Skip to main content

Posts

Showing posts from January, 2012

உளவியல் உண்மை

அப்பா இன்றி வளர்பவர்கள் சமூகத்தில்  தன்நம்பிக்கை இன்றி  வளர்கிறார்கள்... அம்மா இன்றி வளர்பவர்கள் சமூகத்தில் நல்ல பெண்களை சட்டெனக் காதலிக்கிறார்கள்... அப்பாவும், அம்மாவும் இன்றி வளர்ந்தவர்கள் சமூகமே வேண்டாமென்று தனிமையுடன்  ஒதுங்கியே வாழ்கிறார்கள்! . .

அதன் பெயர் இருட்டு!

அது ஒரு கனத்த பறவை. அலகுகள் நீண்ட,  இறக்கைகள்பெருத்த  தந்திரப் பறவை. அழகான எதுவுமற்ற,  பாடவும் தெரியாத குரூரமாகக் கொலைசெய்யும் கொடிய பறவை.  கடும் பசியுடன் வெகு நேரம் காத்திருந்து, இயற்கை ஆடைமாற்றச் சென்ற ஒரு ஆரவாரமற்ற கணத்தில், சூரியனை  கூரான அலகால் கொத்திச் சென்று உயரமான மரத்தின் மேலிருந்த தன் கூட்டுக்குள் ஒளித்துக்கொண்டது..... எப்போதோ கொத்தித் தின்ற சுவையற்ற நிலவின் மிச்சத்தை வானம் நோக்கித் துப்பியது! அநேகமாக, வேறொரு கூட்டிலிருந்து பதப்படுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு சூரியன் நாளை காலை  நன்றாக விடிவதற்குள் நழுவி விழக்கூடும்! விழாவிட்டால், எப்போதோ களவாடிவைத்த மற்றுமொரு சூரியனை அமெரிக்கா மீண்டும்  வானுக்கே அனுப்பும் அல்லது வியாழனை அணுகுண்டால் எரிக்கும். எனவே கவலையில்லை! . .

மைக்ரோ கவிதைகள்

கவிதை - 01 : கடற்கரை விளிம்புகளில் அணைத்துக் கொள்ளும் குடை நிழல்களிலும், பூங்காவில் வண்ணத்திப் பூச்சிகளால் பரிமாறப்படும் முத்தங்களிலும், இளவேனிற் காலத்தில் காமத்தைச் சீண்டியபடி கை கோர்த்துச் செல்லும் கணவன் மனைவியிலும், விரைவில் முடியாத ஒற்றையடிப் பாதைகளிலும், திரையரங்கின் ஒளியற்ற பின்னிருக்கைகளிலும், வகுப்பறையின் கிசு கிசுக்கள் நிறைந்த வெண் சுவர்களிலும்.... தன்னை  இலவசமாக விளம்பரப்படுத்த  முயற்சிக்கின்றது காதல்! * * * * * கவிதை - 02 : எந்தப் புல்லாங்குழலும் இசையைத் தனக்குள் ஒளித்து வைத்திருப்பதில்லை. உன் உதடுகள் எந்த முயற்சியும் எடுக்காதவரை... அவை வெறும்  மூங்கில் துண்டுகள் தான்! * * * * * கவிதை - 03 : என்னுடைய  எந்தக் கவிதையை விடவும் மிகவும் சிறப்பானது எதுவும் எழுதப்படாத ஒரு வெற்றுத்தாள். . .