திருக்கைலாயத்திலே இரவு நாடகங்களை முடித்துக் கொண்டு 52 இன்ச் டிவியை அனைத்துவிட்டு படுக்கைக்கு வந்த பார்வதி மிகவும் ஜோசனையில் இருந்த சிவனை பார்த்து "சுவாமி! என்ன பலத்த ஜோசனையில் இருக்கிறீர்களே என்ன விஷயம்" என கேட்டார்.
"அதொன்றும் இல்லை பாரும்மா, இவன் என்னுடைய அதீத பக்தன் சிவதாசன் இருக்கின்றானே அவன் மகாஜன சம்பத ஒன்றை வாங்கினான். சரி அவனும் கொஞ்சம் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருக்கின்றான் தானே, அதனாலே அவனுக்கு சூப்பர் பரிசு 5 கோடி பணப்பரிசு விழும்படி செய்தேன். சந்தோசத்தில் துள்ளிக் குதித்த அவன், இரவு படத் தட்டிலிலே அவ் டிக்கட்டை வைத்து, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு விட்டு படுக்கச் சென்றான்.
காலை எழுந்து பார்த்த போது டிக்கட் தீப் பிடித்து முழுதுமாக எரிந்து விட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போன அவன் என்னை படு மோசமாக திட்டித் தீர்த்து விட்டான். அது தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது" என்றார்.
அதற்கு பார்வதி" ஏன் நீங்கள் அந்த டிக்கட் எரிவதை தடுக்கவில்லை பிரபு ?" எனக் கேட்டார்.
நீண்ட பெருமூச்சொன்றை விட்ட படி சிவன் சொன்னார்" இவனுக்கு 5 கோடி பணம் கிடைத்தால் இவன் என்னவெல்லாம் செய்வான் என்பதை என் ஞானக் கண் மூலம் பார்த்ததும் திகைத்துப் போனேன். அதனால் நானே அவ் டிக்கட்டை எரியும் படி செய்தேன்".
இதனை சற்றும் எதிர் பார்க்காத பார்வதி" அப்படி என்ன எதிர்காலத்தில் விபரீதமாக நடக்கின்றது" என ஆச்சரியமாக கேட்டார்.
"5 கோடி கிடைத்த சந்தோசத்தில் கட்டுப்பாடு இன்றி இஷ்டப்படி வாழத் தொடங்குகின்றான். பங்களா, பென்ஸ் கார் என பணக்கார வாழ்க்கை வாழத்தொடங்கும் அவனுக்கு தவறான நட்புக்கள் வந்து சேர்கின்றன. மது, மாது, போதை என்ன அவன் பாதை மாறுகின்றது. கடைசியில் சூதாட்டத்தில் அவனுடைய மொத்த பணம் மற்றும் சொத்துக்களை இழந்து நடுத் தெருவிற்கு வந்து, மறுபடியும் டிக்கட் எடுத்து பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசையில் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் சாப்பிடாமல் டிக்கட் எடுத்து தோற்றுப் போய் வறுமையால் பட்டினியாக ஒருநாள் பாதையில் செத்துக் கிடக்கின்றான்.
அதனால் தான் நான் அவ் டிக்கட்டை எரித்தேன்.
பணம் பெரிதாக இல்லாமல் விட்டாலும் தற்போது அவன் வாழும் வாழ்க்கையே சிறப்பானது, சந்தோசமானது. அது அவனுக்கு நிச்சயம் ஒருநாள் புரியும்.
சிற்றின்பங்கள் ஒரு மனிதனை எவ்வளவு பாடு படுத்துகின்றதுபார். மனக் கட்டுப்பாடு இல்லாவிட்டால் இப் பூலோகத்திலே மனிதர்கள் நிர்க்கதி ஆகி விடுவார்கள். ஆசைகள் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டிவிக்கிறது பார்.
பல்லக்கில் சென்றாலும் கூட அது தவறான பாதை என்றால் மோசமான இடத்தையே சென்றடையும், மாறாக ஆரம்பத்தில் முள் மீது நடந்தாலும் அது சரியான பாதையாக இருந்தால் சிறப்பான இடத்தில் கொண்டு சேர்க்கும்.
என் பக்தன் மீது கொண்ட அதீத பிரியத்தால் அவனை காப்பாற்றும் பொருட்டு அவனது டிக்கட்டை எரித்தேன். நான் செய்தது சரி தானே...?" என்றபடி பார்வதியைப் பார்த்தார் சிவன்.
பாரும்மா ஆழ்ந்த சயனத்தில் மூழ்கியிருந்தார்.
சற்று தூரத்தில், மென்நிருட்டில் சிவனின் ஆதங்கத்தை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்துவிட்டு "கட் " சொன்னார் இயக்குனர்.
*****
Comments
Post a Comment