10/07/2006
ஏமாற்றக் கொடியில்
காயப்போட்டது வாழ்க்கை...
காரணம் காதல்!
தலையணையைத் தான்
அடிக்கடி
அடிக்கடி
மாற்ற வேண்டியிருக்கிறது...
தினம் இரவுகளில்
அழுது தொலைப்பதால்...
கேலிப் பேச்சுக்களைத்தான்
தாங்க முடிவதில்லை...
தாங்க முடிவதில்லை...
நிலவினதும்,
காற்றில் ஓடும் சருகினதும்...
வீட்டுச் சுவரின்
எல்லா ஆணிகளிலும்
என்னைப் பற்றிய விமர்சனங்கள்.
எதிர் பார்த்த தோல்விகளூடு
நித்தம் நகர்கின்றேன்...
உன் முகவரி தேடி வரும்
வசந்தங்கள்
இப்போதெல்லாம்
என்னை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
தாமரை இலைமேல்
தண்ணீர் போல்
வாழ்ந்து முடிக்கச்
சபிக்கப் பட்டது...
உன்னால் தான்!
மௌனங்களையே
அதிகமாகப் பேச
பழக்கிக் கொடுத்து
வருகின்றேன்...
உதடுகளுக்கு.
பண்பைப் படித்து
பொறுமையை அறிந்திருந்தாலும்
நாகரீக உடையில்
நானொரு நடைப் பிணம்தான்...
நான் தான் முயலவில்லையோ
உன்னிடம் முடிவைக் கேட்க?
முயன்றிருக்கலாம்...
காற்றின் முயற்சிதானே
கத்தரீனா சூறாவளியும்?
இதற்கு மேல்
அவகாசம் எதற்கென்றா
தலையாட்டி பொம்மையாய்
இன்னொருவனுக்கு தலை சாய்த்தாய்?
.
.
.
Comments
Post a Comment