Skip to main content

தற்கொலை!

அது ஒரு சிறிய அறை. ஜன்னலைத் திறந்தால் அன்றி அங்கு வேறு வழியில் ஒளி ஊடுருவ முடியாத படி கட்டப்பட்ட அறை. முன்னர் எப்போதோ சுவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கங்கே தெரிகிறது. ரொம்பச் சின்னதாய் ஒரு மேசை. அதன் மேல் நீல வர்ணத்தில் ஒரு டயரி. யாரோ முன்பு மின் விசிறி பாவித்திருக்க வேண்டும். கூரையில் வளைக்கப்பட்ட இரும்பிக் கம்பி நீண்டு இருந்தது.
அறையின் மூலையில் ஒரு உருவம் குந்தி இருக்கிறது.
அது அவன் தான் . அது அவனே தான்.அவன் இங்கு இருக்கக் காரணம். அவன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்.

அன்று சனிக்கிழமை. சிகிச்சை நிலையத்தில் அன்று சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மாலை நான்கு மணியளவில் அவன் வந்தான்.
டாக்டர் வெளியே போய் இருந்தார். நான் அவரிடம் உதவியாளனாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில்... 
அதை விடுங்கள் நான் சொல்ல வந்த விடயமோ வேறு. 
உள்ளே வந்தவன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வந்து கதிரையில் அமர்ந்தான். 
தான் தற்கொலை செய்யப் போவதாக என்னிடம் சொன்னான். என்ன விளையாடுகிறாயா என்றேன். இல்லை என்றான் தீர்க்கமாக!.
     
எனக்கும் முதலில் ஆச்சரியமாகத் தான் இருந்தது. என்ன இவன் இப்படிச் சொல்கிறான். வந்தான், சாகப் போகிறேன் என்கிறான். சுவாரசியமான மனிதனாகப் பட்டான். டாக்டர் திட்ட மாட்டார். அவரின் சிறந்த மாணவன்  நான். ஒரு முறை முயன்று பார்ப்போம் என்று, மன நோயாளியாக இருப்பானோ என்கிற கோணத்தில் என் அறிவுக்குப் பட்ட வரையில் பல சோதனைகள் செய்தும் பார்த்தேன். அவன் மிகத் தெளிவாக இருக்கிறான். மனிதர்களை பற்றிப் படித்து வைத்திருக்கிறான். அவன் பேசுவதைக் கேட்டால் சாதாரண மானவர்களுக்கு வாழ்க்கை மீது வெறுப்பு வந்து விடும் அளவுக்குப் பேசுகிறான். அவன் பேச்சில் அழகான எந்த லயமும் இல்லை. ஏற்றமோ இறக்கமோ இல்லை. ஆனால் வலிமையான வார்த்தைகள். சமூகத்தைக் கேலி செய்யும் வார்த்தைகள். 
     
ஆனால் அவன் தற்கொலை செய்வதற்குச் சொன்ன காரணங்கள் எனக்கும் சரியாகத்தான் பட்டது.   ஒரு வேளை இந்த முடிவு அவனுக்கு விடுதலையை கொடுக்கக் கூடும்.

அவனுக்காக சிரிக்க யாரு இருந்ததில்லை. இனி அவனுக்காக அழவும் யாரும் இருக்கப் போவதில்லை. தனக்காக ஒரு குறைந்த பட்ச தேவதை காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அடியோடு மறுக்கிறான். இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் நிஜத்தில் தோற்பவன் எப்போதும் தோற்றுக்கொண்டே தான் இருப்பான். வெல்பவர்கள் அவனை ஏறி மிதித்து விட்டுச் சென்று கொண்டே இருப்பார்கள் என்பான்.
அது உண்மை தான். சிக்மன் பிராய்டு சொன்னதைப் போல நம் எல்லோருக்குள்ளேயும் தோற்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த ஆசை இவனிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

இதுவரை தன்னை யாருமே முழுதாகப் புரிந்து கொண்டதேயில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னான் . மெல்லிய சோகத்தை எப்போதுமே அவன் கண்களில் பார்க்கலாம். வயதில் இருபதுகளில் மத்தியில் இருக்கும் அவன் தோற்றத்திலோ, உயரத்திலோ அன்றி அழகிலோ சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறான். நீங்கள் சொல்வது கேட்கிறது. அவன் தாழ்வு மனப்பான்மையாலும் பாதிக்கப் பட்டிருக்கிறான். மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தான் இப்படி இல்லையே என்று கவலைப் படுபவன். அதனால் தான் இந்த சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழ்கிறான். என்னிடம் கூட ஒருமுறை கேட்டிருக்கிறான் "நீங்க நல்ல கலர் என்ன? என்னைப் பாருங்க எவ்வளவு கறுப்பாக இருக்கிறேன் என்று..."

சிந்தித்துப் பார்த்தால் நாம் எல்லோரும் மன நோயாளிகள் தான். சிவப்பான தோலை  கொண்டவர்களுக்கு இந்த சமூகத்தால் தரப்படும் முக்கியத் துவத்தை கறுப்பான தோலை உடையவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. நம் மனம் அவ்வாறு இசைவாக்கம் அடைந்திருக்கிறது. சிவப்புத் தோலை உடையவர்கள் சமூகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களாகவும், கறுப்பானவர்கள் அவர்களுக்குள் கீழே வேலை  செய்பவர்களாகவும் அல்லது படிக்காதவர் களாகவுமே நம் மனம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

கையிலிருந்த, பையிலிருந்த நான்கைந்து டயரிகளை என் முன்னே கொண்டு வந்து வைத்தான். புரட்டிப் பார்த்தேன். அத்தனையும் அழகான கை எழுத்தில் வரி வரியான வசனங்கள். சிலது ரசிக்கும் படியாக இருந்தது. பெரும் பாலானவை காதலை கருப்பொருளாகக் கொண்டது. நிச்சயம் பெண்கள் ரசிப்பார்கள். தன்னுடைய சொந்தக் கவிதைகள் என்றான். 
காதல் கவிஞனாக  உருவாகக் கூடிய அத்தனை ஆரம்பங்களும் சரியாகவே இருக்கிறது அவனுக்கு. ரசிக்கும் படியாக வேறு இருக்கிறது. நல்லதொரு தட்டிக் கொடுக்கக் கூடிய கைகள் இருந்தால், அவன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்கிற எண்ணத்தோடு அவனிடம் கேட்டேன் "வீட்டில் உன் எழுத்தை யாரும் ஆதரிப்பதில்லையா?"     
நிமிர்ந்து என்னை ஒருமுறை பார்த்தான். அந்தப் பார்வையில், கோபமும், இயலாமையும், அழுகையும் கலந்திருந்தது.
" வீட்டிலேயே என்னை நிராகரிக்கிறார்கள். எதற்கும் தகுதியற்றவனாம். சொந்தக்காரர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள். மட்டம் தட்டு கிறார்கள்.  அனுதாபப் பார்வை பார்க்கிறார்கள். நான் சொல்வதைத் திருபு படுத்துகிறார்கள். செய்யாத தப்புக்குப் பலிக்கடாவாக்கப் பட்டிருக்கிறேன். என்னுடைய அமைதியை அவர்கள் ஆணவம் என்கிறார்கள். அதனாலேயே  யார் வம்புக்கும் போகாமல் நான் உண்டு என் வேலை உண்டு என இருக்கிறேன். திறமையிருந்தும் அதற்கான சரியான ஆதரவு கிடைக்க விட்டால் அதைப் போல கொடுமை இந்த உலகத்தில் எதுவும் இல்லை. களி மண்ணாக இருந்தால் மட்டும் சிலையாகி விட முடியாது. அதற்குத் தகுதியான கைகளிடம் போய்ச் சேர வேண்டும் இல்லையா?  ஏதோ என்னுடைய போதாத நேரம்..."
எதற்கோ என்னில் கேலியாகச் சிரித்தான். கண்கள் மட்டும் அழுதன.
       
வாழ்க்கையை ரொம்ப சலித்துக் கொள்கிறான். என்ன செய்வது?. ஆசைப்பட்ட எதுவுமே  நடக்காமல் விட்டால் யாருக்குத் தான் வாழ்க்கையில் பற்று இருக்கும்?
அவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? ரோட்டில் பார்ப்போர் எல்லோருமே எதிரிகளாகப் பட்டால் எப்படி இருக்கும். வாழ ஆசை வருமா? தொடர்ந்து வாழ்க்கையில் தோற்றுக் கொண்டிருக்கும் ஒருவனின் அதிக பட்ச விருப்பு என்னவாக இருந்து விடப் போகிறது?
தனிமை என்பது கொடுமையான விடயம் தான். தனித்து யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஒற்றைக் கை தட்டி ஓசை வராது தானே?
வாழ்க்கையும் அப்படிதான். யாருமே இல்லை என்கிற நிலையில் யாருக்காக அவன் வாழவேண்டும்? எதற்காக அவன் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டும்? 
சாதாரண மனிதன் எனும் வகையில் அவன் முடிவுக்கு உடன் பட்டேன்.
வாழ்க்கையைத் தீர்மானிப்பது எப்படி தனி மனித சுதந்திரமோ அப்படித் தான் அவன் முடிவைத் தீர்மானிப்பதும். அவனைப் பொறுத்த வரை அவன் எடுத்த முடிவு அவனுக்குச் சரியாகப்  பட்டிருக்கிறது.  

அது ஒரு சிறிய அறை. ஜன்னலைத் திறந்தால் அன்றி அங்கு வேறு வழியில் ஒளி ஊடுருவ முடியாத படி கட்டப்பட்ட அறை. முன்னர் எப்போதோ சுவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கங்கே தெரிகிறது ...................................................................................................................................
............................. அது அவன் தான் . அது அவனே தான். அவன் இங்கு இருக்கக் காரணம். அவன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான். தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். 
எனக்கு அவன் முடிவில் முழுச் சம்மதம்.
உங்களுக்கு......?
.
.
.   









Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...