Sunday, June 6, 2010

பிணமாகும் போது முத்தமிட்டாள் காதலி!


இது நிச்சயம் ஒரு காதல் கதை தான்.
அவன் பெயர் ...........எதுவாகவும் இருக்கட்டுமே.அவன் அழகானவனோ அல்லது அழகற்றவனோ, உயரமானவனோ, அல்லது பணம் படைத்தவனோ 
நண்பரகள் சூழ வர, நட்டநடுவில் ஸ்டைல் ஆக வந்து வீர வசனம் பேசி, ஒரு ஐந்தாறு பேரை அடித்து வீழ்த்துபவனோ எவனாகவும் இருக்கட்டுமே.
நான் சொல்ல வந்த விடயமே வேறு.
அவன் காதலிக்கிறான்....

அவள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்குப் பேரழகியல்ல.இவனைக் கேட்டால் " மச்சான், இவளைப் போல அழகான பொண்ண நான் பார்த்ததே இல்ல மச்சான், சாகடிக்கிற மாதிரியே பாக்கிறாடா.கண்ணாலேயே
சிரிக்கிறாடா , ஆனா அவ தனியா இருக்கும் போது பக்கத்தில போனா மட்டும் ஏனோ கணக்கெடுக்கிறாளே  இல்லையேடா மச்சான், அவள் என்னைக் காதலிக்கிறாளா  இல்லையா எண்டே தெரியலையே" என்று புலம்பித் தொலைப்பான்.அதற்கு அவன் நண்பர்கள் சொல்லும் நம்பிக்கை வசனங்களும் இன்ன பிற வஸ்துக்களும் நமக்கெதற்கு?

இப்படித்தான்.......
அன்று காலை வழக்கம் போல பஸ்சுக்காக தரிப்பிடம் வந்து நின்றவள், என்றைக்கும் இல்லாமல் பதட்டத்தை உணர்ந்தாள்.வழக்கம் போலவே
இவளுக்காக அவன் காத்துக் கொண்டிருந்ததை இவள் கடைக் கண்ணால் தெரிந்தாள். அவனை உசுப் பேற்றி அழகு பார்க்க ஏனோ மனம் வரவில்லை.
அடிக்கடி இவனையே பார்க்கும் அவள் இன்று ஒருமுறை கூடப் பார்க்காதது அவனை என்ன செய்திருக்கும்? ஒரு வேளை, வெள்ளை உடைப் பெண்கள் அவன் இதயத்தில் ஆணி வைத்து அடித்திருப்பார்களோ??

இதோ தரிப்பிடத்தில் நிற்காமல் சற்றுத் தள்ளி நிற்கிறதே அதுதான் இவர்களுக்கான பஸ். "தனியார் பஸ் சேவை இன்று இல்லை" என்று பின்னால் யாரோ யாருக்கும், இவனுக்கும் சொன்னது காற்றில் கரைந்தது.  

ஒருபக்கமாக சரிந்து , நிறைந்து வழியும் அந்த பஸ்சில், பின் பக்க கதவின் மிதி பலகையில் ஒருமாதிரி நிற்கவே இருவருக்கும் இடம் கிடைத்தது.
அவளை முதலில் ஏறவிட்டு மன்னிக்கவும் தொற்ற விட்டு பின் அவனும் தொற்றிக் கொண்டான். முதன் முதலாக , அவன் நேசிக்கும் பெண்ணின் இப்படி ஒரு அருகாமை அவன் எதிர் பார்க்காதது.
காதலிக்கும் யாரிடமும் கேட்டுப் பாருங்கள் நேசிப்பவரின் அருகாமை எப்படிப் பட்ட அனுபவம் என்று.
இதோ அவனின் அனுபவங்களை அவனே சொல்கிறான்:

" அடடா என் தேவதை அணைக்கும் தூரத்தில் நிற்கிறாளே , என்ன ஒரு வாசம் இவளுக்கு, என்னை இப்படி நடுங்கச் செய்கிறாளே? இவ்வளவு மென்மையானதா இவள் கூந்தல்? ஐயோ இப்படி வேர்கிறதே எனக்கு? 
என் நெஞ்சிலே அவள் சாய்ந்து கொண்டல்லவா வருகிறாள். இவள் விரும்பித் தான் அப்படிச் செய்கிறாளா என்ன? ஒரு வேளை என் இதயம் பலமாக அடித்துக் கொள்வது அவளுக்குப் பிடித்திருக்கிறதோ? அவள் காது மடலுக்குப் பின்னால் என்ன ஒரு அழகான மச்சம்? அடிக்கடி கூந்தலைக் கோதிக் கொள்கிறாளா  அல்லது வேண்டுமென்றே அவள் கூந்தல் கற்றை என்மேல் வீசுகிறாளா? எது எப்படியோ எனக்குப் பிடித்திருக்கிறது. இதோ என் கைக்குக் கீழே அவள் கை இரும்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறதே, மெல்லக் கையை கீழிறக்கி அவள் விரல்களைத் தொட்டுப் பார்ப்போமா? என்ன செய்வாள்? திட்டுவாளா ? முறைப்பாளா ?பரவாயில்லை. இவள் என் காதலி, எனக்கே எனக்கான அற்புதப் பெண்.தொட்டும் பார்த்தேன்.என்ன ஒரு மென்மையான விரல்கள்.
அட இவள் என்னை அனுமதிக்கிறாளே......
ச்சே! நினைக்கும் போதே அவள் கையை விலத்துகிறாளே!
என்ன ஒரு பெண் இவள். அவளை காதலிப்பவன் இப்படி அருகில் நின்று கொண்டிருந்தும் உணர்ச்சிகளை காட்டுகிறாளே இல்லையே? "

அவளின் அனுபவம்:
"இதற்காகத் தானே நானும் காத்துக் கொண்டிருந்தேன். இவன் அருகாமையை எப்படி உணர்கிறேன். என்ன ஒரு சந்தோசம் எனக்குள்! இவனுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது. சரியான முட்டாள் இவன். இவனுக்கு என் அனுமதியை எப்படிச் சொல்வேன்? என்ன இவன் இதயம் இப்படி அடிக்கிறதே!
அதுசரி இன்று தானே இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தது! காலையில் இருத்த பதட்டமும் இப்போது இல்லையே? இப்படியே இவன் என்னை அணைத்துக் கொண்டு காதலைச் சொல்ல மாட்டானா? நேசிப்பவனின் தொடுகை இப்படிப் பரவசமானதா? எனக்குள் என்ன ஒரு கிளர்ச்சி. வேண்டாம் கையை எடுத்துக் கொள்வோம். இல்லாவிட்டால் என்னை என்னால் கட்டுப் படுத்த முடியாமல் போய் விடும். என்னவன் தானே, என்மேல் பைத்தியமாக வேறு இருக்கிறான். அவனே காதலைச் சொல்லட்டும்!"

முடிவு :
சுபம் சொல்லிக் கதையை முடிக்கலாம் தான், ஆனால் என்ன செய்வது...
சந்தோஷ தருணங்களை விட சோக தருணங்கள் தானே நம் மனதில் எப்போதும் நிரம்பி வழியக் கூடியது!.ஹிட் கொடுக்க எனக்கும் ஆசை ஆகவே.....
   

பஸ் விர்ர் என்று வேகமாகச் சென்றுகொண்டிருக்க, கண்ணாடி வழியாக பின்கதவைப் பார்த்த ஓட்டுனர் " உள்ள ஏறுங்கப்பா, வாசல்ல நிண்டு கொண்டா காதலிப்பீங்க?, வந்து வாச்சாங்க" என்று சொல்லிக்கொண்டே முன்னால் பார்க்கவும், முன்னால் சென்று கொண்டிருந்த வண்டி அதிரடியாக நிற்கவும், மோதலைத் தவிர் பதற்காக, பஸ்ஸை விலத்தி இடதுபுறமாக, பிளாட்பாரத்தில்  ஏற்றவும், அவளை நோக்கி இரும்புத் தூண் விரைவாக வருவதைப் பார்த்த அவன், அவளைக் காப்பாற்றும் பொருட்டு, அவளைத் தனக்குள் மறைத்து, இரும்புத் தூணின் பலத்த அடியை தன் தலையில் வாங்கிக் கொண்டு கீழே விழவும் , அவனை அவள் அதிர்ச்சிப் பார்வை பார்க்கவும் , யன்னலின் வழியாக புதிதாக முளைத்த தலைகள் அவனை எட்டிப் பார்க்கவும் , விர்ர் என்ற பஸ் நிற்கவும் சரியாக இருந்தது.
கீழே இரத்தத்தின் மேல் கிடந்த அவனை, நல்ல மனங்கள் சில உண்மையான அக்கறையுடன் அள்ளிக் கொண்டு விரைந்தார்கள்.
அவளின் அழுகையை விட அவனின் நிலைமை நமக்கு முக்கியம் அல்லவா? . அவனைத் தொடருவோம்.


சற்று நேரத்திற்குப் பின், பின்பக்க மூளையில் ஏதோ ஒரு பகுதியில், ஏதோ பகுதிக்குச் சென்ற நரம்பில் பலத்த அடி பட்டதால், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு........
டாக்டர் அவன் இறப்பை உறுதிசெய்தார்! 

பின் குறிப்பு:

ஆண்களுக்காக: 
அதற்காக, அவள் ஒன்றும் அவனையே நினைத்துத் தன் வாழ்க்கையைப் பாழாக்கவில்லை.  இப்போது அவள் எங்கோ ஒரு வேற்று நாட்டில், ஒரு ஆண், ஒரு பெண் என்று பிள்ளைகள் பெற்று, சந்தோசமாக வாழ்வதாக கேள்வி . அவனின் பெயரை தன் மகனுக்கு வைத்திருப்பாளோ என்னவோ....
பெண்கள் எப்போதுமே அப்படித் தானே?? 

பெண்களுக்காக:
அதற்குப் பின், அவள் எந்த ஆண்மகனையும் அனுமதிக்காமல், குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து, அவன் பெயரை அதற்கிட்டு, அவன் நினைவாகவே வாழ்ந்து வருகிறாள் என்று சொல்லலாம் தான். ஆனால்......... 
பெண்கள் ஒரு போதும் அப்படி இல்லையே????

(முற்றும்)         

1 comment:

Anu said...

அருமை !!!!!!!!!!!!!!!!
தொடர்ந்து எழுதுங்கள்

Post a Comment