ஹைக்கூ பகுதி - 2 அனைவரையும் வரவேற்கின்றது. ஹைக்கூ பகுதி - 1 ற்கு இங்கே சொடுக்கவும். http://theruppaadakan.blogspot.com/2011/11/blog-post_07.html .
ஹைக்கூ என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரக்கூடியது. ஏதோ வாசிக்க வேண்டும் என்றெல்லாம் வாசிக்கக்கூடாது. அப்படி வாசித்தால், வெறும் வார்த்தைகளாக மட்டுமே கண்ணுக்குத் தெரியும், எதுவும் புரியாது. ஹைக்கூவை மனதால் வாசிக்க வேண்டும். உண்மையில் ஹைக்கூ என்பது பூந்தோட்டத்தில் வீசும் மெல்லிய, இதமான சில்லென்ற காற்றை சுவாசிப்பதைப் போல சுகமான ஒரு அனுபவம். அதனை மெதுவாக, ரசித்துச் சுவைக்கும் போதுதான் அதன் வசீகரத் தன்மையை உணர முடியும்.
தவறாமல் தோற்கடிக்கிறது
எல்லோரையும்
வயிறு.
**
தாய்ப்பாலை
விற்றாள்.
குழந்தைக்கு உணவு.
**
இரவிலும்
குளிக்கின்றாள்
முதிர்க்கன்னி.
**
விளக்கைப்
பற்றவைத்தாள்.
கட்டுமரத்தின் அசைவு.
**
கால மாற்றம்.
பேரூந்தில்
ஜன்னல் தவிர்த்தது.
**
கலைந்தது வானம்.
கிணற்றுக்குள்
வாளி.
**
பூனைப் படத்தை
கொறித்துப்போட்டது
எலி.
**
பேசும் பொம்மை
வைத்திருந்தான்
ஊமைப்பையன்.
**
இருட்டுப் பாதையில்
வழிசொன்னது
அனுபவம்.
**
சிகரட்டில்
இல்லையே
எச்சரிக்கை வாசகம்!
**
உடைந்தது வானவில்
கையில்
சோப்பு நுரை.
**
தலை
குனிந்தது
சலூன் கண்ணாடி.
**
பலகாரப் பரிமாற்றத்தின்
பின்னர்
விலைபேசப்பட்டாள்.
**
சுவற்றில்
கோலம் போட்டது
மழைச்சாரல்.
**
பாலுக்கு அழுதது
விபச்சாரியின்
குழந்தை.
**
குழந்தைப் படங்கள்.
குழந்தை
இல்லாத வீட்டில்.
**
முற்றத்து வெள்ளத்தில்
மூழ்கியது
கப்பல்.
**
இருட்டியதும்
பூத்தன
மின்மினிப் பூச்சிகள்.
.
.
Comments
Post a Comment