07/02/2004
உப்புக் கரித்த உணர்வுகளில்
தேன் சுவையாய் வந்த பெண்ணே!
உன் நினைவுகளால்
இங்கே எனக்குத் தும்மல்கள்..
அங்கே உனக்கு?
எனக்காக நீயல்ல
உனக்காகவே நான்...
பிறந்து, வளர்ந்து, பரிதவிக்கின்றேன்!
நிர்வாணமாய்த் திரியும்
அந்தி நிலவு-
அதனிடம் தான்...
வலிகள் நிரம்பிய -
என் வாலிப இரவுகளை
சேமித்து வைத்திருக்கிறேன்...
உணரப்பட்டு உணரப்பட்டு
பழக்கப்பட்டவை தான் - உன்
தட்டிக்கழிப்புக்கள்,
கணக்கெடாமைகள்
இன்னும் இன்னும்...
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு தடவையும்...
என்னைக் கண்டுகொள்வாயா?
கண்ணசைப்பாயா - என
என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
எஞ்சுவதென்னவோ
உன் பரிகாசங்கள்,
எனக்கே உரிய ஏமாற்றங்கள்..
உன்னாலே
பட்டினியாய்க் கிடக்கும்
என் உள்ளத்திற்கு
பசிக்கிறது பெண்ணே!
பருகுவதற்கு -
உன் பார்வைகள் வேண்டும்..
புசிப்பதற்கு -
உன் புன்னகை வேண்டும்...
தருவாயா?
நலமாகத் தூங்கி
நாட்கள் பல பெண்ணே!
உன் நாணங்களை என் கண்கள்
பரிசாகக் கேட்கின்றன...
உன் பட்டு மனதில்
இடம் தரா விட்டாலும்
பரவாயில்லை...
உன் பாதச் சுவடுகளிலாவது
படுத்துக் கொள்ள இடம் ஒன்று தா?
கொஞ்ச நேரம் தூங்குகிறேன்...
வேண்டிய பொழுது
தட்டி எழுப்பி
வழமை போல கொல்!
.
.
.
Comments
Post a Comment