என்ன இந்த வாழ்க்கை
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை
காலனிடம் இழந்தவர்களுக்கு
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லையா?
வேலை விட்டால் வீடு
வீடு விட்டால் வேலை என்று
சுருங்கிவிட்ட வாழ்க்கை.
நீ அதிகம் விரும்பிய
மழையையோ, மலர்களையோ
கடற்கரையையோ, காதல்பாடல்களையோ
அனுமதிக்காத வாழ்க்கை.
வேலை நேரம் கழிந்து
எஞ்சிய வாழ்க்கையை
வீடு முழுக்க விரவியிருக்கும்
உன் அடையாளங்களும்
அவை கொண்ட
நினைவுகளும் தின்கின்றன!
சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ
இன்னும் மோசம்
இன்னும் மோசம்!
காலையில் தரையிலிருந்து
என்னை எழுப்பிவிட்டு,
குளிக்கும் போதும்,
குடிக்கும் போதும்,
சமைக்கும் போதும்,
சாப்பிடும் போதும்,
துவைக்கும் போதும்,
உலர்த்தும் போதும்,
படிக்கும் போதும்,
சுவரை வெறித்துப்பார்க்கும் போதும்
கூடவே இருந்துவிட்டு...
பிந்திய இரவில் தவறாமல்
கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை.
நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில்,
ஆசையாய் மீட்டும் வயலின்,
நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள்,
மௌனத்தைப் பேசும்
உன் சோடிக்கொலுசுகள்,
காதல் சொட்டச் சொட்ட
அனுபவித்து வாழ்ந்த
நம் அந்தரங்க அறையையும்
காலையில் எழுந்ததும்
திறந்துபார்ப்பேன்...
அந்த அறை முழுதும்
நிறைந்திருக்கும் உன் வாசமும்,
உன் நினைவுகளில் கலந்திருக்கும்
இளஞ்சூடுமே
அன்று முழுவதும்
என்னை உயிர் வாழச்செய்கிறன.
இப்போதெல்லாம்...
இன்னும் நீளாதா என ஏங்க வைத்து
விரைந்து மறைந்த மாலை வேளைகள்
நகரவே மறுக்கின்றன!
நீ அருகில் இருக்கையில்
இனிமையை அள்ளித்தெளித்த
பௌர்ணமி இரவுகள்...
இரக்கமென்பதையே மறந்து விட்டன!
ஒரு தாயைப்போல பாசமாக
தலை வருடி
என்னை மீண்டும் குழந்தையாக்குவாயே
அந்த கை விரல்கள் எங்கே?
நான் ஆசையாய் சாய்ந்து
அங்கலாய்க்கும் தோள்கள் எங்கே?
என்னிடம் பட படக்கும்
அந்தக் கண்கள் எங்கே?
என்னைச் சீண்டிப் பர்க்கும்
சிரிப்புகள் எங்கே?
அதோடு சேர்ந்து கொள்ளும்
வளையல்கள் எங்கே?
என்னைக் கடிந்துகொள்ளும்
உன் காதல் எங்கே?
என்னிடம் செல்லம் கொஞ்சும்
உன் காமம் எங்கே?
நெஞ்சில் புதைந்து ஆயிரம் கதைகள் பேசி
கொஞ்சிக் குலாவும் அந்த அழகு முகம் எங்கே?
ஆயுள் வரை என்னோடு
இருப்பதாக வாக்குத்தந்த
உன் வார்த்தைகள் தான் எங்கே?
இவற்றை எல்லாம் மறந்தா
உன்னை தீயில் இடச்சம்மதித்தேன்?
ஏன் சம்மதித்தேன்?
நீ பாதியிலேயே விட்டுச் சென்ற கோபத்திலா
அல்லது
நீ மீண்டும் வருவாய் என்கிற நம்பிக்கையிலா?
பேசாமல் அந்தத் தீயிலேயே
நானும் பாய்ந்திருக்கலாம்,
என்னையும் மாய்த்திருக்கலாம்!
இப்போது
கோபமும் தோற்று
நம்பிக்கையும் தோற்று
நடைப்பிணமாய்ப் போயிற்றேன்!
என்ன இந்த வாழ்க்கை
ஏன் இப்படிக்கொல்கிறதோ...
காதலித்த மனைவியை
காலனிடம் இழந்தவர்களுக்கு
வெற்றுச் சுவரை விட
வேறு மார்க்கமேயில்லை!
.
.
Comments
Post a Comment