Skip to main content

இலகு தவணையில் மரணம்!


பகலொரு பொழுதும்,
இரவொரு பொழுதுமாய்
இருமுறை சாக வேண்டும்.

சாவு....
யாரும் நிச்சயப் படுத்திச் சொல்லுங்கள்?
முழுவதுமாய் வாங்குவேன்.
தவணை முறையில் என்றாலும்...
குத்தகைக்குக் கூடக் கிடைக்காதா?

நிலைக்குத்தாக அடுக்கப்பட்ட
மனிதக் கூட்டத்துக்குள்
எனக்கான சாவு ஒழிந்திருக்கிறதா?

விரல்கள் வெளித் தெரியும்
புதை குழிகளையும் தாண்டியாயிற்று.
நைல் நதி பக்கத்தில்
நீண்ட பள்ளத்திலாவது
ஒழிந்திருக்கிறதா?

ஒருவேளை
சாவதற்கும் ஏதும் தகுதி வேண்டுமா?

பரணில் ஒட்டடை கூடிய
உப்புக் கண்டங்களுக்கு
நடுவில்காய்கிறது
மனமும், முதற்காதலும்.

முதற்காதல் -
விதம் விதமாய்
அழுதுத் தீர்த்த பிறகும்
என்னை
அலங்கரித்துப் பார்க்கும் தோல்வி!

மனம் -
ஒரு வித்தைக் காரியின்
செப்படியில் சிதறிப்போனது.
புதுப்பிக்க வழியில்லை.

எப்போதுமே
வாழத்தெரிந்தவன்
ஒரு ஜாதி.
வாழத்தெரியாதவன்
மறு ஜாதி.
யாராவது சொல்லுங்கள்?
நான் எந்த ஜாதி?

நித்தியங்களுக்குள் நிராகரிக்கப்பட்டு,
வேதனைகளால்
விரும்பி அணைக்கப்பட்டு
வாழ்க்கை எட்டி உதைத்ததால்
சாவை விரும்பி நிற்கிறேன்.
சாவதற்குத் தகுதி போதாதா?

என் சாவை சில வேளைகளில்
நிலவும்,
தென்றலும்
ஏற்க மறுக்கும்...
நிலவைத் தொட்டதில்லை!
தென்றலைப் பார்த்ததில்லை!
சாவது மேல்.
ஒரு முறை
செத்து விட்டுப் போகிறேன்.

பகலொரு பொழுதும்,
இரவொரு பொழுதுமாய்.......
.
.
.

Comments

Post a Comment