பாங்கும் வேலையும் :
பாங்கில் வேலை செய்பவர்கள் என்றவுடன் இந்த சமூகத்தால், ஏனென்றே தெரியாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சதா பணத்துடன் புழங்குகின்றார்கள் என்றோ அல்லது முற்றிலும் குளிரூட்டப்பட்டு, அழகுபடுத்தப் பட்ட அந்த விசாலமான அறையில் தங்களை வரிசையில் காக்க வைத்து கீபோர்ட்டில் என்னமாய் கிளிக்கு கிறார்களே என்ற பிரமிப்பிலோ தெரியாது.
உண்மையில் அதற்குப் பின்னுள்ள சூட்சுமங்கள் பலருக்குத் தெரிவதில்லை.
இப்படித்தான் தனியார் வங்கியொன்றின் தமிழ் பிரதேசக் கிளையின் பதவி ஒன்றிற்கு விண்ணப்பித்து, அவர்களின் அழைப்பின் பேரில் நேர்முகப் பரீட்சைக்குப் போய் இருந்தேன். ஆங்கில மொழியில் எழுத்துப் பரீட்சை வைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் நால்வரை அடுத்த கட்டத்திற்குத் தெரிவு செய்தார்கள்.
அடுத்த கட்டமென்பது ஒரு கண்னாடி அறைக்குள், தலை விரி கோலமாய் இருக்கும் வயதான பெண்மணி, தேவைக்கும் அதிகமாய் சிரித்தபடி, ஆங்கிலத்தில் அபத்தமாக கேள்விகள் கேட்பார், கேட்டார்.
முடிவுகளை அறிந்து கொள்ள மாலை வரச் சொன்னார்கள். சென்றேன். என்னைத் தெரிவு செய்ய வில்லை என்றார்கள். காரணம் கேட்டேன். சொல்ல மறுத்தார்கள். பரீட்சையில் தேறியவர்களில் மும் மொழிகளிலும் ஓரளவுக்காவது பரிச்சயம் கொண்டவன் நான் மட்டுமே என்பதை நினைவு படுத்தினேன்.
அவர்கள் கவரும் உடற்தோற்றத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள்!!
இதை அவர்கள் பத்திரிக்கை விளம்பரத்திலேயே சொல்லி இருந்திருக்கலாம்; சிகப்பான, கவரும் தோற்றமுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். மீறி வருபவர்கள் அவமானப் படுத்தப் படுவார்கள் என்று!. அல்லது பரீட்சை எழுதும் போதாவது பரீட்சை தாளைப் பறித்து விட்டு,”இது பணம் படைத்தவர்களுக்கும், பகட்டுத் தனமானவர்களுக்குமான வேலை, பரதேசியான உங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை” என்றாவது அந்தப் பெண்களில் யாராவது சொல்லியிருக்கலாம். இப்படி கூப்பிட்டு வைத்து உணர்வுகளை நிர்வாணமாக்கத் தேவையில்லையே!!!
பாங்கில் உட்காந்திருப்பவர்களைப் பாருங்கள் நிச்சயம் அதிகார வர்க்கங்களின் வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர்களின் தகுதியென்பது இங்கே இரண்டாம் பட்சம் தான். அதிலும் சிலர் பணம் கட்டி வேலையில் சேர்ந்து விட்டு அவர்கள் பண்ணும் அலப்பரை இருக்கிறதே! என்ன பெரிதாக வேலை பார்க்கிறார்கள், இலக்கங்களைக் கணினியில் பதிகிறார்கள், வெறும் இலக்கங்கள், பூச்சியங்கள்!! வாடிக்கையாளரைக் கவரத்தான் அழகானவர்களை வங்கிகள் விரும்புகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அப்படி இருப்பதில்லயே! வாடிக்கையாளர்களை எங்கே மதிக்கிறார்கள், அத்தனையும் அலட்சியம். திமிராக மட்டுமே பேசுகிறார்கள். அதிகார வர்க்கங்களின் அடி வருடிகள் என்கிற மமதை!!எமது ஊரில் இப்போதெல்லாம் அதிகமான தனியார் வங்கிகள் வரத் தொடங்கியுள்ளன. இப்போதெல்லாம் இங்கே அரசியலை அடுத்து அதிகமாகப் பேசப்படுவது; ஐந்து லட்ச ரூபாய் கட்டினால் அந்த வங்கியில் வேலை, நான்கு லட்ச ரூபாய் கட்டினால் இந்த வங்கியில் வேலை என்று.
இப்படித்தான் ஒருவர் பத்து வருடங்களுக்கும் மேலாக தனியார் வங்கி ஒன்றில் நிரந்தரமானதாக இல்லாமல் வேலை பார்த்து வந்தார். அதிகார வர்க்கங்களின் அடிவருடிகள் புதிதாக நிரந்தரமான வேலையைப் பெற்றுக் கொண்ட போதும், இவர் புற்கக்கணிக்கப் பட்டே வந்தார். இத்தனைக்கும் அவர் மிக்க நேர்மையாளன், கடின உழைப்பாளி. இத்தனை வருட காலம் காத்திருந்தும் பலனளிக்காததால், மிகுந்த மன வேதனையுடன் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டார்.
வங்கிகளுக்கு எப்போதுமே பணம் படைத்தவர்களும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் மட்டுமே முக்கியம். ஏனையோர் இரண்டாம் பட்சமே!
வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு ஆடம்பரமும், பகட்டுத் தனமுமே பிரதானமானவை. உழைப்பாளியின் வியர்வை மணம் அவர்களுக்குத் தேவையில்லாத விடயம் அல்லது அருவருக்கத் தக்க செயல்!
.
.
.
Comments
Post a Comment