உனக்கு என்னிடம் பிடித்ததே
எதற்கும் இணங்கும்
இந்த மௌனம் தான் என்று
தெரிந்ததும்
விழுந்து உடைந்தன -
உனக்காக
சேர்த்து வைத்திருந்த
யேர்மன் தேசத்து
வார்த்தைக் கண்ணாடிகள்!
நான் கவிதைகளின்
காதலன்.
நீயோ கடனட்டைகளின்
சேமிப்பகம்!
உனக்கு கவிதை பிடிக்காது
என்பதற்காக
நான் குற்றவாளி
என்று அர்த்தமில்லை!
நிராகரிக்கப்பட்டவனின்
உணவுத்தட்டிலிருந்து
இத்தாலிய உணவுகளை
எதிர்பார்க்கும் பெண்ணே!
எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால்
எட்டியா உதைவாய்?
சரி, உன்னை என் குழந்தையாக
ஏற்றுக்கொள்கிறேன்.
காறித் துப்புகிறாயே!
பரவாயில்லை,
உன்னை கடலலையாக
நினைத்துக் கொள்கிறேன்.
ஒரு கணம் நின்று கேள்!
நிராகரிக்கப்பட்டவனின்
உணவுத்தட்டென்பது
எதிர்பார்ப்புக்களால் மலம் களிக்கப்பட்ட
ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவுமல்ல!
.
.
Comments
Post a Comment