25/01/2004
பதினெட்டு வயதுப் பருவ மங்கை அவள்!
அழகுக்கெல்லாம் அழகு சேர்க்க
இப்பரந்த பூமியில் பிறந்த பதுமை...
பக்குவத்தை படித்து
ஒழுக்கத்தை ஆடையாக உடுப்பவள் ...
பௌர்ணமி நிலவு பகலில் வந்தால்
பொறாமைப்படும்
இவள் நிறத்தைக் கண்டு...
இரத்த நாளங்களை வெடிக்கச் செய்து
உயிரணுக்களை உறுஞ்சும் அட்டைகள்
அவள் பார்வைகள்...
தென்றல் காற்றில் ஹைக்கூ எழுதும்
இவள் கார் வண்ணக் கூந்தல்...
காற்றுக்குக் கடிவாளமிட்டு
கைதியாக்கும் சிரிப்பலைகளில்
சிதறிப்போகிறது என் உள்ளம்...
தேவதையின் செவ்விதழில்
புலம்பெயரத் தவம் கிடக்கிறது
அவளுக்காய் வளர்ந்த என் தாடியும்,
அதற்கண்மித்துள்ள பிரதேசங்களும்...
மெல்லச் சிறகடிக்கும்
வண்ணாத்துப் பூச்சி இமைகளுடன்
கொஞ்சி உறவாடத் துடிக்கிறது
துளிர் விட்ட என் மீசை...
கார்வட்டப் பொட்டை
கைது செய்த இடத்தில்,
எப்போது இடங்கிடைக்கும்
என தினந்துடிக்கும் - என் உதடுகள்...
கன்ன ஓரத்தில்,
காதிற்கருகில்...
சுருண்டு விழும் ஒரு சில முடிகளில்
சிக்கித் தவிக்கிறேன் - நான்...
தங்கத் தாமரை மொட்டான
இவள் மூக்கிலிருந்து
விடை பெறும் சுவாசங்களை
தேடித் பிடித்து சேகரிப்பதே
என் முழு நேர வேலை!
இவளைக் காணும் ஒவ்வொரு கணமும்...
புதிதாய்ப் பிறந்த மழலையாக,
குழைந்து,
நெழிந்து பின்
எங்கோ தொலைந்தே போகிறேன்...
.
.
.
//தொலைந்தே போகிறேன்...//
ReplyDeleteகவிதையுடனே... வாழ்த்துக்கள்
.