அனைவருக்கும் எனதன்பார்ந்த வணக்கம்!
இறுதியாக இவ் blog இல் எழுதியது 2012 ல், இப்போது 2019. சரியாக 7 வருட இடைவெளி.
இந்த 7 வருடங்களும் வாழ்க்கையின் மிகச்சிறந்த படிப்பினை தந்த 7 வருடங்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.
இந்த 7 வருடங்களில் உலகமே நிறையவே முன்னேறி விட்டிருக்கின்றது, குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பில். கைத்தொலைபேசி பாரிய வளர்ச்சி கண்டுவிட்டது. 2012 ல் ஒரு Pc செய்த மாயாஜாலங்களை விடவும் அதிகமாக 2019 ல் சிறு கைத்தொலைபேசி செய்கின்றது.
சமூக வலைத்தளங்கள் வேறு கட்டத்தை அடைந்துவிட்டன. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூட கூடிய சக்தியாக அவை மாறி விட்டிருக்கின்றன.
இலட்சக்கணக்கான இலவச செயலிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இது செயலிகள் சூழ் உலகு. செயலிகள் இன்றி எதுவும் அசையாது.
பிட்காயின் (Bitcoin) 2012 ல் ஒன்று 13 US$ விற்றது, 2017 ல் ஒன்று 20000 US$ ற்கு சென்றது. இன்றைய தேதியில் ஒரு Bitcoin 10000 US$ ற்கு விற்பனையாகின்றது.
போதையில், சுய சிந்தனை இன்றி, தள்ளாடியபடி 2012 ல் Bitcoin வாங்கியவர்கள், 2019 ல் பில்லியனர்களாக இருக்கும் சுவாரசிய சம்பவங்களும் உண்டு.
அதே போல 2012ல் ஆயிரக்கணக்கான Bitcoin களை mining செய்துவிட்டு, அக் கணினி வன்தட்டுக்களை e- waste க்குள் எறிந்து விட்டு, 2019 ல் அவற்றைத் தேடித்திரியும் சோக கதைகளும் உண்டு. Bitcoin பற்றி ஒரு தொடரே எழுதலாம், எழுதும் நோக்கம் உண்டு, பின்பு விலாவரியாக எழுதுகின்றேன்.
அடுத்து கிரிக்கட். கிரிக்கட்டிலும் பல மாற்றம் மற்றும் முன்னேற்றம். பல ஜாம்பவான்கள் இளைப்பாறி விட்டிருக்கின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என புதியவர்கள் கலக்கத் தொடங்கி விட்டார்கள். 2012ல் ஆரம்ப கட்டத்தில் இருந்தவர்கள் இப்போது கோலோச்சுகின்றார்கள். சச்சின் சச்சின் என அதிர்ந்த காலம் போய், தோனி தோனி என மாற்றம் பெற்று, சம காலத்தில் கோலி கோலி என ஆகிவிட்டிருக்கின்றது. இது வருங்காலத்தில் பாண்ட் பாண்ட் Rishab Pant) என்றும் மாறலாம், அல்லது கில் கில் (Shubman Gill) என்றும் மாறலாம். முயற்சி அவர்கள் கையில். IPL ல் இன் மூலம் இளையவர்கள் நிறைய கற்றுக் கொள்கின்றார்கள், நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்கின்றார்கள், கோடிகளில் சம்பாதிக்கவும் செய்கின்றார்கள்.
கிரிக்கட்டின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவே தென்படுகின்றது. ஏனென்றால் நீண்ட நாட்களாக டெஸ்ட் கிரிக்கட் போரடிக்கின்றது, 5 நாட்களை 4 நாட்களாக மாற்ற வேண்டும் என்கிற கருத்து சிதைபடும் வண்ணம், கடந்த இரண்டு வருடங்களில் test cricket is best cricket என கூறக்கூடிய வகையில் சிறப்பான பல போட்டிகள் இடம்பெற்றிருந்தன. டெஸ்ட் கிரிக்கட் இன்னும் வாழும். ஒரு நாள் கிரிக்கட்டும் அவ்வாறே. கிரிக்கட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை.
அடுத்து அரசியலைப் பார்த்தால், அது உள் நாடாகட்டும் அல்லது உலக அரசியல் ஆகட்டும் சாக்கடை சாக்கடை தானே. ஆட்சிக்கு வருபவன் தன் வரப்பிரசாதங்களை மட்டுமே பார்க்கின்றான். 2012 ல் இருந்து 2019 வரை மாற்றம் பெறாத ஒரே விடயம் அரசியல் வாதிகள் மட்டுமே. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போகின்றார்கள்.
2012 ல் நூறு ரூபாய்க்கு இருந்த பண மதிப்பு, 2019 ல் மிகவும் குறைந்து விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இலங்கையின் பண மதிப்பு நாளுக்கு நாள் இழக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கென்று சரியான ஒரு தலைமை இன்னமும் அமையவில்லை. இவர்களை நினைத்தால் தமிழ் நண்டுக்கதை தான் ஞாபகம் வருகின்றது. சுருக்கமாக சொன்னால் வடக்குத் தேய்கின்றது தெற்கு வாழ்கின்றது.
இலங்கை வாழ் தமிழர்களுக்கான விடிவு அடுத்த 15 ஆண்டுக்குள் இல்லவே இல்லை என்பது சத்தியமான வேதனை தரும் உண்மை.
இப்படியாக கடந்த 7 வருடங்களில் பல மாற்றங்கள்.
இவற்றைப் பற்றியும் இன்னும் பல புதிய விடயங்களையும் வரும் இடுகைகளில் பேசலாம்.
இன்னும் எழுத நிறைய விடயங்கள் உள்ளது.
பார்க்கலாம்.
Comments
Post a Comment