Skip to main content

ஹலோ டயரி - 1



I am back :
இரண்டு மாதங்களின் பின்னரான என் முதல் பதிவு இது. திரும்பத் திரும்பக் காதலையும், கவிதையையும் மட்டுமே எழுதி எழுதி , போரடித்து விட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள் “here  and there"  அதுபோல போனால் போகுது என்று , இரண்டு அல்லது மூன்று பேர் தினமும் என் வலைப் பதிவுக்கு வந்து போவார்கள். அவர்களை கொஞ்ச நாளைக்கேனும் எதுவித காயங்களோ அன்றி சேதாரங்களோ இன்றி இருக்கவைக்க வேண்டுமென்று கட்டாய ஓய்வெடுத்துக் கொண்டேன்.  
இதோ இப்போது வந்துவிட்டேன்!
Get ready for அறுவை!

முன் கதைச் சுருக்கம் (கொஞ்சம் serious ஆக) :
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கவிதை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக எழுதுகிறேனா இல்லையா என்று தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். கவிதையின் மேல் அப்படியொரு காதல். அதில் பல மன நிறைவைத் தந்திருக்கின்றன. பெற்ற குழந்தையை முதல் தடவையாக எதிர்பார்ப்புடனும், வாஞ்சையுடனும் பார்க்கும் தாயைப் போலத்தான் நானும் கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.

எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அது 1999ம் ஆண்டு. எனது முதல் கவிதை வானொலியில் ஒலிபரப்பப் பட்ட ஆண்டு. அப்போது லோக்ஷன் அண்ணா சக்தி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்(இப்போது அவர் ”வெற்றி” நாயகன்). அவரும் அஞ்சனனும், ஞாயிற்றுக் கிழமைகளில் என்று நினைக்கின்றேன், “சக்தியின் முத்துக்கள் பத்து” எனும் திரையிசைப் பாடல்களை தர வரிசயாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை நேயர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக வழங்கி வந்தார்கள். தாம் விரும்பும் பாடலுக்கு நேயர்கள் தபாலட்டை மூலம் வாக்களிக்க வேண்டும். கவிதையும் சேர்த்து அனுப்பலாம். வாக்குகளின் அடிப்படையில் பாடல்கள் தர வரிசைப் படுத்தப் படும். குறித்த பாடலுக்கான சிறந்த கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டு, வானொலியில் அது வாசிக்கப் படும்.    
அப்படித்தான் நானும் “அமர்க்களம்” படத்திலிருந்து “சத்தமில்லாத தனிமை.....” எனும் பாடலுக்கு “சத்தமில்லா தனிமையையும் யுத்தமில்லா உலகத்தையையும் கேட்ட மனிதா, இவை கிடைக்க வில்லை என்பதால்...” எனத் தொடரும் கவிதையை அனுப்பி வைத்தேன். எதிர்பார்ப்புடன் தான் இருந்தேன். அந்தப் பாடலின் முறை வந்தபோது (தர வரிசையில் முதலாமிடம்), லோக்ஷன் அண்ணா, என்னுடைய கவிதையை வாசித்த போது எனக்கு அப்படியே புல்லரித்து விட்டது. "Butterfly in stomach"   என்பார்களே, அப்படியொன்றை உணர்ந்தேன். பாடசாலையில் நண்பர்கள் பாராட்டினார்கள். இப்படி ஆரம்பித்த கவிதை எழுதும் ஆர்வம், படிப் படியாக வளர்ந்து, இன்று இப்படிப் புலம்பும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

இடையில், ஆர்வக் கோளாறில், “என் வழியில்...” என்னும் பெயரில், கவிதைப் புத்தகம் அச்சடித்தேன்.(மூன்றே மூன்று தான், அதற்கே அச்சகத்தார் ஆயிரம் ரூபாய் எடுத்தார்; என் தலயில் மிளகாய் அரைத்தார்) அதில் ஒன்றை, வவுனியா நூலகத்திற்கு மிகப்பெருமையாகக் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் ஏழ்மை நிலையால், நூலகர் என்னைப் பரிதாபமாகப் பார்த்த பார்வை இருக்கிறதே! என்னவொரு அவமானம்!!

பின்னர் தினமுரசு வாரமலரின் 700வது பதிப்பிற்கு, தேன் கிண்ணம் பகுதியில் கவிதைப் போட்டி ஒன்றை நடாத்தினார்கள். “காதலும் வாழ்க்கையும்” எனும் தலைப்பிட்டு அனுப்பி வைத்த என்னுடைய கவிதையும் அவ் வார மலரில் இடம்பெற்று ஆனந்த அதிர்ச்சி அளித்தது. அதற்குப் பின்னர் என்னுடைய பல கவிதைகள் தினமுரசிலும், சுடர் ஒளியிலும், மித்திரனிலும் வெளிவந்து கிச்சுக் கிச்சு மூட்டின.
இப்படியாக இன்று வரை என்னுடைய பரிசோதனைகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். அதில், சமீபத்தில் தொடங்கிய வலைப் பதிவு என்பது எனக்கு வெற்றிதான். இப்போது பார்த்தால் பத்து வருடங்கள் என்பது சற்று அதிகமாகத் தான் படுகிறது. இருந்தும் என்ன பயன். கவிதையால் ஒரு நன்மையும் நடந்து விட வில்லை.
”இவ்வளவு மட்டமா யாராவது கவிதை எழுதுவாங்களா?”  என்றாவது யாராவது சொல்லி இருக்கலாம்.....ஆனால்!.

மன விரக்தியில், வலைப் பதிவு கூட வேண்டாம் என்றுதான் கடந்த இரு மாதங்களாக ஒதுங்கியே இருந்தேன். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்களே, அதேபோல என்னாலும் சும்மா இருக்க முடியவில்லை.  
இதோ இப்போது மீண்டும் வந்து விட்டேன்.

இனி matter :
இத்தால் யாவருக்கும் தெரிவித்துக் ”கொல்” வது யாதெனில், 
கொஞ்ச நாளைக்கு கவிதை வேண்டாம் என்று இருக்கிறேன். (சந்தோக்ஷ சிரிப்புக் கேட்கிறது) “ பாவம். பொழைச்சுப் போ!”....
No more  matter, only குவாட்டர்!!!!
(குறிப்பு : கவிதையைத் தவிர, மது, மாது போன்ற இன்னபிற போதை தரும் விடயங்களை நான் நாடுவதில்லை. மேலே சொன்னது சும்மா ஒரு பஞ்ச்)
.
.
.


Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...