24/04/2004
என் வாழ்க்கை வசந்தத்தில்
முட்களாய் பூத்தவளே!
உன் புன்னகைக்குள் ஏனடி
பூகம்பத்தை
ஒளித்து வைத்தாய்?
நெற்றியின் மீது
நினைவுகளால் சுட்டுச் செல்பவளே!
மரணத்தை ஏனடி
மகுடமாய் அணியச் சொல்கிறாய்?
தினம் ஒரு மரணம்,
தினம் ஒரு ஜனனமாய்...
பலப்பல விதங்களில் என்னை
பகிடிவதை பண்ணாதே!
உன்னாலே சிதறிப்போன
உள்ளத்தை
எங்கே போய் சேகரிக்க?
அப்படி என்ன
கேட்டு விட்டேன்?
என் சுவாசங்களை
தவற விட்டதால்
உன் மூச்சுக் காற்றில் கொஞ்சம்
முகரத்தானே கேட்டேன்?
என் கனாக்களில் உன்னைக் கண்டு
உன் கனவுகளில் எல்லாம்
என்னைத் தானே கேட்டேன்?
என் இதயத்தை உனக்குத்தந்து
உன் இதயத்தில்
இடம் ஒன்றைத்தானே கேட்டேன்?
அப்படி என்ன
கேட்டு விட்டேன்?
பார்க்க மறுக்கிறாய்.
பழக மறுக்கிறாய்.
சேர்க்க மறுக்கிறாய்.
சிரிக்க மறுக்கிறாய்...
இது என்ன-
தவணை முறையில் தண்டனையா?
அல்லது
பார்த்ததற்கான பரிசுகளா?
கனிந்த பின் ருசிப்பது
கனி ஒன்று தான்..
கசந்து பின் இனிப்பது
காதல் மட்டும் தான்...
கனிய மாட்டாயா?
இரவுகளில்
இம்சை செய்பவளே!
கனவுகள் உனக்குச் சம்மதம்...
காதல் ஏன் சம்மதமில்லை?
என்னைப் பிடித்திருக்கிறது...
காதலை ஏன் பிடிக்கவில்லை?
.
.
.
Comments
Post a Comment