காதலிக்கின்றேன்.
பிரிந்து சென்ற உன்னை
இன்னும் காதலிக்கின்றேன்.
வில்லன் யார்?
சமுதாயம் என்று பெயர்.
நீ நீயாகவும்,
நான் நானாகவும்
இருந்து தொலைத்திருக்கலாம்...
ஏன்
நீ நானாகவும்,
நான் நீயாகவும் ஆனோம்?
நம்மை
வீழ்த்திப் பார்த்ததில்
என்ன சுகம் கண்டதோ
இந்தக் காதல்?
காதல்...
ஒன்று கண்ணில் தோன்றி
கருவறை அடையும்.
மற்றயது கண்ணில் தோன்றி
கல்லறையில் முடியும்.
முன்னையது
போற்றப்பட்ட காதல்,
வரம் வாங்கி வந்த காதலர்கள்.
பின்னையது
தூற்றப்பட்ட காதல்,
சபிக்கப் பட்ட காதலர்கள்.
நாம் கூட
வரம் வாங்கியதால்
சபிக்கப் பட்டவர்கள்...
என் உயிரைத் தொட்ட
முதல் பெண் நீ.
உன் உணர்வைத் தொட்ட
முதல் ஆண் நான்.
என் தவறுகளைத்
தெரிய முன்பே
என்னைக் காதலித்தாய்...
தெரிந்த பின்
இன்னும் காதலித்தாய்.
ஒருவனுக்கு ஒருத்தி
அந்த ஒருத்திக்குள்
ஒரு தீ!
அதுவே காதல் என்பாய்.
உன்னை எனக்காய்
அர்ப்பணித்தாய்.
அதற்காகவே நானும்
ஆர்ப்பரித்தேன்...
நாம்
சேர்ந்து வாழ்வது பற்றி
என்னை விட அதிகம்
கனவுகள் சுமந்தவள் நீதான்.
நீ நாளை பற்றி
அதிகம் பேசினாய்.
நான் உன்னைப் பற்றி
அதிகம் யோசித்தேன்...
நாம் இருவரும்
சேர்ந்து வாழ வேண்டும்
என்பது மட்டும் தான் காதலா?
உன் உறவுகளுக்காய் நீயும்,
என் உறவுகளுக்காய் நானும்
பிரிந்து நின்று
சோகம் பகிர்கிறோமே
இதுவும் காதல் தான்...
உடலைச் சார்ந்த காதலாய்
இருந்திருந்தால்
ஓடிப் போயிருக்கலாம்...
இது
உயிரைச் சார்ந்தது அல்லவா?
என் இதயத்தை
எடுத்துக் கொண்டால்
எனக்கு வலிக்குமென்று,
உன் இதயத்தையும்
என் இதயத்தையும்
என்னிடமே விட்டுச் சென்றவள்
நீ!
இன்னும் நீ
என் இதயத்தில் தான்...
என்னைப் பிரிவதாய்
எவ்வளவு அழுதாய்.
நான் அழவில்லை!
கண்ணுக்குள் இருக்கும் நீ
கரைந்து விட மாட்டாயா?
நான் பொய் சொல்வதை
விரும்பாதவள் நீ.
எங்கேயும் பார்த்துக் கொண்டால்
நலத்தை மட்டும் விசாரிக்காதே!
.
.
.
Comments
Post a Comment