Skip to main content

பத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை



அன்பு குறையும் போது பிழைகள் பெரிதாகத் தெரியும் என்று பிரபலமான வாசகம் உள்ளது (faults are thick when love is thin). எனக்கு ரொம்பவும் பிடித்தமான வாசகம் அது. ஆனால் நான் சொல்ல வந்ததற்கும் இதற்கும் நிச்சயமாக எந்த சம்மந்தமும் கிடையாது.

நான் சாதாரணமானவன்.
பேரூந்திலோ அல்லது புகை வண்டியிலோ செல்லும் போது ஜன்னல் ஓரமாகப் பார்த்து உட்கார்ந்து மரங்களையும் மனிதர்களையும் விடுப்புப் பார்ப்பவன். விளையாட்டில் இக்கட்டான தருணங்களை பதட்டமாக நகம் கடித்து ரசிப்பவன். தவறாமல் நூல் நிலையம் செல்பவன்.எப்போதாவது அரசியல் பேசுபவன்.புதுக் கவிதை முயற்சிப்பவன்.சுமாரானவன்.தலை குனிந்து நடப்பவன். (அப்பாடா இப்பவே மூச்சு முட்டுதே!)

இப்போது நீங்கள் என்னைப் பற்றி ஊகித்திருக்கலாம்.
பாதையில் உங்களைக் கடந்து போகும் ஆசாமிகளில் நானும் ஒருவன்.
ஒருவேளை காதல் என்னை உங்களிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டலாம். ஏய்! அற்பப் பயலே உன்னை என்ன செய்கிறேன் பார் என்று என் அனுமதியில்லாமல் எனக்குள் வந்து இருந்து விட்ட காதல்.
என் காதல் அனுபவங்களை இப்போது நினைக்கும் போது சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது. அதனால் தான் உங்களுக்கும் சொல்கிறேன்.








அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். மாலை நேரங்களில் கணித வகுப்புக்குச் செல்வேன். கணிதமென்றால் ரொம்பவும் கசந்த காலம். கணக்குகளுடன் தினம் போராடினேன். அதனால் தான் கணக்கு வாத்தியாரையும் வெறுத்தேன்.வாத்தியார் என்றால் சொட்டை விழுந்து, கண்ணாடி போட்ட தொப்பையானவர் என்று யாரும் நினைக்காதீர்கள். அவர் இளைஞர். அழகான இளைஞர். இப்படி கணக்கு வகுப்பு கொடுமையாகப் போய்க் கொண்டிருந்த போது புதிதாக ஒரு பெண் வகுப்புக்கு வந்து சேர்ந்தாள். (ஹீரோயின் வந்தாச்சுப்பா, நல்லதா ஒரு பாட்டப் போடுங்க)

மெல்லியதாக, இப்போதே உடைந்து விடப் போவதாக, கருப்பு சுடிதார் போட்டு ,மஞ்சள் நிறத்தில் இருந்தாள். கருப்பு வெள்ளையில் பெரிய உருண்டைக் கண்களை உருட்டி உருட்டி எங்கள் எல்லோரையும் பார்த்தாள். அன்றிலிருந்தே தன் கணிதப் புலமையைக் காட்டத் தொடக்கி விட்டாள். அவள் கணிதத்தில் கெட்டிக் காரியாம்! ஏனோ அவளில் வெறுப்பு வரவில்லை.
நாட்கள் செல்ல செல்ல அவளில் எனக்கு ஒரு விருப்பம் வளர்ந்தது . அவளை இரசிக்க ஆரம்பித்தேன். அப்போதைய காதல் பாடல்களை வாங்கிப் போட்டுப் பாடமாக்கினேன். அவளைக் காணும் போதெல்லாம் அவற்றை முணுமுணுப்பேன்.( பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது பிரபலமான காதல் பாடல் பின்னணியில் ஒலிக்கும் பாருங்க. அட, அட... அது ஒரு அற்புதம் )ரொம்ப அழகாக வேறு தெரிந்து தொலைத்தாள். (இப்போது கேட்டால் இல்லை என்பேன் என்பது வேறு விடயம்) இப்படித்தான் காதலும் ஆரம்பித்தது.
எல்லோரும் செய்வதைப் போலத்தான் நானும் செய்தேன். பின்னால் செல்வேன், கவிதைகளை முயற்சிப்பேன்..... இவை சாதாரணமானவை. வேறு சிலவற்றையும் செய்தேன். அவற்றைச் சொல்கிறேன்.
என்னுடைய நடவடிக்கைகளில் இருந்து என்னுடைய காதலை அவள் அறிந்திருப்பாள். ஆனாலும் நான் எனது வாயால் சொல்லவில்லையே என்று புலம்புவதைக் கேட்ட நண்பன் ஒருநாள் சொன்னான் " கடிதம் எழுதித்தாவேன். அவளிடம் கொடுக்கிறேன் " என்றான். எங்கள் வகுப்பில் அவன் மட்டுமே அவளுடன் பேசுபவன், அவள் வீட்டுக்கு அருகில் இருப்பவன். எனக்கு நம்பிக்கையாகப் பட்டவன். அழகான கை எழுத்தில், கவிதைகளுமாக, பொய் எல்லாம் சேர்த்து ( நிறையப் பொய்கள்)  உணர்ச்சி பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு கற்பனையில் மிதந்தேன்.

மாலை வகுப்புக்கு வந்தவள் வழமை போலவே என்னைக் கண்டுகொள்ள வில்லை. வழமையாக நண்பனில் சிரிப்பவள் ஏனோ இன்று எதுவும் செய்யவில்லை.
வகுப்பு முடிந்த போது நண்பனிடம் கேட்டேன். " மச்சான் கடிதத்தைக் கொடுத்தனான் தாண்டா. ஆனால்......" என இழுத்தான். வற்புறுத்திய போது பாதகன் சொன்னான் " உன் பெயர வெட்டிப் போட்டு, என் பெயரப் போட்டுக் கொடுத்திட்டன், அவ இனிக் கதைக்க வேண்டாம் எண்டு சொல்லிவிட்டாள்" . " உன் கடிதத்தைப் படிச்ச போது ரொம்ப நல்லா இருந்தது, அவளை நானும் ரொம்ப நாளா காதலிக்கிறேன், அதால தாண்டா..."  என்று இன்னும் நீட்டினான். மனதுக்குள் அவனை மூன்று முறை அறைந்தேன். நிஜத்தில் அறைந்தால் திருப்பி அடித்து விடுவான். அவன் என்னை விடப் பலசாலி. ஆதலால் திட்ட மட்டுமே செய்தேன், ஆனாலும் உள்ளுக்குள் எனக்கு சின்ன சந்தோசம். இவனைப் பார்த்து அவள் சிரிக்கும் போது எனக்கு பொறாமையாகவும், எரிச்சலாகவும் இருக்கும். இனி அப்படி இருக்கப் போவதில்லை என்பதால் எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது.      
வகுப்பில் எப்போதோ வைக்கப்பட்ட கணிதப் பரீட்சையின் விடைத்தாள்களை அன்றொரு நாள் வாத்தியார் தரப் போவதாகச் சொன்னார்.
அவர் வெறுமனே தாள்களைத் தரமாட்டார். ஒவ்வொருவரினதும் புள்ளிகளைச் சொல்லி, அவரவரின் புள்ளிக் கேற்ப அவமானப் படுத்தி ஒரு கிழி கிழித்து விடுவார். 
அன்று அவளின் விடைத்தாள் வந்தபோது அவளிடம் நளினமாகச் சிரித்து, அவளைப் பாராட்டி, வேண்டுமென்றே அவள் கையைக் குலுக்கி,  தாளைக் கொடுத்தார். என்முறை வந்த போது அவரின் முகத்தைப் பார்க்க வேண்டும். இஞ்சி ஏதேனும் தின்றிருப்பாரோ என்னவோ என்று என்னை யோசிக்க வைக்கும் அளவிற்கு ஒரு பிடி பிடித்தார். 
வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள். நான் வழமையாகக் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. ( இதெல்லாம் நமக்கு சகஜமப்பா) 
ஆனால் அவளும் சிரித்தது என்னை ஏதோ செய்தது. ( அவனவன் ஒரு பாட்டிலேயே பணக்காரனாகிறான், நான் முன்னேற மாட்டேனா என்ன?)  

கடினப்பட்டு கணிதம் படித்தேன். ஒரே முறையில் முன்னேறாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இறுதியாக வகுப்பில் நடைபெற்ற பரீட்சையில் அவளுக்குச் சமனான புள்ளியைப் பெற்றேன். (இப்போது நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால், இறுதியில் ஆம் என்று ஒப்புக் கொள்வீர்கள்)
  
இப்படியே பரீட்சைகள் முடித்து,  உயர் தரத்திற்கு வந்தபோதும் நான் என் காதலைத் தொடர்ந்தேன். பாடசாலை முடிந்ததும் பேரூந்துத் தரிப் பிடத்தில் 
அவளுக்காக தினமும் காத்திருப்பேன். அவள் பெண்கள் கல்லூரியிலும் நான் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றோம். இரண்டுமே அருகருகே அமைந்திருந்தது எனக்கு வாய்ப்பாகிப் போனது. 

அவளிடம் நேராகப் பேச வேண்டும் என்று, தீர்கமாக முடிவெடுத்த ஒரு நன் நாளில் அவளுக்காகக் காத்திருந்த போது, அவள் என்னை நோக்கி வந்து, சிரித்து பக்கத்தில் நின்றாள். உங்களிடம் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன், அவள் இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் சிரிக்க ஆரம்பித் திருக்கிறாள். 
அவள் அருகில் வந்து நின்றவுடனேயே  நான் நடுங்க ஆரம்பித்து விட்டேன். என் இதயக் கதவில் யாரோ பலமாகத் தட்டிய சப்தம் அவளுக்கு கேட்டிருக்குமோ என்னவோ. மெது மெதுவாகச் சுதாகரித்துக் கொண்டு, எதிர் திசையில் பார்த்துக் கொண்டு நின்றவளின் பார்வைக்காக காத்திருந்தபோது, சடாரென திரும்பிப் பார்த்தாள். 

அப்போது தான் முதன் முதலில் அவள் பார்வையை அப்படி அருகாமையில் பார்த்தேன். அவளுக்கு அப்படியொரு காந்தக் கண்கள். இதற்குமுன் எந்தப் பெண்ணிலும் கண்டு சொக்கிப் போயிருக்காத பார்வை. என்னை நேராகப் பார்த்தாள். உண்மையான பார்வை. பார்வையை வேண்டுமென்றே விலத்தியவாறு சொன்னேன் " நான் உங்களை....."
முடிக்கும் முன்பே சிரித்தாள். அதில் கேலியும் கிண்டலும் கிலோ கணக்கில் இருந்தது எனக்கு சட்டெனப் பட்டது. எங்கே திட்டப் போகிறாளோ என நினைக்கும் போதே சொன்னாள் " தெரியும். ஆனால் எனக்கு படிப்புதான் முக்கியம், இனி இப்பிடி எண்ணத்தோட என்னோட  கதைக்காதீங்க. எனக்கு உங்களை ரொம்ப நாளாத் தெரியும் தான்,ஆனா அதுக்காக......" என அவள் முடிக்கும் முன்பே,  "  sorry" என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போய் விட்டேன்.

அதற்குப் பின் நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் சோகமாகவே பார்ப்பேன். அவளும் என்னைக் கண்டால் சிரிப்பதைத் தவிர்க்கவில்லை.
இப்படியே உயர்தரப் பரீட்சை, மேற்படிப்பு, வேலை என்று காலங்களும் விரைவாக உருண்டோடி இதோ இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். இடையில் அவளை பற்றி எந்தச் செய்தியும் இல்லை அல்லது கிடைக்கவில்லை. இப்போது உங்களுக்குச் சொல்லக் காரணம் அவளைப் பற்றி புதிதாகத் தெரிந்து வைத்திருக்கிறேன்.

மிகவும் நுணுக்கமாகத் தேடியதில் மூஞ்சைப் புத்தகத்தில் , அதாங்க Facebook இல் அவள் இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் அது. அவளைப் பற்றிப் படித்த போது அதிர்ந்துதான் போய்விட்டேன். அவள் மணம் முடித்தது நிச்சயமாய்  காரணம் அல்ல, ஆனால் யாரை முடித்திருக்கிறாள் தெரியுமா? அதுதான் காரணமும் கூட. இரண்டு நிமிட அவகாசம் தருகிறேன் சொல்லுங்கள் பாப்போம்? 

ம்ம்.... நிச்சயம் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் அவள் மணம் முடித்திருப்பது எங்கள் பழைய கணக்கு வாத்தியாரை, அதே அழகான இளைஞரைத்தான். 
எனக்கு அப்போதே அவர் மீது சந்தேகம் தான். ஆனால், வேறு என்ன செய்ய முடியும், ஒரு வாழ்த்தொன்றை அனுப்பி விட்டு வேறு வேலையில் மூழ்கிவிட்டேன். 

அது சரி, அவள் பெயரை உங்களுக்குச் சொன்னேனா? இல்லை தானே? சொல்லவும் மாட்டேன். பிறகு நீங்களும் மூஞ்சைப் புத்தகத்தில் அவளைத் தேடிப் பார்ப்பீர்கள்.  அவள் என்னை நண்பர்கள் பட்டியலில் இணைக்கவில்லை என்பதை மேலதிகமாகச் சொல்லி வைக்கிறேன்.
இறுதியில் ஒன்று சொல்லப் போவதாக நான் முன்பு சொல்லி இருந்தேனே ஞாபகமா?. அது என்ன தெரியுமா? வேறொன்றுமில்லை. நான் இப்போது உயர்கணித ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் மாலை வகுப்புக்கு அதிலும் பெண்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கிறார்கள். 
           அதிலும் ஒரு பெண் இருக்கிறாள் பாருங்கள், பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே என்னைத் துரு துரு என்று பார்க்கிறாள். சம்மந்தம் இல்லாமல் வேறு சிரிக்கிறாள். எனக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கும் போது அந்தப் பெண்ணைப் பார்த்தது போலான ஒரு மாயத் தோற்றம். அசப்பில் அவள் போலத்தான் இருக்கிறாள். கொஞ்சநாளாக மனசைக் குறு குறுக்க வேறு செய்கிறாள். ஆனால்..... ஆனால்.....
தயவுசெய்து நான் என்ன செய்யலாம் என்று யாராவது சொல்லுங்களேன்?..........

"என்னது?" 

"அதைத்தானா?"

"எதை?"

"எதையா?"
ஹி ஹி ஹி .........      

(முற்றும் அல்லது இதுவே தொடரலாம்..... ) 

Comments

Post a Comment

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி