பணக்காரர்களின்
காதல்
எப்படியிருக்கும்?
கரன்சி நோட்டுத்தான்
இவர்களின் காதல் குறியீடா?
இதயம் என்பதென்ன
இங்கே இலவம் பஞ்சா?
பணம் தான் இவர்களின்
பல்லாக்கு என்றால்
மனம் என்பதென்ன
வெறும் மண்ணாங்கட்டியா?
ஐயா!
பணம் பார்த்து
வருவதன் பெயர்
காதல் என்றால்
விபச்சாரத்தை யாரும்
விலக்கி வைக்க மாட்டார்களே?
பணம் என்பதெல்லாம்
வெறும் பகட்டுக்குத் தான்.
குணம் ஒன்று தான்
என் குறிக்கோளே!
தராதரம் பற்றிப் பேசவும்
ஒரு தகுதி வேண்டாமா?
நான் வாழ்க்கையில்
ரொம்பவே பட்டவன்.
ஆயினும்
ஒழுக்கத்தை
ஒழுங்காகக் கற்றவன்.
உங்கள் பணம் உங்களைத்
தோலில் சுமக்கும்.
என் காதல் என்னை
இதயத்தில் ஏற்றும்.
எது பெரிது?
நம்மிடம் என்ன இல்லை?
என்னிடம் பணம் இல்லை.
உம்மிடம் இதயம் இல்லை.
நம்மிடம் என்ன இல்லை?
முறை என்னும் சமன்பாட்டை
முயன்று தீர்த்தேன்.
முறை தான் இங்கே
முரண் கொள்கிறதாம்...
x இற்கும்
y இற்கும் இங்கு
என்னய்யா சம்பந்தம்.
எல்லாம்
படைப்பின் சித்தம்.
பத்தாயிரம் ரூபாயில்
பட்டுப் புடவை,
நகை நட்டும் தருவார்
உன் அம்மா.
உனக்குப் பிடித்ததாய்
ஒரு வரி கேட்பாரா?
உன் தேவையும்
என் தேவையும்
ஒத்துப் போனதால் தானே
நமக்குள்
புது உறவே முளைத்தது...
பணம் படைத்த
பரதேசி
நாளை வருவான்.
தலையாட்டி பொம்மையே
தயாராய் இரு!
ஏமாற்றி விட்டதாக
இறுமாப்புக் கொள்ளத் தேவையில்லை...
எப்போதோ செத்து விட்டேன்.
இழவு முடித்து
செலவுக்கு வாருங்கள்...
.
.
.
Comments
Post a Comment