கியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அநத் பைனாகுலரைத் திருப்பி, அதன் மற்றைய பக்கத்தால் பார்க்கும் போது, அது காட்டும் பொருள் சிறிதாகவும், தூரத்திலும் தெரிவதை பெரும் பாலும் மறந்து விடுகிறோம். அப்படி மறந்து விடுபவர்களில் பலர் இந்தப் போட்டியில் தோற்றும் விடுகிறார்கள். 
அந்த பைனாகுலரின் விஞ்ஞானப் பெயர்................வாழ்க்கை!*ஓடும் நீர் ஆவியாகி மேலெழுவதும், அந்த நீராவி மழையாகி நிலத்தில் பெய்து மீண்டும் ஓடும் நீருடன் சேர்வதும், அதன் ஒரு கிளை தனியாகச் சென்று உறைந்து போய் பனிக்கட்டி ஆவதும் வாழ்க்கை வட்டத்தின் இயல்பு நிலைகள். என்ன இந்த நீர் நமக்கு அடங்காமல், கட்டுப்பாடுமில்லாமல் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று ஆத்திரப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஓடுவதால் தான் அது நன்நீர். தேங்கி நின்றால் அதன் பெயர் சாக்கடை! * *எல்லோருக்கும் தாங்கள் செய்யும் செயலுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது, கருத்துக்கள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவர்கள் பேச வேண்டிய இடைவெளிகளை உங்கள் வார்த்தைகளால் நிரப்பாதீர்கள். Don't full fill theirs socks with your bloody legs. உண்மையான குற்றவாளிகளுக்கும் நீதி மன்றத்தில் தங்களை நியாயப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்!
* * *
குறுக்கு வழிகளில் பணம் பார்த்து, தங்கள் குற்றங்களை மூடி மறைத்து சமூகத்தில் தங்களையும் பெரியவர்களாகக் காட்டிக் கொள்பவர்களைப் பற்றிப் பேச எதுவும் இல்லை! பணமும் இளமையும் இருக்கும் வரை வாழ்க்கை இனிமையானது போலத்தான் தெரியும். நேர்மையானவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கேலியும் செய்வார்கள். ஆனால், எதிர்காலத்தில் ஏதாவதொரு வாழ்கைப் புள்ளியில், ஏன் இப்படி வாழ்ந்தோம் என்று அவர்கள் வருத்தப் படுவார்களேயானால், அதுவரை காலமும் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை மொத்தமும் அர்த்தமற்றதாகிப் போய்விடும். 

* * * *
வீட்டுப் பூனை முற்றத்தில் தவறி விழும் குருவிகளை அடித்துத் தின்பதில் இப்போதெல்லம் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆரம்பத்தில் தடுக்கவும் செய்தேன். ஆனால் இப்போது அப்படியில்லை. பூனையின் உணவுச் சங்கிலியில் குருவியும் உண்டல்லவா! இயற்கையின் விதிகளை நாம் மீறக்கூடாது. தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தானே இயற்கையின் நியதியும் கூட. குருவிக்கு இறக்கையும் பூனைக்குப் பற்களுடன் கூடிய பசியும் இருக்குமாறு இயற்கை பார்த்துக்கொண்டதில் அர்த்தம் உள்ளது.  .
* * * * *


நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மன நோயாளிகள் தான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான். அவன் எப்போதும் தன்னைவிட வலிமை குறைந்த, பலவீனமான, தன்பேச்சைக் கேட்கக்கூடிய ஒருவனை, குரூரமாக ரசித்து வீழ்த்தி, இரத்தத்தைப் பார்த்துப் பேரின்பம் காண தேடிக்கொண்டிருக்கிறான். அப்படி ஒருவன் கிடைத்தவுடன் அந்த வன்முறையாளன் வெளியே வரவிரும்புகிறான்! நல்ல வேளையாக நாகரீக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி மற்றும் சட்டதிட்டங்களின் காரணமாக, அந்த வன்முறையாளனை நாம் பெரும்பாலும் கட்டுப்படுத்தி விடுகிறோம். ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த வன்முறையாளனை வெளியே விட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்கிறோம். 


உதாரணமாக சொல்வதானால், தினம் செய்திகளில் வருபவை தான், மருமகளை எரிக்கும் மாமியார், மனைவியின் களுத்தை வெட்டும் கணவன், குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போடும் தாய், தற்கொலை குண்டுதாரிகள், போர் வீரர்கள் இப்படி ஏராளம்....... 


ஒருமுறை கோழி வெட்டும் கடையில் போய் நின்று பாருங்கள், அங்கே கோழி வெட்டுபவர், அந்தக் கோழி கதறக் கதற, அதன் களுத்தை அறுக்கவும், அதன் சூடான இரத்தம் அவர் கையில் பட்டவுடன், அவரின் விரல்கள் விழித்துக் கொண்டு, அந்தக் கோழி துடிக்கத் துடிக்க, அதன் இறக்கையை குரூரமாக பிய்த்தெடுக்கும். பின் அதன் நெஞ்சைப் பிளந்து, அதன்  துடித்துக்கொண்டிருக்கும் இதயம்,சூடான ஈரல் என ஒவ்வொரு உறுப்பாக அறுத்து.................... நாமும் அதை இரசிக்கவே செய்வோம். ஒரு முறை youtube இல் போஸ்மார்ட்டம் செய்வதை ஆவலுடன் பார்த்தேன். எனக்குள்ளிருக்கும் வன்முறையாளனை உணர்ந்து கொண்டதும் அப்போதுதான்! உங்களில் ஒவ்வொருவரும், இப்படி ஏதாவதொரு கணத்தில் உங்களுக்குள் இருக்கும் அந்த வன்முறையாளனை உணர்ந்திருப்பீர்கள், மறைக்காமல் நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுங்கள்!


     


.
.