18/02/2005
எதையாவது எழுத நினைக்கையில்
விரற்சூட்டுக்குள் விழி பிதுங்குது பேனா...
என்னைத் திருப்திக்க
ஒற்றைக் காலிலே தவம் கிடக்கும்...
வெற்றுத் தாளுக்கும்
விசேட அரிதாரம் பூசும்...
புத்தம் புதிதில் நெஞ்சோரம்
நிமிர்ந்து நிற்பதும்...
தீர்ந்தவுடன்
தெருவோரம் தகர்ந்து கிடப்பதுமாய்
மனித வாழ்க்கைக்கு ஏதோ
மகத்துவமாய் சொல்கிறது...
உயர்ந்த ரகம் முதல்
சாதாரண ரகம் வரை
பல வகையில் பேனாக்கள் உண்டு.
இருந்தும்
அவை தமக்குள்
ஜாதி , மதம் பார்ப்பதில்லை...
வள்ளுவர் இருந்திருந்தால்
அதிகாரங்களில் ஒரு அதிகரிப்பு
புதிதாய் பேனா!
காதல் வந்துவிட்டால்
கவிதை விரலாய்ப் பேனா.
கை விரலுக்கும் கடதாசிக்கும்
மூன்று முடிச்சாய்ப் பேனா...
பிள்ளை முதல்
பில்கேட்ஸ் வரை
பிரதான சேவையாளன் பேனா...
எல்லோருக்கும் நண்பனானவன்
ஆனாலும்
அழிப்பானைத் தவிர இவனுக்கு
வேறு எதிரியில்லை...
கற்பனை ஊற்றுக்கு உருக் கொடுத்து
உயிர்த் தியாகம் செய்வதே அதன்
பிறவிப் பயன்...
இப்போதும் கூட
சிரித்துக் கொண்டே செதுக்குகிறது...
இன்னும் சில கணங்களில்
இறக்கப் போவதை அறிந்தும்...
.
.
.
சரிதாங்க... கவிதை நல்லாயிருக்குங்க... செதுக்கினதுபோலவே...
ReplyDelete