Sunday, June 27, 2010

எயிட்ஸ் என் எதிரி !டாக்டர் என்னைப் பார்த்த பார்வை சரியில்லை.
"எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள் டாக்டர்"  நான் கேட்டதற்கு, சில நொடிகள் தாமதத்திற்குப் பின், என் கண்களைப் பார்த்தவாறு சொன்னார் " எப்பிடிப்பா? உன்னை நான் நல்ல பையன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படித் தப்புப் பண்ணி இருக்கிறாயே? சரி, செய்ததுதான் செய்தாய், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டாமா? இப்போதுபார்......"
" என்ன டாக்டர் " கண்களில் அவசரம் ததும்பக் கேட்டேன். என் இரத்த மாதிரியை பரிசோதிக்கக் கொடுத்திருந்தேன். அதன் முடிவைப் பெறத்தான் வந்திருந்தேன். டாக்டர் என் அப்பாவின் நண்பர் வேறு.                  
" உன் இரத்தத்தில் hiv இருக்கிறது. உனக்கு Aids "    

திடுக்கிட்டு எழுந்தேன். கும் என வியர்த்திருந்தது. நான் கண்டது கனவுதான் என நிச்சயப்படுத்திக் கொண்ட பின்பு தான் நிம்மதியாக இருந்தது. அன்று முழுக்கவும் எனக்குக் கனவைப் பற்றிய சிந்தனை. நான் ஒழுக்கமான பையன். மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதில் எனக்கு சிறிதளவும் நாட்டமில்லை. 
ஆனாலும் அந்தச் சம்பவம் தான் என்னை பதட்டப் பட வைத்தது. ஒருமுறை நானும் எனது அலுவலக நண்பர்களும், அலுவலகம் மூலமான சுற்றுலாவுக்குச் சென்றிருந்த போது, நண்பர்களின் சபலத்தினால், ஒரு வெளிநாட்டுப் பெண்ணை, 5000 ரூபாய்கள் கொடுத்து, நாம் தங்கியிருந்த அறைக்குக் கூட்டி வந்து, அவர்களுடன் சேர்ந்து நானும் தப்புப் பண்ணி விட்டேன். பாதுகாப்பாகத் தான் செய்தேன். அந்தப் பெண் நோயற்ற, நம்பத் தகுந்தவள் என்று வேறு சொல்லியிருந்தார்களே?.

எதற்கும் இரத்தத்தை ஒருமுறை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது என்று எண்ணியவாறே அலுவலக வேலைக்குள் என்னைத் திணித்துக் கொண்டேன்.
 மாலை, வேலை முடிந்து, இரத்தப் பரிசோதனை நிலையம் சென்று இரத்த மாதிரியைப் பரிசோதிக்கக் கொடுத்து விட்டு, வீட்டுக்கு வந்து விட்டேன். நாளை காலை வரச்சொல்லி இருந்தார்கள். நாளை சனிக்கிழமை. அரை நாள் வேலை. தொலைக்காட்சியில், நாட்டமில்லாத போதும், நிகழ்சிகள் சிலவற்றைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு, ( இடையில் கொண்டமுக்கான விளம்பரம் வேறு போட்டார்கள் ) தூங்கச்சென்று விட்டேன்.

நல்ல தூக்கமாக இருக்க வேண்டும். கனவு எதுவும் வரவில்லை.             காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டு, குளித்து, சாப்பிட்டு, பத்திரிக்கையும் படித்து விட்டு, நேரம் பார்த்தேன். காலை 8 மணி. 
இரத்தப் பரிசோதனை முடிவைப் பெற வேண்டு மல்லவா? மோட்டார் சைக்கிளை ஒருமுறை முறுக்கி நிறுத்திய போது பரிசோதனை நிலையம் வந்துவிட்டிருந்தது.
முடிவு என்னவாக இருக்குமோ என்கிற நினைப்புடன் உள்ளே சென்று, வந்ததற்கான காரணத்தை நினைவு படுத்தினேன். 

குறிப்பிட்ட பற்றுச் சீட்டை எடுத்த பரிசோதகர் என்னை ஒருமுறை பார்த்தார். 
அவர் பார்த்த பார்வை சரியில்லை!
" என்ன தம்பி கவனமா இருக்கக் கூடாதா? "
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
சுதாகரித்துக் கொள்ளமுன், " நீங்க சபாபதி வாத்தியாரின் மகன்தானே? நான் உங்கள் அப்பாவின் நண்பன். இதைப் பற்றி உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும்"
அழாத குறையாக, நா தழு தழுக்கக் கேட்டேன் " நிச்சயமாகவா?...."
என்னால் முடிக்க முடியவில்லை. " தம்பிக்கு இனிப் பென்றால் ரொம்பவே இஷ்டமோ? இந்தச் சின்ன வயசிலேயே சர்க்கரை வியாதி வருவது......"
அவர் முடிக்கும் முன்பே, அவரை நிறுத்திக் கேட்டேன் " சர்க்கரை வியாதியைப் பற்றித்தான் சொன்னீர்களா?"  என் முகத்தில் இதுவரை இல்லாத ஆச்சரிய மாற்றம். அவ்வளவு சந்தோசம். என்னைக் கவனித்தவர் முகத்தில் கலவர ரேகைகள். "என்ன தம்பி, சர்க்கரை வியாதி என்று சொல்கிறேன். நீங்கள் சந்தோசப் படுகிறீர்களே!"

அவரின் அறிவுரைகளை கேட்டு, அவரை ஒருமாதிரி சமாளித்து விட்டு வெளியே வந்த எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. சர்க்கரை வியாதி கொடியது தான். ஆனால், நான் குழம்பியதற்குக் காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? நான் சந்தோசப்பட்டதன் நியாயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். இனிமேல் இப்படிப்பட்ட தப்பே பண்ண மாட்டேன். பாருங்கள் எப்படிப் பாடாய்ப்படுத்தி விட்டது என்னை!

அதுசரி, உங்களிடம் ஒன்றைக் கேட்க மறந்து விட்டேனே. நீங்கள் என் அப்பாவின் நண்பரில்லைத் தானே? 

( முற்றும் )          

                    


   


                       

No comments:

Post a Comment