சிரிக்க வேண்டாம்
என்கிறாய்.
அழாமல் இருக்கப்
பார்க்கின்றேன்...
நானோ
தத்தி தத்தி
நடை பழகும்
சிறு குழந்தை.
நீ என் மழலைகளில்
சொக்கு கின்றாய்.
ஆனாலும் தாயல்ல!
மறந்து விட்டாய்.
நானும் ஆண் என்பதை
ஏனோ மறந்து விட்டாய்.
எல்லாம் சொல்லச்
சொல்கின்றாய்...
மறைத்தது
நிஜங்கள் தான் தோழி!
ஆனாலும் அசிங்கங்கள்.
உனக்காக செங்கம்பளம்
வைத்திருக்கிறேன்.
ஆனால்
சிறைக்குள் இருப்பதாய்
சொல்கின்றாய்.
பெண்ணே நீ
சித்திரம் கேட்கின்றாய்.
உன் கை விலங்கை
உடைக்க
இரும்புத் துண்டை
அனுப்பி வைத்தேன்.
நீ விடியலுக்காக
வானம் பார்க்கின்றாய்.
நான் உன்
கண்ணீர்த் துளிகளை
ஏந்துகின்றேன்.
முயற்சிக்கிறேன்.
நீ கேட்கும் சித்திரத்தை
வரைய முயற்சிக்கிறேன்...
உனக்காக
நட்சத்திரங்கள் வைத்திருக்கின்றேன்.
மாலையாக இட்டுக் கொள்.
எண்ணுகின்றேன்
கம்பிகளை.
உன் அன்பெனும்
மனச் சிறைக்குள்
நான்...
உன் கனவுகளை
யாரும் கவர்ந்திருக்கலாம்.
சொல் மீட்டுத் தருகிறேன்.
ஊமையாக்கப்பட்ட
இந்தக் கொலுசுகள்
உன்னுடையவை தானா?
நன்றாகச் சொல்
நான் உன் நண்பன் தானே?
காத்திருக்க வைக்கின்றாய்
நானென்ன கடனாளியா?
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
இருந்தும்
புரியாமல் தவிக்கின்றேன்...
நடந்தவை நல்லவையா
அல்லது
நடப்பவை நல்லதற்கா?
யாருமற்ற தூரத்தில்
சிறு ஒளி.
நான்
பெண்களை மதிப்பவன்.
உன் சின்ன விரலைத் தருவாயா?
ஒன்றாக நடந்துசெல்வோம்...
.
.
.
Comments
Post a Comment