Skip to main content

ஹைக்கூவும் விளக்கமும்




நான் எழுதிய சில ஹைக்கூக்களிற்கான விளக்கங்களை என்னுடைய கோணத்திலிருந்து தர முயற்சிக்கின்றேன். எங்கே வேண்டுமானாலும் தோன்றலாம் ஹைக்கூ. முற்றத்தில், சாலையில், பூங்காவில்,கடற்கரையில், சினிமாவில், காதலியின் மடியில் ... இப்படி எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு ஹைக்கூவிற்கு இதுதான் சரியான விளக்கம் என்று எதுவும் அமைந்து விடாது. வாசிக்கும் நபர், அவருடைய மனநிலை, அவருடைய வாழ்க்கைச் சூழ்நிலை என்பவற்றைப் பொறுத்து ஒரு ஹைக்கூவினுடைய விளக்கமும் மாறுபடக் கூடியதாக அமையும். நான் தரும் விளக்கத்தில் இன்னொருவருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் அல்லது திருப்திதராமல் விடலாம்; திருப்தி தராது விட்டால் நல்லது. ஹைக்கூவின் தனித் தன்மையே அதுதானே!


1.
கிணற்றைப்போல்
தொட்டிக்குள்ளும்
நிலவு.

விளக்கம் :
அது பௌர்ணமி நிலவு தோன்றும் இன்னுமொரு பிரகாச இரவு. கிணற்றருகில் நின்றுகொண்டு வானம் பார்க்கிறேன். அடடா! என்ன அழகு. அந்த அழகியை தன் அருகினில் வைத்துக் கொள்ள, முப்பது நாட்களாய் வானம் தவமிருப்பது, நிச்சயம் தப்பில்லை. இயல்பாக கிணற்றுக்குள் பார்க்கிறேன், அங்கேயும் நிலவு இன்னும் அழகாய். அருகிலிருக்கும் தொட்டிக்குள்ளும் பார்க்கிறேன், அட! அங்கேயும் நிலவு.  தொட்டியின் நீரைத் திறந்து விட, வாய்க்கால் வழியாக நழுவிச் சென்ற நிலவை சட்டென உறிஞ்சிக் கொண்டது வாழைமரம். முழு நிலவிற்காக முப்பது நாட்கள் தவமிருப்பது வானம் மட்டுமல்ல!



2.
முத்தமிட்டாள் காதலி.
எழும்பவேயில்லை
பிணம்.

விளக்கம் :
அது ஒரு கப்பல் விபத்து. அழிவே கிடையாது என்று இறுமாப்புடன் கூறப்பட்ட கப்பல், பனிப் பாறையுடன் மோதுண்டு, இரண்டு துண்டாய் உடைந்தே போனது. உறைய வைக்கும் குளிரில், கடலுக்குள் வீசப்பட்டார்கள் அந்தக் காதலர்கள். காதலன் அக் கப்பலின் மேற் தள வேலைக்காரன், காதலி அங்கே சமையல் செய்பவள். நடுங்கிக் கொண்டிருக்கும் காதலியை, மிதந்து வந்த பலகையில் ஏற்றி அவளைக் காப்பாற்றி விட்டு, அந்தக் குளிரை தாங்க முடியாது உறைந்து சாகிறான் காதலன். கண் விழிக்கும் காதலி, காதனை அன்புடன் முத்தமிடுகிறாள். ஆனால், அவன் எழும்பவேயில்லை! அவர்களது காதல் அற்புதமானது. அவர்களது பெயர் எதிலும் குறிப்பிடப் படவுமில்லை, யாருக்கும் தெரியவுமில்லை. ஆனால் அந்தக் கப்பலின் பெயர் ’டைட்டானிக்’ காக இருக்க வாய்ப்புள்ளது.



3.
விபச்சாரி விரும்பவில்லை.
பல நிறங்களில்
ரோஜாச்செடி.

விளக்கம் :
அவள் ஒரு விபச்சாரி, இரவுத் தொழிலாளி. பகலில் வாழ்வதற்காக இரவில் தன் ஆடை அவிழ்ப்பவள். இரவுகளில் அவள் கசக்கப்படுகிறாள், கடிக்கப் படுகிறாள். சாராய நாற்றம் கொண்ட பற்களால் அவள் உதடுகள் தின்னப் படுகின்றன. அவள் அவற்றை விரும்புவதில்லை.  அவளிடம் வரும் எல்லோரும் அவளுக்கு ராஜாதான். ஆனால் எந்த இரவு ராஜாவாலும் அவள் மனுசியாக மதிக்கப்பட்டதில்லை. அவள் மன்மத பீடத்தில் கவனம் கொள்ளும் ராஜாக்களுக்கு அவள் மனதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பகலில் மட்டுமே அவள் தன் இக்ஷ்டம் போல வாழ்கிறாள். அவளுக்கு ரோஜா வளர்க்கப் பிடிக்கும். அவை அவளை தொந்தரவு செய்வதில்லை.ஒரு நிறத்தில் தான் அத்தனையும் பூக்கின்றன. பல நிறங்களில் உள்ள ரோஜாவை அவள் ஏனோ விரும்பவில்லை!



4.
சுதந்திரதின விழாவில்
வழங்கப்பட்டது
கூண்டிலடைத்த வெண்புறா.

விளக்கம் :
அவ்வருட சுதந்திரதின விழாவை, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகியை, விழா நாயகனாக முன்நிறுத்தி நடாத்திக் கொண்டிருந்தது ஒரு தனியார் நிறுவனம். தியாகியின் சேவை போற்றப்பட்டது, புகழப்பட்டது. விழா முடிவில், வந்திருந்த அனைவருக்கும் பரிசாக கூண்டிலடைத்த வெண்புறா அத்தியாகியின் கையால் பெருமையுடன் வழங்கப்பட்டது. புறா சலனப்படவில்லை. பழகிவிட்டது!  



5.
கண்ணாடியில்
அழகி விம்பம்.
எதிர்காலப் பிணம்.

விளக்கம் : 
அழகு என்பதே உடற்பொலிவுதான் என்று ஆகிவிட்ட காலமிது. உடல் அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் அக ஒழுக்கத்திற்கு கொடுப்பதில்லை. அந்தரங்க உறுப்புகளின் அளவிற்கும், அமைப்பிற்கும் இருக்கும் சலுகையில், மனதின் ஆழம் அடிபட்டுவிடுகிறது, அங்கீகரிக்கப் படுவதில்லை. கறுப்பென்றால் முகத்தை சுழித்து அருவருக்கும் பெண்களுக்கு (தங்களை அழகிகளாக நினைத்துக் கொள்ளும்) இந்த நாட்டில் பஞ்சமும் இல்லை. அழகு என்பது நிலையானதல்ல, அது ஆபத்தானதும் கூட என்று அவர்கள் உணர்வதற்குள்..........sorry, it's too late. அழகிகளாக இருப்பவர்கள் மூப்படைந்து, தசைகள் சுருங்கி, இறுதியில் இறந்தும் போகிறார்கள். ஆமாம், எங்கே போனது அவர்கள் அழகு?


* * * * *


Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...