Skip to main content

வணக்கம் சொன்னது பொம்மை!.


                           "இந்த இடத்தில் நான் இவங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே?" அபி என செல்லமாக அழைக்கப்படும் அபிநயா தனக்குள் நினைத்துக் கொண்டாள். அபி -  அப்பாவின் செல்லமான அவள், நன்றாகப் படித்து, பருவ வயதில் காதல் என்கிற விபத்தில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல், தெளிவாக முடிவெடுத்து, இதோ இப்போது நல்லதொரு வேலையில் இருக்கிறாள். எப்போதும்  ஏதோ ஒரு உற்சாகத்துடனும், மாறாத புன்னகையுடனும் இருப்பவள். யாருடனும் சுலபமாகப் பழகக் கூடியவள். அலங்காரம் ஏதுமில்லாமலே வசீகரமாகத் தோன்றக் கூடியவள். உதவி செய்யத் தயங்காதவள் என்று அவள் கண்களைப் பார்க்கும் யாரும் சொல்வார்கள். அவளின் வயது என்ன ஒரு....... பெண்களின் வயதைக் கூறக்கூடாது!

அவளைப் பற்றி இக்கதையில் இவ்வளவும் போதும்.அவள் பார்த்த காட்சி - 
ஒரு வயதான கிழவி, தலை முற்றிலுமாக நரைத்து, பற்கள் விழுந்து, நெற்றி, கை, கால்கள் எங்கிலும் தசை இல்லாமல் போய் தோல் மட்டும் மிஞ்சிய நிலையில் திரண்டு சுருங்கி இருந்தது. அவள் அருகில் ஒரு சின்னப் பையன். அழுக்குப் படிந்து, அங்கங்கே கிழிந்த நிலையில், நீலமும் கருப்பும் சேர்ந்ததாக,  அவனை விடப் பெரிய அளவில் சேர்டும் பச்சைக் கலரில் பழுப் பேறிப் போன காற்சட்டையையும் அணிந்திருந்தான். அதிகமாக வளர்ந்த முடியை  அலட்சியமாக அப்படியே விட்டிருந்தான். அது அதன் இஷ்டம் போல் வளர்ந்து, கருப்பு நிறத்தை இழந்து, செம்பட்டை ஆகியிருந்தது. ஆனாலும் அவன் முகத்தில் அப்படியொரு அமைதி. நிலத்தில் ஏதோ கிறுக்கி விளையாடியபடி, அவ்வப் போது அவனைக் கடந்து போகும் அவசர மனிதர்களை விசித்திரமாகப் பார்த்தபடியும் செய்து கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் அபிக்கு  பாலர் பள்ளிக்குச் செல்லும் அவள் அண்ணன் மகன் நிரேஷின் ஞாபகம் வந்தது.
நிரேஷ் என்றால் அவளுக்கு ரொம்ப இஷ்டம். 

அலுவலகம் செல்ல பஸ் தரிப்பிடத்தில் சென்று நின்று , அவனையே பார்த்துக் கொண்டிருந்த போது, அந்தப் பையன் அபியையும் ஒருமுறை பார்த்தான். என்ன ஒரு ஆழமான பார்வை!

அலுவகம் சென்று வேலையில் மூழ்கி, மதிய உணவை முடித்து, மறுபடி வேலையில் மூழ்கி, மதியத் தேநீரைப் பருகியபோது மணி நான்காகி இருந்தது.
பக்கத்தில் மஞ்சள் சேலைப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தவள் அப்போதுதான் காலண்டரைப் பார்த்தாள். சத்தியமாக அப்போது தான் பார்த்தாள்.  வேலையில் கூட திகதிக்கான அவசியம் வரவில்லையே!
 காற்று அவள் தலையில் தட்டிச் சொன்னது, நாளை நிரேஷின் பிறந்த நாள்.
அப்போது தான் நிரேஷின் மழலை அவளுக்கு ஞாபகம் வந்தது " மாமி பேர்த் டேய்க்கு எனக்கு பேசிற ஸ்பைடர் - மான் பொம்மை வேணும்"
வழக்கம் போல காலையிலேயே அவனுக்குப் பரிசெல்லாம் கொடுத்தாக வேண்டும். அல்லாது விட்டால்....... 

வழமையாக ஓவர் டைம் பார்க்கும் அவள் அன்று சீக்கிர மாகவே வேலையே முடித்துக் கொண்டு புறப்பட்டாள். " அத மட்டும் வாங்காமல் விட்டால்  நான் செத்தேன்" முணு முணுத்தவள் நேராகப் பொம்மைக் கடைக்குள் போய் நின்றாள். 

சிறிய கடைதான்.மூன்று வரிசையாகப் பிரித்து, ஒவ்வொரு வரிசையிலும் மூன்று மூன்றாக அடுக்குகள் வைத்து,  சுற்றிலும் பொம்மைகள். விதம் விதமான பொம்மைகள் சீராகவும், அழகாகவும் அடுக்கப் பட்டிருந்தன.கைக்குள் அடங்கக் கூடிய பொம்மையிலிருந்து ஆளுயரப் பொம்மை வரை எத்தனை விதமான பொம்மைகள். அபி ஒருமுறை சிறுமியாகத்தான் மாறியிருந்தாள்.
அவன் சொன்ன பொம்மையை இனம் கண்டு, அதை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து விட்டு, மேலும் சில பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவள் கண்ணில் அந்த பொம்மை பட்டது. அது ஒரு அழகான, பட்டாம் பூச்சியைக் கையில் வைத்திருக்கும்,  பணக்காரச் சிறுவனின் வசீகரத் தோற்றத்தைக் கொண்ட பொம்மை, அதன் கையைத் தட்டிய போது ஆங்கிலத்தில் வணக்கம் சொன்னது.  அப்போதுதான் அவளுக்கு காலையில் பார்த்த சின்னப் பையனின் நினைவு வந்தது. அந்தப் பையனுக்கும் இந்த பொம்மைப் பையனுக்கும் எவ்வளவு முரண்பாடுகள். ஒருவேளை, ஒழுங்காக ஆடையுடித்தி, தலை முடியைத் திருத்தி, அவன் ஆசைப் பட்டதெல்லாம் செய்து கொடுத்தால் இப்படித்தான் இருப்பானோ என்னவோ?.  காலையில் அவன் மேலிருந்த பரிதாபம் மீண்டும் தொற்றிக்கொண்டது. அவனுக்காக ஆடையும் சில தின் பண்டங்களையும் வாங்கிக் கொண்டு பஸ்சில் ஏறிக்கொண்டாள்.

அவள் வீட்டுக்கான தரிப்பிடம் வந்ததும் பெல்லடித்து, முன்பக்கமாக இறங்கி, சின்னப் பையனும் கிழவியும் காலையில் இருந்த இடத்தைப் பார்த்து அவர்கள் இன்னும் அங்கிருப்பதை உறுதிசெய்து கொண்டு, சாலையைக் கடந்து அவர்கள் அருகில் போய் நின்றவளை கிழவி வினவினாள்.
" என்ன தாயி?". அவள் கொண்டுவந்த பையை அவனிடம் நீட்ட, அவன் தயங்க, 
"இத அந்தப் பையனுக்குக் குடுங்க. காலையில பார்த்தேன், அவனுக்கு ஏதும் வாங்கணும் எண்டு தோணிச்சு. ஊருக்குப் புதிசா?" என்றாள் அபி.
" ஆமா தாயி"  என்று ரொம்ப நன்றிவிட்டு அந்தப் பையை வாங்கிக் கொண்டாள் கிழவி. 

இவர்கள் இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கும் போது அபியின் மற்றப் பையை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பையனை, வெள்ளைப் பொலித்தீன் பையினூடாகத் தெரிந்த, சிவப்பும் நீலமும் சேர்ந்தால்  போலான அந்த உருவம் அவனைக் கவர்ந்திருக்க வேண்டும். அபியிடம் அந்தப் பையை தரச் சொல்லும் பாவனையில் அந்தப் பையை இழுத்தான். இதனை எதிர்பார்க்காத அபி, சற்று சுதாகரித்து பின் " உனக்கு இந்த பொம்மை வேணுமா? அந்தப் பொம்மையின் பெட்டியைப் பிரித்து , பொம்மையை வெளியே எடுத்து, இப்போ இந்தப் பொம்மை பேசும் பாரு. பாரு ஹலோ சொல்லுது , நீயும் சொல்லு" அவள் அந்தக் கணத்தில் நிரேஷை மறந்திருந்தாள் அல்லது தவிர்த்திருந்தாள். 

அவன் அந்தப் பொம்மையை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது, கிழவி அவன் தலையைத் தடாவியபடியே சொன்னாள் " இல்லம்மா அவன் பேச மாட்டான், அவனுக்குப் பேச வராது, அவன் ஊமை. பிறக்கும் போதே...... இப்பிடித்தான் நாங்க எங்க போனாலும் இவனப் பார்த்து பரிதாபப் படுறவங்க செய்யிற உதவியாலயும், கொடுக்கிற காசாலையும் ஏதோ......... " கிழவி சொல்லிக் கொண்டே போனது அபி காதில் விழவில்லை. அவன் பேச மாட்டான் என்பது அவளை ஏதோ செய்து விட்டது. முதன் முதலாக ஏமாற்றத்தை உணர்ந்தாள்.  அவளால் ஏனோ தாங்க முடியவில்லை, அங்கிருந்து அவசரமாகக் கிளம்பியவள் மெதுவாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். சற்றுத் தூரம் போனவள் அந்தப் பையனை ஏனோ திரும்பிப் பார்த்தாள். அவன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதே ஆழமான பார்வை!. இவன் என்னிடம் ஏதேனும் சொல்லப் பார்கிறானா? 
அவன் மடியில் கிடந்த பொம்மை இப்போதும் ஹலோ சொல்லிக் கொண்டிருந்தது அவள் காதில் கேட்டது.
அவன் சொல்ல மாட்டானா?
அவன் சொல்ல மாட்டானா?
நிச்சயம் சொல்ல மாட்டான்!! 

(முற்றும்)

Comments

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி