Monday, June 21, 2010

ஒரு பதிவாளன் பேசுகிறான்!தமிழ் பதிவுத் தளங்கள் இப்போது இணையத்தில் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. பதிவுகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதற்கிணங்க பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும், அறிந்த செய்திகளையும், தங்கள் சொந்தப் படைப்புக்களையும் பதிவுசெய்து அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.
அவற்றில் பல சிறப்பானதாகவும், பாராட்டத் தக்க வகையிலும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இணையத்திற்குப் புதியவன் என்றாலும் , ( ஏனென்றால் எங்கள் ஊரிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் broadband எனப்படும் அதி வேக இணைய இணைப்பு வந்துள்ளது )குறிப்பிடத் தக்க அளவு தமிழ் பதிவுத் தளங்களைப் பார்வை இட்டுள்ளேன் . இவற்றில் களிப்பூட்டும் அதாவது பல்சுவை விடயங்களைத் தாங்கி வரும் பதிவுத் தளங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற பதிவுத் தளங்களாகக் காணப் படுகின்றன. பெரும்பாலான தளங்களில் முக்கிய உள்ளடக்கங்களாக சினிமாவும், அதைச் சார்ந்து புதுப் படங்களின் 'சுடச் சுட"  விமர்சனங்களுமே இருக்கின்றன. ( சினிமா பற்றி பதியாதோர் மன்னிக்கவும் ) இத்தகைய விமர்சனப் பதிவுகளே, நான் உட்பட, அதிகமாக விரும்பிப் படிக்கப் படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
                               
இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு நானும் பதிவுத் தளம் ஒன்றைச் சொந்தமாக இயக்க வேண்டும் என்ற ஒரு இச்சையில் தளம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கினேன். ரொம்ப நாட்களாகவே "சொந்த இணையத்தளம்" என்கிற அவாவுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமே!

தளத்தை திறந்தேனே தவிர எதையெல்லாம் எழுதுவதென்றே தெரியவில்லை. மற்றவர்கள் போலவே புதுப் படங்களின் விமர்சனங்களை எழுதுவோ மென்றால் அதற்கு நிச்சயமாய் வாய்ப்பில்லை. எங்கள் ஊரில் ஒரே ஒரு, எந்த வித தொழிநுட்ப வசதியுமில்லாத, திரை அரங்கென்று சொல்லப் படுகிற, இதோ இப்போதே உடைந்து விழுகிறேன் பார் என்று தோற்றத்தில் சொல்லும், ஒரு கட்டடம் உள்ளது. அங்கே போடப்படும் திரைப் படங்கள் எல்லாம் நாட்டின் எல்லா மூலைகளிலும் ஓடி முடித்த பின்னே வந்து சேருகிறது. உதாரணமாகச் சொன்னால், சூர்யாவின் சிங்கம் திரைப் படம் கூட கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தான் திரையிடப் பட்டது.
அதை இப்போது பார்த்து விட்டு, " சிங்கம் - சூர்யாவின் கர்ச்சனை " என்கிற பெயரில் விமர்சனம் எழுதி, சுடச் சுட என்னும் அடை மொழியோடு வேறு , பதிவாகவிட்டால் எப்படி இருக்கும்? நீங்கள் என்னைத் திட்ட மாட்டீர்கள் ?

சரி சினிமா பற்றி எழுத யோசித்தால், சினிமாவைப் பற்றித்  தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியாத விடயமா எனக்குத் தெரியப் போகிறது? எதுவுமே எழுதத் தோன்றாத நிலையில் தளத்தை அப்படியே விட்டு விட்டேன். பின்னர் ஒருமுறை யோசித்துப் பார்த்த போதுதான், என்னுடைய படைப்புக்களைக் கொண்டே தளத்தை இயக்கலாமே என்று தோன்றியது. ஏதோ கொஞ்சம் பிதற்றுவேன். அதை நண்பர்கள் கவிதை என்று வேறு சொல்லி வைத்தார்கள். ( ஆனால் சிறப்பானதாக ஒன்றையும் எழுதிவிடவில்லை என்பது வேறு விடயம் ) 

இப்படித் தான் எனது பதிவுத்தள வாழ்கையும் ஆரம்பித்தது. ஆனால் எவ்வளவு தூரம் எனது தளமும் மற்றவர்களால் விரும்பப்படும் என்பது என்னைப் பொறுத்த வரையில் கேள்விக் குறிதான். தமிழ் பதிவுத் தளங்களின் பெரும் பான்மையான சொந்தக்காரர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். தமிழ் நாடு - தமிழ் கலைகளின் பிறப்பிடம் வேறு. இத்தகைய சூழ்நிலையில், எனது எழுத்துக்கள் எந்த வகையில் ஏற்றுக் கொள்ளப் படப் போகிறது?, எனது பதிவுகள் எத்தனை பேரைச் சென்றடையப் போகிறது? என்றெல்லாம் ஜோசிக்க வைக்கிறது. 
தமிழ் திரட்டியான தமிளிஷ் இல் சில பதிவுகளை இணைத்தேன். ஆனாலும் அவை பெரிய அளவிலான ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. மறுபடியும் நிராகரிக்கப் பட்டதான ஒரு உணர்வைத் தந்த தருணம் அது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் எனது பத்தாம் வகுப்பிலிருந்து கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். கவிதையில் ஏனோ அப்படியொரு  ஈடுபாடு. எல்லோருக்குள்ளும் ஒரு திறமையிருக்கும் எனச் சொல்வார்கள். எனக்குள் கவிதை இருப்பதாக, விடாப் பிடியாக அதையே கட்டிக் கொண்டுவிட்டேன். வீட்டில் கூட என்னை நிராகரித்தார்கள். ஆனால் நான் விடுவேனா? கவிதைக்கும் எனக்கும் இடையில் ஒரு அழகிய பந்தம் இருப்பதாக இப்போதும் நம்பிக் கொடிருக்கிறேன்.
அதனால் தான் எனது பதிவுகளிலும் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.    
( "என்ன இழவிடா இது"  என்று யாரும் சொல்லாமல் இருந்தால் சரி )

இறுதியாக, என் பதிவுகளையும் மதித்து, பார்வையிடும் நண்பர்களுக்காக, நான் சொல்ல விரும்புவது - பதிவுகளைப் பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை இட்டுச் செல்ல மறந்து விடாதீர்கள். அப்போதுதானே என்னாலும், பதிவுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ள முடியும். அதை விட முக்கிய காரணம் - பசங்க திரைப் படத்தில் சொல்லியிருப்பது போல, நம் எல்லோருடைய மனங்களும் சின்ன சின்ன
பாராட்டுக் களுக்காகத் தானே ஏங்கித் தவிக்குது?.
விதைக்குத் தண்ணீர் ஊற்றுங்கள்!
  

( முற்றும் )
         

                

                            

No comments:

Post a Comment