Skip to main content

இலகு தவணையில் மரணம்!


பகலொரு பொழுதும்,
இரவொரு பொழுதுமாய்
இருமுறை சாக வேண்டும்.

சாவு....
யாரும் நிச்சயப் படுத்திச் சொல்லுங்கள்?
முழுவதுமாய் வாங்குவேன்.
தவணை முறையில் என்றாலும்...
குத்தகைக்குக் கூடக் கிடைக்காதா?

நிலைக்குத்தாக அடுக்கப்பட்ட
மனிதக் கூட்டத்துக்குள்
எனக்கான சாவு ஒழிந்திருக்கிறதா?

விரல்கள் வெளித் தெரியும்
புதை குழிகளையும் தாண்டியாயிற்று.
நைல் நதி பக்கத்தில்
நீண்ட பள்ளத்திலாவது
ஒழிந்திருக்கிறதா?

ஒருவேளை
சாவதற்கும் ஏதும் தகுதி வேண்டுமா?

பரணில் ஒட்டடை கூடிய
உப்புக் கண்டங்களுக்கு
நடுவில்காய்கிறது
மனமும், முதற்காதலும்.

முதற்காதல் -
விதம் விதமாய்
அழுதுத் தீர்த்த பிறகும்
என்னை
அலங்கரித்துப் பார்க்கும் தோல்வி!

மனம் -
ஒரு வித்தைக் காரியின்
செப்படியில் சிதறிப்போனது.
புதுப்பிக்க வழியில்லை.

எப்போதுமே
வாழத்தெரிந்தவன்
ஒரு ஜாதி.
வாழத்தெரியாதவன்
மறு ஜாதி.
யாராவது சொல்லுங்கள்?
நான் எந்த ஜாதி?

நித்தியங்களுக்குள் நிராகரிக்கப்பட்டு,
வேதனைகளால்
விரும்பி அணைக்கப்பட்டு
வாழ்க்கை எட்டி உதைத்ததால்
சாவை விரும்பி நிற்கிறேன்.
சாவதற்குத் தகுதி போதாதா?

என் சாவை சில வேளைகளில்
நிலவும்,
தென்றலும்
ஏற்க மறுக்கும்...
நிலவைத் தொட்டதில்லை!
தென்றலைப் பார்த்ததில்லை!
சாவது மேல்.
ஒரு முறை
செத்து விட்டுப் போகிறேன்.

பகலொரு பொழுதும்,
இரவொரு பொழுதுமாய்.......
.
.
.

Comments

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

நண்பனின் காதலி!

07/03/2005 என் இனிய நண்பா! நாளுக்கு நான்கு வேளை  உன் இடக்கை இரு விரலுக்குள்  புகைக்கும் முத்தம் இடும்  சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்! ரசித்து, ருசித்து, புகைப்பாய்... வட்டமாய்,  சதுரமாய்,  கோள வடிவமுமாய் வகை வகையாய் புகை விடுவாய். உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை... என்றார்கள்; என்பார்கள்! நீ சிகரட் என்றவுடனே  எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் - என் வயிறு... வாங்கத் தருவது நான் தானே? இனி ஒரு போதும் இல்லை  இதுவே இறுதி -  உன் சத்தியம்  மறுநாளே தகர்ந்துபோக  தீர்மானங்கள் தொடரும்... நீ நண்பனானது எத்தனை விசித்திரம்.. எனக்கும்  சிகரட்டுக்கும்... சிகரட் உனக்கு கோயில். எனக்கோ குப்பை! எனக்குத் தெரியும்  உன் விரல்களால்  சிகரட்டைத் துப்பி எறிய முடியாது! என்னிலிருந்து பிரிக்க முடியாத  காதலைப் போல... சிகரட்டுக்கும் காதலுக்கும்  ஒற்றுமை கேள்... சிகரட் - பற்றவைத்துப் புகைக்கையில்  நெருங்கி வரும் மரணம்... காதல் - பற்றிக்கொண்டால் ...