Friday, June 25, 2010

இலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் !


இந்தப் பதிவை நேற்றே எழுத வேண்டும் என நினைத் திருந்தேன். ஆனால் வேலைப் பளு  காரணமாக இப்போதுதான் எழுதக் கிடைத்தது. அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போச்சு.

இலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியும் என நான் தலைப்பிடக் காரணம், நேற்று நடந்த ஆசியக் கோப்பைக்கான இந்தியாவுடனான இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோற்கும் என நண்பர்களுடன் பந்தயம் போட்டிருந்தேன். அப்படித்தான் இறுதியில் நடக்கவும் செய்தது. அதற்காக நானொன்றும் தீர்க்கதரிசி என்று அர்த்தமில்லை.

அடிப்படையில் நான் இலங்கைக் கிரிக்கட் அணியின் தீவிர ரசிகன். தொடர்ந்து அவர்களின் விளையாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பதாலும் முடிவை என்னால் முன்னமே கணிக்கக் கூடியதாக இருந்தது. நான் மட்டுமல்ல, என்னைப் போல எந்தவொரு சராசரிக் கிரிக்கட் ரசிகனாலும் இத்தகையதொரு முடிவைக் கணித்திருக்க முடியும்.

காரணங்கள் : 
சமீபத்திய வருடங்களாகவே இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே போட்டிகள் குறித்த ஒரு இடைவெளியில் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இரு அணிகளும் மாறி மாறி தத் தமது குறை நிறைகளை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்திய அணி துடுப் பாட்டத்திலும் இலங்கை அணி பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பில் சிறந்து விளங்குகின்றன.
இத்தகையதொரு பின்புலத்தில் தான் ஆசியக் கோப்பைக்கான போட்டிகளில் இரு அணிகளும் களத்தில் இறங்கின. கடந்த சில மாதங்கள் இந்திய அணிக்கு கடுமையானதாகவும், சோதனை மிகுந்த தாகவும் இருந்தது வெள்ளிடை மலை. ஆகவே இந்தத் தொடரில் சாதித்தே தீரவேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது ஆச்சரியமான விடயமல்ல.

மறுபக்கத்தில் இலங்கை அணியைப் பொறுத்த வரை போட்டிகள் தமது சொந்த மண்ணில் நடைபெறுவதானது அதற்கு சாதகமான விடயங்களில் ஒன்று என்பதாலும்,   தற்போதைய இலங்கை அணியானது மிகச் சிறந்த சமநிலை அணியாகக் காணப் படுகிறது எனவும், குறித்த நாளில் உலகில் எந்த அணியையும் வீழ்த்தக் கூடிய திறமை மிகுந்த அணியாகவும் பத்திரிக்கைகளிலும் விளையாட்டு விமர்சகர்களாலும் உயர்வாக மதிப்பிடப் படுவதாலும் இலங்கை அணிக்கே கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இருப் பதாக பரவலாக நம்பப்பட்டது.

அதற்கிணங்க இலங்கை அணியும் லீக் சுற்றுப் போட்டியில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத அணியாக இறுதிப் போட்டிக்குத தகுதி பெற்றது.  ஆனால் இந்திய அணியோ பாகிஸ்தான் அணியுடன் பலத்த போட்டிக்குப் பின் வெற்றி பெற்றே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருந்தார்கள். அத்துடன் லீக் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்க விடயம்.

லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாகச் செயற்பட்ட இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் அவர்களின் மெத்தனப் போக்கே என்றால் அது மிகையாகாது. எந்த வொரு கிரிக்கட் ரசிகனுக்கும் அவர்களின் விளையாட்டு நிச்சயம் கடுப்பை ஏற்றி இருக்கும்.

போட்டியானது இலங்கை நேரம் பிற்பகல் 2 . 30 மணியளவில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட முடிவு செய்தது. இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் நாணயச் சுழற்சியானது எப்போதுமே முக்கிய பங்கு வகிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்.ஆரம்பம் முதலே இந்திய அணி சிறப்பாகவே துடுப்பெடுத் தாடியது. அவர்களின் ஓட்ட விகிதம் 5.5 இற்குக் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தாலும் (66 ஓட்டங்கள் ), என்னய்யா  துடுப் பாட்ட வீரர்களின் ஒத்துழைப் பாலும், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 268 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.       

இந்தப் போட்டியில் இலங்கை அணியினர் பல பிழைகளை விட்டிருந்தனர். 
முதலாவதாக அணி தேர்வு செய்யப்பட்ட முறையானது கேள்வியை எழுப்புகிறது.
கடந்த போட்டியில் சிறப் பாகப் பந்து வீசிய சுராஜ் ரண்டிவ் இப்போட்டியில் ஏன் சேர்த்துக் கொள்ளப் படவில்லை? அவர் கூடுதலாக துடுப்பாடத் தெரிந்தவர் என்பதுடன் களத் தடுப்பிலும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்.  முரளிக்கு வயதாகி விட்டது. அவரின் வேகம் குறைந்து விட்டது. முன்னரைப் போல அவர் இப்பொழுது விக்கட் எடுக்கும் பந்து வீச்சாளரும் அல்ல. அனுபவத்திற்காகச் சேர்த்துக் கொள்கிறார்களாம். அனுபவம் மட்டுமே எப்போதும் வெற்றியைத் தேடித் தருவதில்லையே? 

அடுத்து மகரூப். கடந்த போட்டியில் ஹற்றிக் உடன் சேர்த்து 5 விக்கட்களைப் பெற்றவர்         
இந்தப் போட்டியில் பந்து வீசவே தெரியாதவர் போலல்லவா பந்து வீசியிருந்தார்.   
அத்துடன் அவரின் சொதப்பலான களத்தடுப்பு, பந்தைத் துரத்தும் பாணி எல்லாம் சேர்த்து கப்டன் சங்கக்காரவைக் கடுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.  
6 ஓவர்கள் பந்து வீசி 41 ஓட்டங்களை வாரி வழங்கி இருந்தார் வள்ளல் மகரூப். 

போட்டி பற்றிய கலந்துரையாடலில் பங்கு பற்றிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் மார்வன் அத்தபத்து, இலங்கை அணியிடம் துடுப்பெடுத்தாடக் கூடிய சுழற்பந்து வீச் சாளர்கள் இல்லை என்றும், இதே நிகழ்ச்சியில் பங்கு பற்றிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியிடம் வேகப் பந்து வீசக் கூடிய துடுப்பாட்ட வீரர் இல்லை என்றும் அங்கலாய்த்தனர். சுராஜ் ரண்டிவ் மற்றும் இர்பான் பதான் எங்கே என்று என் தலையில் அடித்துக்கொண்டேன்.    

மின்னொளியில் 250 என்பதே கடினமான இலக்கு என்னும் பட்சத்தில் 268 ஓட்டங்களைப் பெற இலங்கை அணி பொறுப்புடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்று எங்களுக்குத் தெரிந்த அளவு கூட அவர்களுக்குத் தெரியவில்லையோ என்னவோ?  முன்னர் ஒரு முறை, இலங்கையில் நடை பெற்ற Indian oil cup இற்கான இறுதிப் போட்டியிலும் இதே தவறைத் தான் செய்திருந்தார்கள்.        
அந்தத் தவறை ஏனோ நினைத்துப் பார்க்கவில்லை. 

ஆரம்பம் முதலே அவர்களின் மெத்தனப் போக்கு அழகாகத் தெரிந்தது. 
பழைய போட்டிகளின் replay காட்சிகளைப் பார்த்த ஒரு அனுபவமாகத் தான்  எனக்கிருந்தது. உங்களுக்கு எப்படியோ?. இலங்கையின் தூண்களாக வர்ணிக்கப் படுபவர்களின் ஆட்டங்களை சற்று அலசிப் பார்ப்போமா? 

டில்ஷான் : போட்டியில் தான் சந்தித்த இரண்டாவது பந்துவீச்சு, bouncer ஆக எகிற பௌண்டரி மட்டுமே அடிப்பேன் பேர்வழியாக, உயர்த்தி அடித்து ஆட்ட மிழந்து சென்றார். இவர் பௌண்டரி அடிக்கவில்லை என்று இப்போது யார் அழுதார்கள்? என்னவொரு கேவலமான துடுப் பாட்டம். 
 


உபுல் தரங்க : off stump புக்கு வெளியே குத்தி உள்ளே வந்த பந்தை, off stump புக்கு மேலாகத் தான் செல்லும் என்கின்ற அற்புதத் தீர்க்க தரிசனத்தோடு பந்தை leave செய்ய, பந்து off stump இன் தலைப் பகுதியைப் பதம் பார்க்க, தரங்க முகத்தில் ஈயாடவில்லை. 
" என்ன இழவுக்கிடா  உங்களுக்கு bat தந்திருக்கிறாங்க? " - நண்பன் கேட்டதற்கு, தரங்க தலையைக் குனிந்த படி சென்று விட்டார்.  

மஹேல :  இவரின் இத்தகையதொரு ஆட்டமிழப்பை நாம் எத்தனையோ தடவை பார்த்தாகி விட்டது. off stump புக்கு வெளியே போகும் பந்தை third - man திசையில் திருப்பி விடுவதாக நினைத்து keeper இடமோ அல்லது slip இலோ பிடி கொடுத்து ஆட்டமிழப்பார். இவரின் ஆட்டத்தில் துளிகூடப் பொறுப்புத் தெரியவில்லை.

மத்தியூஸ் : உலக அரங்கில் சிறப்பான வீரராக வளர்ந்து வரும் அவர் இனி ஒரு போதும் இவ்வாறு அலட்சியமாக விளையாடக் கூடாதென்பது என் அவா. அவரை ஒருமுறை மன்னிக்கலாம். சங்கக்கார :  பாவம் என்ன செய்வார்? மனைவி மஹேல போனவுடன், "நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்" கணக்காக, வழமையான முறையில் pull செய்ய முற்பட்டு அரங்கு திரும்பினார்.            

அத்தனையும் அலட்சியத்தால் விழுத்த விக்கட்கள். தில்ஷானிடம் என்னவொரு மெத்தனப் போக்கு. சங்கக்காரவின் ego விற்கு சரியான அடி. ipl போட்டிகளில் காட்டிய அக்கறையையும், விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும், அவதானத்தையும் இப்போட்டியிலும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம். தவறி விட்டார்கள்.      
எப்படிப் பொறுப்பாக துடுப்பெடுத் தாடுவது என்பது பற்றி இவர்கள் கப்புகெதரவிடமும், கண்டம்பி  இடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் இருவரும்  சிறப்பாக ஆடியிருந்தாலும் too little , too late .      


வெற்றி பெறுவோம் என்கிற கனவோடு மட்டுமே இலங்கை அணியினர் விளையாடினர் போலும். ஆனால் இந்திய அணியினர் கடுமையாக உழைத்திருந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள்.  இலங்கை அணியினர் திறமையானவர்கள் தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இதே போல மெத்தனப் போக்குடனும், அலட்சியப் பார்வையுடனும் தொடர்ந்து விளயாடுவார்களேயானால், இதே போல எதிர் பார்க்கப்படும் தோல்வியும் நிச்சயம்.    என்னைப் போல தீவிர ரசிகனை அது நிச்சயம் பாதிக்கும். மற்றப்படி இந்திய அணியினருக்கு என் பாராட்டுக்கள் !   
.
.
.

   

No comments:

Post a Comment