ஒரு மழைக்கால
மாலை வேளையில்
யன்னல் விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
என்னை நனைத்தது
கண்ணீருடன்
உன் ஞாபகம்...
நீ உன்னை எறிய
நான் சிதறி ஆகிப்போன
ஆயிரம் பிசுங்கான்களிலும்
நீயே சிரித்தாய்.
அழகான
அந்த விபத்தின் பெயர்
ஏனோ காதலாக இருந்தது...
காலங்கள் கழித்து,
" காதலை
சேர்த்து வைப்பதிலும்
பிரித்து வைப்பதில்
அப்படியென்ன
ஆனந்தம் கொள்கிறது பூமி? "
எனக்கேட்க வைத்தாய்.
எனக்குச் சந்தேகமெல்லாம்,
மெழுகுவர்த்தி மீதே
பாவம் கொள்ளும் நீயா
என் அழிதலையும்
சகிக்கப் பழகிக்கொண்டாய்?
முகாரியே!
நீ அறிய வாய்ப்பில்லை.
உன்னை உருவாக்க
என்னையே
துளையிட்டுக் கொண்ட
ஒரு புல்லாங்குழல் தான் நான்.
எனக்கும்
நிலவுக்கும் இடையிலான
செங்கம்பளப் பாதையில்
உன் காலடித் தடங்கள்
இன்னமும் அழியவில்லை.
மரண நீரோடையில்
ஒரு ஒற்றைப் படகிலே
என்னை
ஏற்றிச் செல்கிறது காதல்!
.
.
.
Comments
Post a Comment