Saturday, June 19, 2010

காதலைப் பாடுகிறேன் !
காதல் - நிச்சயமாகவே ஒரு புது உலகம் தான். தன்னை மறந்து ,தனிமையை அழைத்து விம்மித் தீர்க்கும்.கனவிலும் அழவைக்கும், சாவைக்காட்டி வாழவைக்கும். விஞ்ஞான ஆராய்ச்சி யாளரையோ அல்லது விஞ்ஞானத்துடன் தொடர்பு பட்ட ஆசாமிகள் யாரையாவதோ தெருவில் கண்டால் சற்று விலத்தியே நில்லுங்கள். மறந்தும் கூட காதலைப் பற்றி அவர்களிடம் கேட்டு விடாதீர்கள். காதலைப்பற்றி அவர்கள் கோரசாகச் சொல்லக்கூடிய ஒரே பதில் "காதல் ஓமோன்களின் கலக்கம்!".  ஹைதரசன், ஹீலியம், லிதியம் என்று காதலை இரசாயனத்துக்குள் அடைத்து விடும் ஆபத்தும் உண்டு! தனது இனத்தைப் பெருக்க, உயிரினங்களுக்காக இயற்கையே ஏற்படுத்திக் கொடுத்த வசதி தான் காதல் என்று, டார்வினைக் கூட துணைக் களைப்பார்கள்!


பொதுவாகவே, தம்மால் நிரூபிக்க, விளங்கிக் கொள்ள முடியாதவற்றை பொய் என்று சொல்வதுதானே விஞ்ஞானத்தின் நடைமுறை வழக்கம். சிறு குழந்தையின் தவறை மன்னிப்பது போல் அல்லது எதிரியின் தூற்றலைக் கண்டு கொள்ளாதது போல் நாமும் இப்போது கொஞ்சம் காதலுக்குள் நுழைவோமா?
உங்கள் நண்பர்கள் பெயரை சொல்லுங்கள் என்று முன் பின் தெரியாத ஆண் யாரிடமாவது கேட்டால், சுரேஷ், ராஜா, கமல், குமார், திலீப்.... என்று ஒரு பத்துப் பேரின் பெயரையாவது சொல்லக் கூடும்.


பெண் யாரிடமாவது அவ்வாறே கேட்டால், கமலா, புஷ்பா, ராதா, பூங்கோதை என்று அவளும் சில பெயர்களைச் சொல்லக்கூடும். இருவரிடமும் பொதுவாக , உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் காதலிக்கிறார்கள் என்று கேட்டால் , யோசிக்காமல் சொல்லக் கூடும் - 90 வீத மாணவர்கள். சிலவேளைகளில் அனைவரும்!
வெற்றி பெற்றவர்களையோ அல்லது தோற்றவர்களையோ கேட்டுப் பாருங்கள் காரணம் என்ன வென்று? காதல் என்பார்கள். இரண்டாவது படியில் நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், முதல் படிக்கு முன்னேறுவதோ மூன்றாம் படிக்கு இறங்குவதோ உங்கள் கால்களின் தெரிவில் தான் உள்ளது! ஒரு வேளை முதலாம் படிக்கு முன்னேற காதலின் சக்தி தேவைப்படலாம். மூன்றாம் படிக்குப் போவதற்கு ஒரு காரணமாக காதல் ஒருபோதும் இருக்காது!
உலக வரலாற்றிலே எத்தனை சாம்ராஜ்ஜங்களின் அழிவுக்குக் காரணமாக காதல் இருந்திருக்கிறது என்று கூறிக்கொண்டு பின்னால் யாரும் வந்து நிற்கக் கூடும் , கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.நிற்பார்கள். உடனே அவர்களைத் துரத்தி அடியுங்கள். ஆமாம், நாம் எப்போதுதான் அடுத்தவர்களை பாராட்ட வாயைத் திறந்திருக்கிறோம், இப்போது காதலையும் பாராட்ட ? நமது நாக்கு தூற்றத் தானே தெரிந்து வைத்திருக்கிறது?
வீட்டில் உள்ள பெரியவர்களையோஅல்லது சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப் படுபவர்களையோ காதலைச் சேர்த்து வைக்கச் சொல்லிக் கேட்டுப் பார்த்தால் காதலை ஏதோ வேண்டாப் பொருளாகப் பார்ப்பதுடன், அக் காதலைப் பிரிக்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்த்தால் அவர்களும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்களாகவே இருப்பார்கள். சமயத்தில் ஓடியும் போயிருப்பார்கள் என்பது வேறு விடயம். 

காதல் எப்படிப் பட்ட அதிசயங்களையும் நிகழ்த்தக் கூடியது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
அவன் பெயரை இந்த உலகம் அவ்வளவு இலகுவில் மறந்து விடாது. அவன் செய்த கொடூரக் கொலைகள் எண்ணிக்கையில்  கோடியைத் தாண்டும். அவனது சொந்த நாட்டு மக்களே அவன் பெயரை உச்சரிக்க அருவருப்பார்கள். யூதர்களுக்கு அவன் இறப்பு சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் கொடுத்தது.     


அவன் தான் அடோல்ப் ஹிட்லர்.
யூத மக்களை எந்தவொரு தயவு தாட்சண்யமும் இன்றி, கொலை வெறியோடும், குரூரப் புன்னகையோடும் இரசனை இழையோடக் கொன்று குவித்தான். இருந்தும் இந்த இரண்டுகால் கொலை மிருகத்திற்குள்ளும் ஒரு பெண் மீதான அழகிய காதல் இருந்தது ஆச்சரியமான ஒன்று தானே?
அவள் பெயர் ஈவா பிரவுன். ஏக பத்தினி விரதனாக இன்றளவும் சொல்லப்படும் ஹிட்லர், உண்மையிலேயே மதுவையும் மாதுவையும் வெறுக்கத் தான் செய்தான். ஏனோ ஈவா வை மட்டும் அவனால் வெறுக்க முடியவில்லை. உண்மையாக நேசித்தான். உயிரில் காதல் சொட்டச் சொட்ட உருகியுருகிக் காதலித்தான்.
போரில் தோற்றுத் தற்கொலை செய்ய முற்பட்ட போது ஈவாவும் அவன் கூடவே தற்கொலை செய்து கொண்டாள்.
ஹிட்லர் மட்டும் கொலை வெறியனாக இல்லாமல் இருந்திருந்தால், நாம் ஹிட்லர் - ஈவா யோடியை காதலின் உதாரணமாகக் கூறிக் கொண்டிருப் போமோ என்னவோ?.....
       எந்தவொரு கொடிய மனிதனுக்குள்ளும் மெல்லிய உணர்வுகளால் நிரம்பிய காதல் சென்றுவிடக் கூடியது என்பதற்கு ஹிட்லரின் உதாரணமே போதுமே? அவ்வளவு சக்தி மிக்கது தான் காதல்.
இதைப் போலவே எத்தனை எத்தனை காதல்களை நாம் வரலாறாகப் படித்திருக்கிறோம்! முன்பு கூறியதைப் போல் 
சாமானியர்கள் யாராவது சாம்ராஜ்யங்களின் காதலால் வந்த அழிவைப் பற்றிப்பேசினால், அந்த அழிவுகள் அத்தனையும் எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கே காதலும் இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்? நீங்களே ஒருமுறை எண்ணிப் பாருங்கள், நாம் எப்போது ஏமாறுகிறோம்? ஒருவரை உண்மையாக நம்புகிறபோது தானே? இங்கேயும் அதுதான் நடக்கிறது. ஆனால் அந்தக் காதல் உண்மையானது, அற்புதமானது.


நாத்திகனாக இருந்தாலும் கீதையாகச் சொல்லப்படும் வாழ்வியல் உண்மைகளை விரும்பிப் படிப்பேன்.
அதில் கூறியுள்ளவை காதலைப் பிரிப் பவர்களுக்கும் நிச்சயம் பொருந்தும். எதை நீங்கள் கொண்டு வந்தீர்கள் அதைக் கொண்டு செல்ல?......  பணம், பகட்டு வாழ்க்கை, அந்தஸ்து இவையெல்லாம் தங்களுக்கானவை தங்களுடனேயே எப்போதும் இருக்கும் என்ற இறுமாப்பில் எத்தனையோ உண்மையான காதல்கள் இன்றளவும் பிரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அறியாத உண்மை என்ன வென்றால், எவனொருவன் காதலைப் பிரிக்கின்றானோ அவன் இருட்டுக்குள் தள்ளப் படுகிறான். எவனொருவன் காதலைச் சேர அனுமதிக்கிறானோ அல்லது காதலைச் சேர்த்து வைக்கிறானோ அவனுக்காக ஆயிரம் விளக்குகள் ஏற்றப் படுகின்றன.
எதற்காக " நான் பெரியவன்" என்கிற பெயரில் காதலைப் பிரித்து, நீங்களும் நிம்மதி இழந்து, அவர்களும் சந்தோஷ தருணங்களைத் தொலைத்து, இப்படியும் வாழத்தான் வேண்டுமா? அவர்களின் வாழ்கையை அழித்துவிட்டு மீண்டும் உங்களால் அதைக் கொடுக்க முடியுமா? கிடைத்த வாழ்க்கையை ஒருமுறை தானே வாழவும் முடியும்? அந்த வாழ்க்கையை அவர்கள் விருப்பப் படிதான் வாழ்ந்தும் பார்க்கட்டுமே? 
காதல் அனுமதிக்கப் பட வேண்டியது. அதற்கும் மேலாக ஆராதிக்கவும் பட வேண்டியது. 

இனிமேலாவது காதலை அனுமதியுங்கள், ஆராதியுங்கள்.               

       

  
    

   

No comments:

Post a Comment